முகப்பொலிவுக்கு எந்தப் பொருளும் அவசியமே இல்லை – ப்ரியதர்ஷினி ஸ்கின்கேர் டிப்ஸ்!
குழந்தை நட்சத்திரமாய் திரைப்படத்தில் அறிமுகமாகி பிறகு தொகுப்பாளினியாகப் பல வருடங்கள் பணியாற்றி, சின்னத்திரையில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தவர் பிரியதர்ஷினி. நிகழ்ச்சி தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று பலரின் பாராட்டுகளை சம்பாதித்திருக்கிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்துகொண்ட சரும பராமரிப்பு வழிமுறைகள் நிச்சயம் பலருக்கு உபயோகமாக இருக்கும்.
“சரும பராமரிப்பில் முதல் விதிமுறையே, நாள் முழுவதும் நாம் போட்டு இருக்கும் மேக்-அப்பை முதலில் அகற்றுவதுதான். அதனை இரண்டு விதமான க்ளென்சரை கொண்டு அகற்றலாம். ஒன்று எண்ணெய் பேஸ்டு மற்றொன்று க்ரீம் பேஸ்டு. நாம் என்ன விதமான மேக்-அப் போட்டிருக்கிறோமோ அதற்கேற்றபடி க்ளென்சரை தேர்ந்தெடுத்து அகற்றவேண்டும். அதேபோல நம் சருமத்திற்கு எது ஏற்றது என்பதையும் பார்த்துத்தான் தேர்வு செய்யவேண்டும்.
இரவு தூங்கப்போறதுக்கு முன்பு, ஏதாவது சரும பராமரிப்பு பொருள்களை உபயோகித்துத்தான் ஆகவேண்டுமா என்று கேட்டால், அப்படியெல்லாம் தேவையே இல்லை. நன்கு முகத்தைக் கழுவிய பிறகு எந்தவித சரும பராமரிப்புப் பொருள்களையும் பயன்படுத்தாமல் இருப்பதுதான் சிறந்த ஸ்கின்கேர் ரொட்டின். ஆனால், அதனை வருடம் முழுவதும் பின்பற்ற முடியுமா என்றால் முடியாதுதான். அதனால்தான் நைட் க்ரீம் தேவைப்படுகிறது. உங்கள் சருமத்திற்கு ஏற்ற எந்த க்ரீமாக இருந்தாலும் பரவாயில்லை. பக்க விளைவுகள் எதுவுமில்லாமல் இருப்பது அவசியம்.
கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள், அண்டர் ஐ க்ரீம் பயன்படுத்துவார்கள். அதுவே சின்ன பாக்ஸில்தான் தருவார்கள். சீக்கிரமாகக் கருவளையம் போக வேண்டும் என்பதற்காக நிறைய எடுத்துப் பயன்படுத்துவார்கள். ஆனால், அண்டர் ஐ க்ரீமை மிகவும் சிறிய அளவிற்கு மட்டும்தான் உபயோகப்படுத்தவேண்டும். அப்போதுதான் அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும்.
இந்த க்ரீமை எல்லாம் இரண்டு நாள்களுக்குப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இரண்டு நாள்களுக்கு எதையும் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. எப்போதுமே மேக்-அப் போடுவதற்கு சில நிமிடங்கள் முன்பே மாய்ஸ்ச்சரைசர், சீரம் உள்ளிட்டவற்றைப் போட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இடையே நேரம் கொடுப்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் அந்தப் பொருள்கள் நன்கு சருமத்தில் படரும். அதேபோல பருக்கள் வந்தால் எந்தவிதமான ஸ்ட்ரெஸும் எடுத்துக்கொள்ளாதீர்கள். அது வந்த வழியிலேயே சென்றுவிடும். அதற்காக எதுவும் பெரிதாகப் பண்ணவேண்டாம்”