சளி, இருமலை அடித்து விரட்டும் கற்பூரவல்லி இஞ்சி டீ…
கற்பூரவல்லி அல்லது ஓமம் என்று அழைக்கப்படும் இந்த அற்புத செடி மிகச் சிறந்தது மூலிகை பண்புகளை கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் பூ தொட்டியில் வளர்க்கப்டுகிறது. இவற்றின் இலைச் சாற்றுடன் சிறிது சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சீதள இருமல் தீரும். உடல் சூட்டை தணிக்கவும், தலைவலிக்கு தீர்வு அளிக்கவும் இவை உதவுகிறது.
கற்பூரவல்லி இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து , 2 மி.லி சாருடன் 8 மி.லி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
தசைச் சுருக்கம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவி வந்தால், வந்த நோய்கள் பறந்து போகும்.
இப்படி ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள கற்பூரவல்லியுடன் இஞ்சி கலந்த தேநீர் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
கற்பூரவல்லி இஞ்சி தேநீர் – தேவையான பொருட்கள் :
டீத்தூள் – ஒரு டீஸ்பூன்,
கற்பூரவல்லி – 5 இலை,
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்.
தேன் – 1 டீஸ்பூன்.
கற்பூரவல்லி இஞ்சி தேநீர் செய்முறை :
முதலில் கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு, இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
அதன்பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது டீத்தூளுடன், கற்பூரவல்லி இலை, இஞ்சி துருவல் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
இவையனைத்தும் நன்றாக கொதித்து டீ ரெடியானதும், அவற்றை இறக்கி வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது, நீங்கள் எதிர்பார்த்த கற்பூரவல்லி இஞ்சி டீ ரெடியாக இருக்கும். அவற்றை நீங்கள் ஒரு டம்ளருக்கு மாற்றி பருகி மகிழவும்.