முருகப்பெருமானுக்கு மயில் வாகனமாக வந்தது எப்படி?

முருகப்பெருமானுக்கு மயில் வாகனமாக வந்தது எப்படி?

மு என்றால் முகுந்தன் என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். ரு என்றால் ருத்ரன் என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். க என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான பிரம்மாவைக் குறிக்கும். மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் "முருக" என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாக நமக்கு வந்து சேரும் என்பது ஐதீகம்.முருகப்பெருமானுக்குரிய வாகனம் மயில் ஆகும். மயில் அழகில் சிறந்தது மட்டுமல்ல, அமைதியிலும் சாதுவான பறவை ஆகும். முருகனின் வாகனமான மயில் சாதாரண பறவை அல்ல. அது வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய ஞானப்பறவை ஆகும்.எனவே, முருகப்பெருமானுக்கு மயில் வாகனமாக வந்தது எப்படி? முருகனின் மயில் வாகனம் உணர்த்தும் தத்துவம் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.மயில் வாகனம் எப்படி?சூரபத்மனுக்கு எதிரான போரின் போது அன்னை பார்வதி முருகனுக்கு சக்தி மிகுந்த வேலாயுதத்தைக் கொடுத்தார். போரின் போது, முருகன் முதலில் சூரபத்மனின் மகன் பானுகோபன், சிங்கமுகா சூரன், பின் தலைமை அமைச்சர் தருமகோபன் மற்றும் அவனது 3000 மக்களும் முருகனின் வேலால் வீழ்த்தப்பட்டனர்.இறுதியில் நின்றது சூரபத்மன் தான். இவன் முருகனுடன் மாய போர் புரிந்தான். முருகனின் வேலில் இருந்து தப்பிப்பதற்கு பல மாயங்களைப் புரிந்து தப்பி வந்தான். அப்போது திருச்செந்தூரின் அருகில் உள்ள மரப்பாடு என்னும் மாந்தோப்பில் மாமரமாக இருந்த சூரபத்மனை முருகனின் வேல் இரண்டாக பிளந்து அழித்தது. பின் அந்த இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறியது. முருகப்பெருமான் மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் மாற்றி தன் அருகிலேயே வைத்துக் கொண்டார்.முருகனின் மயில் வாகனம் உணர்த்தும் தத்துவம்..!மயில் தன்னுடைய தோகையை விரித்து ஆடினால் மழை பொழிந்து உலகம் செழிக்கும் என்பது நம்பிக்கை. மழை வரப்போவதை முன்கூட்டியே அறியும் திறன் கொண்டது மயில். உலகம் செழிப்பதை சொல்லும் மயில், தோகை விரிக்கும் போது அனைத்தும் இறைவனே என்பதை விளக்கும் "ஓம்" வடிவம் தோன்றும்.மயில் தோகை விரித்து ஆடுகையில், நம் கவனம் அதனுடைய அழகில் மயங்கி, உண்மையான நீல நிறம் புலப்படுவதில்லை. அதே போல் மனிதன் புற அழகினில் மயங்கி, எல்லையற்றதாகிய, தன்னுள் உறையும் ஆத்மா எனும் இறைவனை உணர முடிவதில்லை.தன்னுடைய உடல், மனம், புத்தியினால் ஏற்பட்டிருக்கும் அகந்தையை அகற்றி, நீல நிறமான மயில் மேல் முருகன் செல்வதைப் போல, தன் புற அழகினிலிருந்து கவனத்தை உட்திருப்பினால் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்கிற தத்துவத்தினை உணர்த்துவதே மயில் வாகனம்.மயிலிறகால் தீப்புண்களுக்கு மருந்திடுவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் தீயால் ஏற்பட்ட காயங்கள் விரைவில் குணமடையும். தீய சக்திகளை விரட்டும் சக்தி இந்த மயில் தோகைக்கு உண்டு.மயிலின் குரல் உயிர்கள் அனைத்திற்கும் ஏதேனும் ஒரு குறை உண்டு... என்பதை நமக்கு புரியவைக்கும். இப்படி அழகுக்கு மட்டுமின்றி வாழ்வியல் தத்துவங்களையும் கடவுளின் வாகனமாக இருந்து நமக்கு உணர்த்துகிறது.

🟦🌿🟦🌿🟦🌿🟦🌿🟦🌿🟦🌿