பெரும்பாலான தாவர உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளை வழங்குகின்றன. அதில் சில சூப்பர் உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. மோரிங்கா ஒலீஃபெரா என்றும் அழைக்கப்படும் முருங்கைக்காய், பொதுவாக சாம்பரில் பயன்படுத்தப்படுகிறது. ‘அதிசய மரம்’, ‘வாழ்க்கை மரம்’, , ‘மனிதனுக்கு கடவுலளித்த பரிசு’ ‘ஏழைகளின் பாதுகாவலன்’ போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
முருங்கை மரத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. அதன் வெவ்வேறு தாவரப் பகுதிகளில் முக்கியமான தாதுக்கள் உள்ளன. புரதங்கள், வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் இரசாயனக் கலவையான பீட்டா கரோட்டின், பினோலிக் சேர்மங்களை கொண்டுள்ளது.
முருங்கை தாவரத்தின் வேர்கள், இலைகள், பூக்கள், பழங்கள், விதைகள் போன்ற பல்வேறு பகுதிகளும் இதய நோய், கல்லீரல் பாதுகாப்பு, புற்று நோய், அழற்சி எதிர்ப்பு, ஆன்டி பைரெடிக்,நீரிழிவு போன்ற நோய்களுக்கு பாதுகாப்பாக அமைகிறது. தெற்காசியா பாரம்பரிய மருத்துவ முறைகளில் வெவ்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் இமயமலை வடக்கு பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட முருங்கை மரவகை ( மோரிங்கா ஒலீஃபெரா) உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. அதன் விதைகளும் காய்களும் காய்கறியாக உண்ணப்படுகின்றன. தென் இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலும் காணப்படுகிறது. தாய்லாந்து, தாய்வானிலும் பயிராகிறது
உலகின் சில பகுதிகளில் முக்கிய உணவு ஆதாரமாக முருங்கை விளங்குகிறது. மலிவான விலையில் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், அதிக ஊட்டச்சத்து நிறைந்ததாககவும் இருப்பதால் இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது பயன்படுத்தப்படுகிறது.
முருங்கையில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் ஏ, சி மற்றும் டி, அத்தியாவசிய அமினோ அமிலங்கள், ஃபைபர் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளான ß- கரோட்டின் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. நாட்டுப்புற மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு முருங்கை முக்கிய பங்கு வகுக்கிறது. இரண்டாம் வகை நீரிழிவு நோய் பாதிப்பைக் கொண்ட 30 முதல் 60 வயதுக்குட்பட்ட நோயாளிகளுக்கு முருங்கை இலையால் ஏற்படும் இரத்தச் சர்க்கரைக் குறைவு விளைவை ஆய்வு செய்யப்பட்டது. 2010ம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 40 நாள் காலப்பகுதியில் இரத்த சர்க்கரை அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
லிப்பிட் அளவின் தாக்கத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர், மேலும் கெட்ட கொழுப்பின் அளவுகளில் கணிசமான குறைப்பு இருப்பதாகவும், நல்ல கொழுப்பில் (எச்.டி.எல்) குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.