குளிர்காலத்தில் எலும்புகளை பாதுகாக்கும் 5 உணவுகள்...
குளிர்காலத்தில் இருக்கும் நமது உடலின் வெப்ப நிலை நிச்சயமாக குறைவாகத்தான் இருக்கும். இதனால் நம்முடைய தசைகள் இறுக்கமடைந்து விடுகின்றன. மூட்டுகளும் மந்தமாகி விடுவதால் மூட்டு வலி பிரச்சினையும் தலைதூக்குகிறது. எனவே, இந்த தருணத்தில் தசைகளுக்கும், மூட்டுக்கும் வலு தரும் உணவுகளை தெரிவு செய்து உண்ணுதல் அவசியமான ஒன்றாகும்.

அப்படி, இந்த குளிர் காலத்தில் நீங்கள் கண்டிப்பாக உட்கொள்ளவேண்டிய 5 உணவுகளை இங்கு பரிந்துரை செய்துள்ளோம். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

நெய்

நெய்யில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை நமது மூட்டு மந்தத்தை குறைக்கவும், மூட்டுகளில் ஏற்படும் உராய்வு மற்றும் வீக்கத்தை தணிக்கவும் உதவுகின்றன.

தினை வகைகள்

தினை வகைகளில் ஏராளமான சத்துக்களை நிரம்பியுள்ளன. இவற்றில் காணப்படும் நார்ச்சத்து, அமினோ அமிலம் மற்றும் குர்செடின் சேர்மம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டதாக உள்ளது. மேலும், மூட்டு வலியை குறைத்து உடலை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்க உதவுகிறது.

தினை வகைகளில் குறிப்பாக ராகியை நம்முடைய உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என உணவுவியல் நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஏனென்றால், இவற்றில் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளதால், அவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்ல தீர்வு தருகிறது.

நட்ஸ் வகைகள்

பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிகமாக உள்ளன. நல்ல அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள இவை மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும், குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருப்பதை உறுதி செய்கிறது.

பச்சை இலை காய்கறிகள்

குளிர்காலத்தில் எளிதாகக் கிடைக்கக்கூடிய காய்கறி வகைகளில் பச்சை இலைக் காய்கறிகளுக்கு முக்கிய இடம் உண்டு. இவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. மேலும், இவற்றில் சல்போராபேன் உள்ளது. இது எலும்பு தொடர்பான பிரச்சினைகளை தடுக்கக்கூடியதாக உள்ளது. பச்சை இலை காய்கறிகளை அதிகம் எண்ணெய் சேர்க்காமல் சமைப்பது நல்லது. சூப்பாக தயாரித்தும் உட்கொள்ளலாம். அது எளிதில் உடலில் உறிஞ்சப்படும்.

எலும்பு சூப்

ஆடு, கோழி போன்ற இறைச்சிகளில் இருந்து கிடைக்கும் எலும்பு பகுதிகளை வேக வைத்து சூப்பாக தயாரித்து பருகி வரலாம். மேலும், எலும்பு சூப்பில் தாதுக்கள், குளுக்கோசமைன் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மூட்டு வலிக்கும் நல்ல நிவாரணம் தருகிறது.

இஞ்சி – பூண்டு

மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் கிருமி நாசினியாக இஞ்சி – பூண்டு உள்ளது. இவற்றில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் அதிகம். எனவே, இவை நமக்கு ஏரளமான நன்மைகளைத் தருகின்றன.

இந்த அற்புதமான இஞ்சி – பூண்டு விழுதாக அரைத்து நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சியை டீ-யாகவும் பருகி வரலாம்.