தொப்பை குறைய இது பெஸ்ட்… சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் ஆளி விதை...
கொட்டைகள் மற்றும் விதைகளுடன், பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய ஆரோக்கியமான உணவு, சிறந்த உடல் எடையை பராமரிக்க உதவியாக இருக்கும். அத்துடன் கொட்டைகள் மற்றும் விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும் செரிமானம், இதய ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு உதவுகின்றன. அதில் ஒன்று தான் ஆளி விதை.

ஆளி விதை சாதரண மளிகை கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து இடங்களிலும் கிடைக்கின்றன.

ஆறு மாதங்களுக்கு தினமும் 30 கிராம் ஆளிவிதைகளை உட்கொள்வதால், டயஸ்டாலிக் மற்றும் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் கணிசமாக குறைகிறது.

ஆளி விதைகளை உணவில் சேர்ப்பது எளிது- நீங்கள் அதை வேகவைத்த உணவுகள், ஓட்ஸ், தானியங்கள், ஸ்மூத்திஸ் அல்லது யோகர்ட் ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம். மேலும், ரொட்டி (அ) பூரிக்கு மாவு பிசையும் போது, அதில் சிறுது ஆளி விதை தூளையும்  சேர்க்கலாம்.

ஆளி விதையில், புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பியுள்ளது.  

ஆளி விதைகளை உட்கொள்வது ஏன் சிறந்தது?

* ஆளி விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது, இது செரிமான செயல்பாட்டின் போது உணவை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதனால் நாள் முழுவதும் நிறைவாக உணர்வீர்கள். கரையாத நார்ச்சத்து நல்ல குடல் பாக்டீரியாவை மேம்படுத்த உதவுகிறது, இது செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது மற்றும் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.

* ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. ஆளிவிதைகளில் மாவுச்சத்து மற்றும் சர்க்கரை குறைவாக இருப்பதால் கலோரிகள் அதிகம் இல்லை. அவற்றை தொடர்ந்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

* லிக்னான் என்று அழைக்கப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆளிவிதைகளில் ஏராளமாக உள்ளன. அவை உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுப்படுத்தவும், வயதாவதை மெதுவாக்கவும் உதவுகின்றன. அவற்றில் உள்ள லிக்னான்கள், அதிகளவு ஈஸ்ட்ரோஜனை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இது சீரான ஹார்மோன் அளவை பராமரிக்கவும் உதவுகிறது.

ஆளி விதையில் ஒரு ஆரோக்கியமான உடனடி காலை உணவு தயார் செய்ய தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்:

    20 கிராம் – ஓட்ஸ்
    35 கிராம் – தயிர்
    20 மில்லி – தண்ணீர்
    3 கிராம் – பாதாம்
    3 கிராம் – வால்நட்
    2 கிராம் – கருப்பு திராட்சை
    2 கிராம் – சூரியகாந்தி விதைகள்
    2 கிராம் – பூசணி விதை
    2 கிராம் – பேரீட்சை
    1 கிராம் – சியா விதைகள்
    1 கிராம் – ஆளி விதைகள்

செய்முறை

*ஓட்ஸ், தயிர் மற்றும் தண்ணீரை ஒன்றாக சேர்த்து, நன்றாக மிக்ஸ் ஆகும்  வரை கிளறவும்.

* மேலே குறிப்பிட்ட அனைத்து கொட்டைகள், உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகளின் கலவையுடன் டாப் அப் செய்யவும்.

இதேபோல் ஆளிவிதையில் மில்க் ஷேக்-கும் செய்யலாம். அதற்கு தேவையான பொருட்கள் இதோ!

    ஆளிவிதைப் பொடி – 2 டீஸ்பூன்
    வாழைப்பழம் – 2 துண்டுகள்
    தேங்காய் பால் – 1 கப்
    ஸ்ட்ராபெர்ரி – 1 கப்
    தேன் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒரு மிக்சி கிரைண்டரில் சேர்த்து நன்றாக மில்க் ஷேக் பதத்துக்கு  அரைக்கவும். பிறகு, அதை ஒரு கிளாஸில் மாற்றி, பருகலாம். இதை ஃப்ரிட்ஜில் வைத்தும் குடிக்கலாம்.

குறிப்பு:

ஆளிவிதை நார்ச்சத்து மிகுந்த உணவு. அதனால் கொஞ்சமாக தான் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும் நீங்கள் ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரையின் பேரில் ஆளி விதைகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. மேலும் கர்ப்ப காலங்களின் தொடக்கத்தில் ஆளி விதைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.