கண்களை ஜொலிக்க வைக்கும் ஆரஞ்சு !
சோர்வு நீங்க : தினமும் தூங்குவதற்கு முன்பு சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும்.

கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை கண்களில் தடவி வாருங்கள். கண்கள் பிரகாசமாய் இருக்கும். கண்ணாடி தொடர்ந்து அணிவதால் உண்டாகும் தழும்பையும் சோற்றுக் கற்றாழை மறைத்துவிடும்.

கருவளையம்: சருமத்தின் எல்லா இடங்களிலும் இருக்கும் ஹைப்போ டெர்மிஸ் எனும் தோல் அடுக்கு கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகக் குறைவு. அதனால் மிகவும் லேசான சருமமாக இருக்கும். இதனால்தான் எளிதில் பாதிக்க்கப்படுகிறது. தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்ப்யூட்டர், டி.வி. முன் அதிக நேரம் இருப்பது என கருவளையங்களுக்கான காரணங்கள் பல.

இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரியாக்கலாம். குறைந்தது ஏழு மணி நேரமாவது தூங்க வேண்டும். பகல் நேரத்தில் உள்ளங் கைகளைக் குவித்து கண்களின் மேல் வைத்து மூடியபடி அடிக்கடி செய்யலாம். கண்களை வேகமாக மூடித் திறப்பது போலச் செய்வது, அதற்கு ஒருவித மசாஜ் மாதிரி அமையும்.

கண்களில் உள்ள சுருக்கங்களை போக்க : விட்டமின் ஈ எண்ணெயை கொண்டு மசாஜ் செய்யுங்கள். ஐஸ் கட்டியை ஒரு துணியில் மூடி, அதனைக் கொண்டு கண்களில் மசாஜ் செய்தால், சுருக்கங்கள் ஒரே வாரத்தில் ஓடிவிடும்.

கண்கள் பளீரென ஜொலிக்க : ஆரஞ்சு ஜூஸை ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச்சென்று ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.