தலைவலி குறைய மருத்துவம்
 1. மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

2. கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

3. வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

4. செண்பக இலையை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவ வேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால் வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

5. மிளகாய், மிளகு ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வரவேண்டும். எவ்விதமான தலைவலியும் குறையும்.

6. வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.

 7. கீழாநெல்லி, உத்தாமணி, குப்பைமேனி ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில் நசியமிட தலைவலி குறையும்.

8.  தர்ப்பூசணி விதைகள் மற்றும் வெட்டிவேர் இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பிறகு சம அளவு இரண்டு பொடியையும் எடுத்து கலந்து 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

9.  சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். மூன்றையும் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து சிறிதளவு எடுத்து நெற்றியின் இரண்டு பக்கத்திலும் தடவி பற்று போட்டு சிறிது நேரம் கழித்து வெந்நீரால் கழுவி வந்தால் தலைபாரம், அஜீரண தலைவலி ஆகியவை குறையும்.

10.  தலைவலி ஏற்படும் நேரத்தில் சிறிது மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவி வந்தால் தலைவலி குறையும்.

11.  மஞ்சள், பூண்டு இரண்டையும் தாய்ப்பால் விட்டு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி குறையும்.

12.  அவுரி இலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நசுக்கி வடிகட்டி தலைக்கு தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.

13. 10 கிராம் அளவு சுக்கை எடுத்து தோல் நீக்கி இடித்து கொள்ளவும். சம அளவு கருந்துளசி எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் அரை லிட்டர் தூய நீர் விட்டு பின் கொதிக்க வைத்து கொதி வந்ததும் சுக்கு தூளையும், கருந்துளசியையும் போட்டு மூடி வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து இறக்கி தாங்கும் அளவு இளஞ்சூட்டுடன் முகத்தை காலை, மாலை 3 நாட்கள் கழுவி வந்தால் தலைக்கனம் குறையும்.

14.  ஒரு டம்ளர் பாலை எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கலந்து நன்கு சூடுப்படுத்தி வெது வெதுப்பான சூட்டில் உடனே குடித்து வந்தால் தலைவலி குறையும்.

15.  கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

16. சுக்கு தூளை தாய்ப்பால் விட்டு நன்றாக குழைத்து நெற்றி பொட்டில் சிறிது பூசி வந்தால் தலைவலி குறையும்.  தாய்ப்பால் கிடைக்காமல் போனால் பசும்பால் பயன்படுத்தலாம். இருப்பினும் தாய்ப்பால் மிகவும் சிறந்தது.

17.  கீழாநெல்லி இலை, வேலிப்பருத்தி இலை, குப்பைமேனி இலை ஆகியவற்றை பிழிந்து சம அளவு சாறு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஓயாத தலைவலி, சளி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு ஆகியவை குறையும்.

18.  மகிழம் இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து தலைவலி ஏற்படும் போது இந்த பொடியை மூக்கால் முகர்ந்து பார்த்து வந்தால் தலைவலி குறையும்.

19.  கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

20.  வேப்பம் பிண்ணாக்கை எடுத்து சுட்டு மூக்கில் உறிஞ்சி வந்தால் தலைபாரம் குறையும்.

21.  திருநீற்றுபச்சிலையை எடுத்து முகர்ந்து வந்தால் தலைவலி குறையும்.

22. கொடிவேலி வேர்ப்ப‌ட்டையை அரைத்து ப‌சும்பாலில் 21 நாள்க‌ள் சாப்பிட்டு வ‌ந்தால் த‌லைப்பாரம் குறையும்.

23.  குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

24. சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். இதனுடன் நில ஆவாரை, கடுக்காய் தோல் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 1 லிட்டர் தூய நீர் விட்டு சுமார் 300 மி.லி அளவுக்கு சுண்டியதும் இறக்கி விடவும். காலை 5 மணி அளவில் 100 மி.லி கஷாயத்தை மட்டும் வடிகட்டி குடித்து சிறிது வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும். மலச்சிக்கலால் ஏற்படும் தலைவலி குறையும்.

25.  கண்வலிப்பூ செடியின் கிழங்கை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வேப்பெண்ணெயில் காய்ச்சி கிழங்குகள் மிதக்கும் போது எண்ணெயை எடுத்து ஆற விட்டு தலைவலி, கழுத்து வலி ஏற்படும் போது இந்த எண்ணெயை தடவி வந்தால் வலி குறையும்.

26.  ஐயம்பனா இலைகளை  ஆமணக்கு எண்ணெயில் வாட்டி முன் நெற்றியில் வைத்து வந்தால் தலைவலி குறையும்.

27.  டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

28.  சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய சுக்கை நன்றாக இடித்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தூய நீர் விட்டு கொதிக்க விட்டு சுக்கு தூளை கொட்டி மூடி 5 நிமிடங்கள் கழித்து கற்பூரத்தை போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த சுக்கு நீரை இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை காலை, மாலை என தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும்.

29. சிவப்பு சந்தனத்தை எடுத்து தேன் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும். அதிக காய்ச்சல் காரணமாக ஏற்படும் தலைவலி குறையும்.

30.  ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்து நெருப்பின் மேல் வைத்து சூடு ஏறியவுடன் அதன் மேல் எலுமிச்சை பழச்சாற்றை விட்டு, வேறோரு இரும்பு துண்டினால் அந்த சாற்றை உரைத்து அதை எடுத்து பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.