திருவிளக்கு பூஜையின் பலனும் சிறப்பும்

திருவிளக்கு பூஜையின் பலனும் சிறப்பும்

இந்து சமயத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமானதான இடத்தைப் பிடித்துள்ளது.

எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்தில் எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடாகும். ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபட்டனர். இந்த முறையே தற்போது தீப வழிபாடாக மாறியிருக்கிறது. விளக்கு வழிபாடு சுற்றுப்புறத்தில் இருக்கும் இருளை அகற்றுவதோடு நம் மனதின் இருளையும் அகற்றுகிறது. வீட்டின் வாசலை மெழுகி மாக்கோலம் இட்டு அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, பின் அதனை வீட்டு பூஜையறையில் வைத்தால் அவ்விளக்குடன் மகாலட்சுமியும் நம் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம். தற்போது பெண்கள் குழுவாக சேர்ந்து கோயில்களில் விளக்கு வழிபாடு செய்வது பிரபலமடைந்து வருகிறது. இந்த விளக்கு வழிபாட்டால், பல ஹோமங்களை நடத்துவதால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விளக்கை ஏற்றி வழிபடாதவர்கள் அவ்விளக்கு அணைந்து விடாமல் பாதுகாக்கவாவது செய்யலாம்.
விளக்குபூஜை எப்போது ?
பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்கள் வேறுபடுகின்றன
சித்திரை - தானிய வளம் உண்டாகும்.
வைகாசி - செல்வம் செழிக்கும்.
ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும்.
ஆடி - ஆயுள்பலம் கூடும்.
ஆவணி - புத்தித்தடை நீங்கும்
புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும்
ஐப்பசி - நோய்கள் நீங்கும்
கார்த்திகை - நற்பேறு கிட்டும்
மார்கழி - ஆரோக்கியம் கூடும்.
தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
மாசி - துன்பங்கள் நீங்கும்.
பங்குனி - தர்மசிந்தனை வளரும்.
விளக்கு பூஜையின்போது கவனிக்கவேண்டியவை
* விளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும். பூஜைக்கு உடைந்த, கீறல் விழுந்த விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. திரி ஏற்றியபின்பு விளக்கு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு பூமாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்டலாம். சுடரில் இருந்து பத்தி, சூடத்தை கண்டிப்பாக கொளுத்தக் கூடாது.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு பக்கம் பார்த்து வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்குகளை தீக்குச்சியால் நேராக பற்ற வைக்காமல் துணைவிளக்கின் உதவியோடு மட்டுமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை எல்லோரும் சேர்ந்து ஒரே மாதிரியான குரலில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
ராஜயோகம் தரும் வழிபாடு
வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாக எரிந்ததால் அது அணையும் நிலையில் மிகக்குறைவான சுடருடன் எரிந்தது. அவ்விளக்கில் இருந்த நெய்யை உண்பதற்காக ஒரு எலி தீபத்தை நோக்கி தாவியது. அப்போது எலி தன்னை அறியாமலேயே திரியை தூண்டிவிட்டது. இந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தி மன்னனாக பிறந்தது. வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தால் மோட்சமும் அடைந்தது. தெரியாமல் திரியை தூண்டிவிட்டதற்கே ஒரு எலிக்கு ராஜயோகம் கிடைத்தது என்றால் நாம் இறைவனை எண்ணி ஏற்றும் விளக்கிற்கு என்ன பலன் கிடைக்கும்.
ஐந்து முக விளக்குகள் ஏன் ?
நாம் வாழும் உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலும் ஐம்பொறிகளால்தான் இயங்குகிறது. பெண்கள் வைத்திருக்க வேண்டிய நற்குணங்களும் ஐந்து. இவ்வாறு, ஐந்து என்ற எண் நம் வாழ்க்கையில் பிரதானமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் விதமாகத்தான் குத்து விளக்கை ஐந்து திரியுடன் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டது.

எதற்காக எட்டு?

திருவிளக்கு பூஜைக்கு பயன்படும் குத்துவிளக்கின் மீது எட்டு இடங்களில் பொட்டு வைக்கவேண்டும் என்பது நியதி. இதற்கு காரணம் இருக்கிறது. உச்சியில் ஒன்று, அதற்கு கீழ் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுகள், அதனையடுத்து கைகளாக கருதி இரண்டு மற்றும் திருவடியில் ஒன்று என பொட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குபூஜை பரிபூரணமானதாய் இருக்கும் என்பதாக ஐதீகம்.
பூஜைக்கு தயாராவோம்!

முதலில் பூஜை செய்யும் இடத்தை மெழுகியும், விளக்கை நன்கு துலக்கியும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை செய்வதற்கு முன்பு அவ்விடத்தில் தலைவாழை இலையை விரித்து, அதில் முனை முறியாத அரிசியை (அட்சதை) பரப்பி, அதன் மீது விளக்கை வைத்து சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து மலர்களாக அலங்கரிக்க வேண்டும். பின்பு துணை விளக்கினால் திரியை ஏற்ற வேண்டும். எச்செயலைச் செய்யும் முன்பும் விநாயகரை வழிபடவேண்டும் என்பதால் மஞ்சளில் சிறிய விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையில் வைத்து அவரையும் அலங்கரிக்க வேண்டும். பின்பு பூஜைக்கு தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, விளக்கை வணங்கி விட்டு அமரவேண்டும். பின் ஓம் ஒளிர்வளர் விளக்கே போற்றி என்று சொல்லிக்கொண்டே திரியை ஏற்ற வேண்டும். பின் தொடர்ந்து அம்பாள் துதிப்பாடல்களை பாடியபடி பூஜையை துவங்கிவிடலாம்.

திரிகளும், பயன்களும்
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.

விளக்கு பூஜைக்கான விதிகள்

* திருவிளக்கு பூஜைக்கு எவர்சில்வர் விளக்குகள் உகந்தது அல்ல என்பதால் பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* பூஜையின்போது, தலைவாழை இலை மீது குத்து விளக்கை வைக்க வேண்டும். இதனால் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும் என்பதாக ஐதீகம்.
* விளக்கின்மீது எட்டு இடங்களில் சந்தனம், குங்குமப்பொட்டு வைக்க வேண்டும்.
* ஒரு திரி கொளுத்துவதனால் கிழக்கு முகமாக மட்டுமே கொளுத்த வேண்டும்.
* கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் அணைக்கலாம்.
விளக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள்
விளக்கு பூஜைக்கு தயாராகும் முன்பு கீழ்கண்ட பொருட்களை முன்னதாகவே தயாராக வைத்துக்கொள்ளுங்கள். திருவிளக்கு, தேவையான எண்ணெய், சாம்பிராணி, கற்பூரம், கோலமிடுவதற்கு பச்சரிசி மாவு, வாழை இலை, சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, மாலை, அட்சதை அரிசி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கிழங்கு, நைவேத்திய பொருட்கள், துணை விளக்கு, தீர்த்த பாத்திரம், தாம்பாளம் மற்றும் அமர்ந்து கொள்வதற்கு சிறிய விரிப்பு.
கணபதி பாடல்
விளக்கு துதிப்பாடல் பாடுவதற்கு முன்பு மஞ்சளால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரை கீழ்க்கண்ட பாடலைப்பாடி பூஜை செய்ய வேண்டும்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துப் போற்றுகின்றேனே.
எண்ணெயும் பலன்களும்
குத்துவிளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கேற்ப பலன்களும் மாறுபடுகிறது. சுடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது.
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும்.
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
திருவிளக்கில் எத்தனை பொட்டு வைப்பது?
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன..