மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்...
மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், இது தனது ‘இலக்கை’ எப்போது அடையும் என்பது குறித்த கேள்விகள் தற்போது எழுப்பப்படுகின்றன.
இந்த இடஒதுக்கீடு 2023இல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அது எப்போது நடைமுறைக்கு வரும்? 2024ஆம் ஆண்டிலா, 2029ஆம் ஆண்டிலா, 2034ஆம் ஆண்டிலா அல்லது அதற்கும் பின்னரா?
விடை தெரியாத நிச்சயமற்ற இந்த நிலைக்கு காரணம் ‘எல்லை நிர்ணயம்’ (தொகுதி மறு சீரமைப்பு).
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கும் போது இந்தக் கேள்வி ஏன் என்று சந்தேகம் எழலாம். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்த பொதுத் தேர்தலுக்கு பிறகு புதிய மக்களவை உறுப்பினர்கள் அவைக்கு வரும்போது 33 சதவீத பெண் பிரதிநிதிகள் இருப்பார்கள் என்பதுதான் பொதுவான புரிதலாக உள்ளது. பிறகு ஏன் நிச்சயமற்ற நிலை?
இதற்குக் காரணம், முன்மொழியப்பட்ட மசோதாவில் உள்ள ஒரு பகுதிதான். அதில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்ட பின்னரே மசோதாவில் உள்ள மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும்?
மசோதாவில், இடஒதுக்கீடு தொடர்பாக “...அரசமைப்பு (128வது திருத்தம்) சட்டம் 2023-க்கு பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் புள்ளிவிவரங்களுக்குப் பிறகு, எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும். அதன் பின்னர் 15 ஆண்டுகளுக்கு அவை காலாவதி ஆகாது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இட ஒதுக்கீட்டை ஆதரித்தாலும், மறுபுறம் அரசை விமர்சித்து வருகின்றன. ஏனெனில் மசோதாவில் கூறப்பட்டுள்ளவாறு 33 சதவீத இடஒதுக்கீடு எந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பெண்களுக்கு இது கிடைக்கும் என்பது தொடர்பாக யாரிடமும் சரியான பதில் இல்லை.
மசோதா தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் பேசும்போது, “நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். கடந்த 13 ஆண்டுகளாக இந்த அரசியல் பொறுப்புக்காக இந்தியப் பெண்கள் காத்திருக்கிறார்கள்.
இப்போது இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்கும்படி அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எத்தனை ஆண்டுகளுக்கு? இரண்டு ஆண்டுகளா? நான்கு ஆண்டுகளா? ஆறு ஆண்டுகளா? அல்லது எட்டு ஆண்டுகளா?” என்று கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது மற்ற எதிர்க்கட்சி எம்பிக்களும் இதே கேள்வியை எதிரொலித்தனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பதற்கும் தொகுதி மறு சீரமைப்பு எப்போது செய்யப்படும் என்பதற்கும் எந்தக் காலக்கெடுவும் இல்லை.