ஒ.பன்னீர்செல்வம், மன்சூர் அலிகான் இருவரும் பலாப்பழம் சின்னத்தில் போட்டி...
மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கும் அதே பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் ஏப்ரல் 19-ந் தேதி முதல் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கடந்த மார்ச் 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
மார்ச் 27-ந்’ தேதி வரை நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் 39 தொகுதிகளில் 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 1085 வேட்புமனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்புமனுக்களை வாபஸ் பெறும் தேதி இன்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு தற்போது மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னமும், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கப்படாமலும் உள்ளது.
மேலும், தி.மு.க.கூட்டணியில் உள்ள ம.தி.மு.கவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அவருக்கு போட்டியாக ஒ.பன்னீர்செல்வம் பெயரில் 6 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 5 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருடன் போட்டியிடும் மற்றொரு ஒ.பன்னீர்செல்வமும் இதே பலாப்பழம் சின்னம் கேட்டதால், தேர்தல் விஷ்ணுசந்திரன் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீசெல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்தை வழங்கினார்.
அதேபோல் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிடும், நடிகர் மன்சூர் அலிகானுக்கும், தேர்தல் ஆணையம் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் தனித்தனி தொகுதியில் போட்டியிடும் இரு வேட்பாளர்களுக்கு ஒரே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தகக்து.
இதில் இரட்டை இலை சின்னத்ததை முடக்க வேண்டும் என்றும் தனக்கு வாளி சின்னத்தை கொடுக்க வேண்டும் என்றும் ஒ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் வாளி சின்னத்தை 4 பேர் கேட்டதால், குலுக்கல் முறையில் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது.