முதல் வெற்றியை ருசித்த பாகிஸ்தான் - உலகக் கோப்பை கிரிக்கெட் 2023
ஹைதராபாத்தில் இன்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வரிசை பேட்டர்களான பக்கர் ஜமான்(12), இமாம் உல் ஹக்(15), பாபர் ஆசம்(5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் நடுவரிசை பேட்டர்களான ரிஸ்வான்(68), சஹீல்(68) இருவரும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை மீட்டெடுத்தனர். கீழ்வரிசையில் முகமது நவாஸ்(39), சதாப்கான்(32) குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தனர். நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நெதர்லாந்து அணி 287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. மேக்ஸ், ஆக்கர்மேன் விக்கெட்டை தொடக்கத்திலேயே இழந்தாலும், 2வது விக்கெட்டுக்கு விக்ரம், பாஸ் டி லீட் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
பாகிஸ்தான் செய்த தவறுகள் என்ன?
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம் ஆகியோர் புதிய பந்தை எதிர்கொள்வதில் சிரமப்பட்டு, பவர்ப்ளே ஓவருக்குள் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது ரன்ரேட் உயர்வுக்கு மிகப்பெரிய பிரேக் போட்டது. இதில் ஒரு பேட்டர் நிலைத்து நின்றிருந்தாலும் பாகிஸ்தான் ஸ்கோர் 350 ரன்களை தொட்டிருக்கும்.
பாகிஸ்தானில் நடுவரிசை பேட்டர்கள் வலுவாக பாட்னர்ஷிப் அமைத்த அளவுக்கு கடைசி வரிசை பேட்டர்கள் நிலைக்கவில்லை. ஒருவேளை நிலைத்து பேட் செய்திருந்தால் ஸ்கோர் 300 ரன்களை எட்டியிருக்கும், வெற்றிக்குப் பின் நிகர ரன்ரேட் உயர்ந்திருக்கும்.
அதேபோல பந்துவீச்சில் நெதர்லாந்தின் 3வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறினர். பந்துவீச்சு முறையில் எந்த நுணுக்கத்தையும் பயன்படுத்தாமல் அஃப்ரிடி, ஹேரிஸ் ராஃப், ஹசன் அலி வழக்கமான முறையில் வீசினர்.
யார்கராக சில பந்துகளை வீசவோ அல்லது, ஸ்விங் செய்யவோ, அல்லது லைன் லென்த்தை மாற்றி வீசவோ தவறினர். அவ்வாறு சிந்தித்திருந்தால், 3வது விக்கெட் ஜோடியை விரைவாகவே பிரித்திருக்கலாம்.
விக்ரம், பாஸ் டி லீட் விக்கெட் வீழ்த்திய பின்பு ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. அதுவரை ஆட்டம் சுவற்றில் நின்ற பூனையாகவே இருந்தது. ஷதாப் கான், முகமது நவாஸ் ரன்களை கட்டுப்படுத்தும் வகையில் பந்து வீசினாலும் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் எடுக்கும் விக்கெட் டேக்கராக இந்தப் போட்டியில் ஒளிரவில்லை.
நெதர்லாந்து அணியின் ஆமை வேக ஆட்டம்
இருவரும் களத்தில் இருந்தவரை ஆட்டம் பாகிஸ்தான் கையில் இல்லை. விக்ரம் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர்.
பாஸ் டி லீட் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரின் பங்களிப்பு மட்டுமே பெரிதாக இருந்தது. கீழ்வரிசை பேட்டடர்கள் பெரிதாக எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை.
ரன்ரேட்டை வேகப்படுத்தாதது, ஆமை வேக ஆட்டம், விக்கெட்டுகளுக்கு இடையே ரன்களை சேர்க்காதது நெதர்லாந்து தோல்விக்கு காரணமாக அமைந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹேரிஸ் ராப் 3 விக்கெட்டுகளையும், ஹசன்அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை ருசித்துள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் ஆடுகளத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ரன் குவிப்பு 288. வெற்றி பெறுவதற்கான ரன் சராசரி 322.
ஹைதராபாத் நகரில் நடந்த இந்தப் போட்டியில் 300 ரன்கள் வரை குவிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் போட்டியின் தொடக்கத்தில் குறிப்பிட்டார். முதல் இன்னிங்ஸ் இறுதியில் பாகிஸ்தான் 286 ரன்களை குவித்தது.
கடந்த 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியைப் போல மீண்டும் உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக ஊடகத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
அதோடு, 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு முழுமையான ரவுண்ட் ராபின் முறையில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடப்பதும் அதற்கு முக்கியமான காரணம்.
பெருமளவு காலியாக உள்ள இருக்கைகள்
உலகக் கோப்பை தொடக்கப் போட்டி நடந்த ஆமதாபாத் மைதானத்தில் இருக்கைகள் காலியாக இருந்தது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்தது.
ஹைதராபாத் மைதானத்திலும் பாகிஸ்தான் - நெதர்லாந்து போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் அவ்வளவாக ஆர்வம்காட்டவில்லை. பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருக்கின்றன.
ஏற்கெனவே ஹைதராபாத் மைதானம் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் குறைகூறியிருந்தனர்.