நாம் தமிழர் கட்சி காவல் நிலையத்தில் புகார்... நடிகை விஜயலெட்சுமி மீது...
நாம் தமிழர் கட்சி காவல் நிலையத்தில் புகார்... நடிகை விஜயலெட்சுமி மீது...
தற்கொலை மிரட்டல் எதிரொலி; நடிகை விஜயலெட்சுமி மீது நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார்
சீமானையும் நாம் தமிழர் கட்சியினரையும் வீடியோ வெளியிட்டு மிரட்டி வருவதாக நடிகை விஜயலட்சுமி மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, தற்போது பெங்களூருவில் வசித்து வரும் முன்னாள் நடிகையான விஜயலெட்சுமி, எங்கள் கட்சி தலைவர் சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு உண்மைக்கு மாறான பொய்யான குற்றச்சாட்டுகளோடு ஒரு புகார் கொடுத்து, பின்னிட்டுக் கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்சொன்ன புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இந்தநிலையில், விஜயலெட்சுமி 12 ஆண்டுகளுக்குப் பிறகு, எங்கள் கட்சி மற்றும் கட்சி தலைவருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் வீரலெட்சுமி என்ற பெண்ணும் கூட்டுச்சதியில் ஈடுபட்டு, விஜயலெட்சுமியைத் தூண்டிவிட்டு, அவருக்கு உதவிகள் செய்து, சீமான் மீது முந்தைய புகாரில் இல்லாததும், கூடுதல் பொய்யான குற்றச்சாட்டுகளோடு பொய்யான ஒரு புகாரை கடந்த 28.08.2023 இல் காவல் ஆணையரிடம் விஜயலெட்சுமி கொடுத்துள்ளார்.
சீமானிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும். அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டுமென்ற கெட்ட நோக்கங்களோடு கடந்த ஒரு மாத காலமாகச் செயல்பட்டு வந்த நிலையில், விஜயலெட்சுமி திட்டம் நிறைவேறாததை அறிந்து, மேற்சொன்ன புகாரைக் கடந்த 15.09.2023 இல் மீண்டும் விஜயலெட்சுமி திரும்பப் பெற்றுக் கொண்டு பெங்களூரு சென்றுவிட்டார்.
தற்போது விஜயலெட்சுமி கடந்த 2011 இல் கொடுத்த வழக்கு மற்றும் 28.08.2023 இல் கொடுத்த புகார் மனு ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில், சீமானை ஏதேனும் வகையில் மிரட்டி, பணம் பறிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் விஜயலெட்சுமி 22.09.2023 ஆம் தேதி சமூக வலைதளங்களில், நீர் மற்றும் உணவு எதுவும் அருந்தாமல் தானும், தன் அக்காவும் உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாகவும், தன் அக்காவையும் தன்னுடன் அழைத்துச் செல்லப்போவதாகவும், அதற்கு சீமானும் அவரது கட்சியுமே காரணம் என்று காணொளிப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்துள்ளார்.
விஜயலெட்சுமி அவரது வாழ்க்கையில் கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் பல நபர் மீது அவதூறு குற்றச்சாட்டுகளைக் கூறி, தற்கொலை செய்துக்கொள்வேன் என்று மிரட்டி, பல முறை தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இந்தநிலையில் பொய்யான குற்றச்சாட்டுகளோடு அவதூறுகளையும் பரப்பி, தானும் தன் அக்காவும் உயிரை மாய்த்துக்கொள்வோம் என்று சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும் காணொளி வாயிலாக மிரட்டல் விடுத்து வருகிறார். ஆகவே மேற்சொன்ன விஜயலெட்சுமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.