உலகக் கோப்பை 2023 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது. உலகக் கோப்பை தொடரில் 5-வத் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் 5 முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற தெம்புடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ரன் மெஷின் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் இன்றைய போட்டியில் ஆடவில்லை. இதனால், இஷான் கிஷன் தொடக்க ஆட்டக் காரராக களம் இறங்க உள்ளார்.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் நல்ல ஃபார்மில் இருக்கிறது. பேட்டிங்கில் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேனும், பந்து வீச்சில் ஹேசில்வுட், சீன் அப்போட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா என பலம் மிக்க அணியாக உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே இதுவரை 149 ஒரு நாள் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 83 போட்டிகளிலும், இந்தியா 56 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இன்றைய போட்டிக்கான இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளின் வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி வீரர்கள்:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகம்து சிராஜ்
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:
கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் ஆடம் ஜம்பா.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சரியாக மதியம் 1:32 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா பேட்டிங்
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் எடுத்திருந்தபோது, மூன்றாவது ஓவரை வீசிய பும்ரா பந்தில் மிட்செல் மார்ஷ் கோலியிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இவரை அடுத்து, ஸ்மித் பேட்டிங் செய்ய வந்தார். மூன்றாவது ஓவரிலேயே விக்கெட் விழுந்ததால், வார்னரும் ஸ்மித்தும் நிதானமாக விளையாடினர்.
ஆஸ்திரேலிய அணி 74 ரன் எடுத்திருந்தபோது, 41 ரன் எடுத்திருந்த வார்னர் 16-வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து, லபுஷேன் பேட்டிங் செய்ய வந்தார். ஸ்மித்தும் லபுஷேனும் நிதானமாக விளையாடினார்கள்.
ஆஸ்திரேலியா 27.1 ஓவரில் 110 ரன் எடுத்திருந்தபோது, 71 பந்துகளில் 47 ரன் எடுத்திருந்த ஸ்மித், ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதையடுத்து, கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்ய வந்தார். இந்த ஜோடி விரைவிலேயே பிரிந்தது. ஆஸ்திரேலிய அணி29.4 ஓவரில் 119 ரன் எடுத்திருந்தபோது, 2 லபுஷேன் 41 பந்துகளில் 27 ரன் எடுத்திருந்த நிலையில், கே.எல். ராகுல் பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த அலெக்ஸ் கேரி மேக்ஸ்வெல் உடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 29.4 ஓவரில் ஆஸ்திரேலியா 119 ரன்கள் எடுத்திருந்தபோது அலெக்ஸ் கேரி 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ரவீந்திர ஜடேஜா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
இவரையடுத்து, கேமரான் கிரீன் பேட்டிங் செய்ய வந்தார். இந்த ஜோடியும் தாக்குப்பிடிக்கவில்லை. 35.05 ஓவரில் ஆஸ்திரேல்யா 140 ரன் எடுத்திருந்த நிலையில், கிளென் மேக்ஸ்வெல் 15 ரன் எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.
இவரையடுத்து, பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்ய மைதானத்துக்கு வந்தார். ஆஸ்திரேலியா அணி 42.02 ஓவரில் 165 ரன் எடுத்திருந்தபோது, 24 பந்துகளில் 15 ரன் எடுத்திருந்த பேட் கம்மின்ஸ் பும்ரா பந்தில் ஷ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய ஆடம் ஜாம்பா சிறிது நேரம் கம்பெனி கொடுக்க, ஸ்டார்க் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். இருப்பினும் ஜாம்பா 6 ரன்களில் அவுட் ஆனார். அவர் பாண்டியா பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ஹேசல்வுட் 1 ரன் எடுத்திருந்தப்போது ஆஸ்திரேலியா அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஸ்டார்க் 35 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். அவர் சிராஜ் பந்தில் ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்களையும், பும்ரா மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்களையும், சிராஜ், பாண்டியா மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். எக்ஸ்ட்ராக்கள் மூலம் இரண்டு ரன்கள் கிடைத்த நிலையில், முதல் ஓவரின் 4 ஆவது பந்தில் இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். அவர் ஸ்டார்க் பந்தில் கிரீனிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்ததாக விராட் கோலி களமிறங்கிய நிலையில், ரோகித் சர்மா 2 ஒவரின் 3 ஆவது பந்தில் டக் அவுட் ஆனார். ஹேசல்வுட் அவரை எல்.பி.டபுள்யூ ஆக்கினார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அதே ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட் ஆனார். அவர் ஹேசல்வுட் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்தார்.
இதனால் இந்திய அணி 2 ஓவர்களில் 2 ரன்கள் மட்டும் எடுத்து 3 விக்கெட்களை இழந்தது. அடுத்ததாக கே.எல்.ராகுல் களமிறங்கியுள்ளார்.
விராட் கோலி மற்றும் ராகுல் இருவரும் விக்கெட் சரிவை தடுக்கும் வகையில் மிகவும் நிதானமாக விளையாடினர். இருவரும் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தனர்.
தொடக்க சரிவிற்கு பிறகு விக்கெட் வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலியா பவுலர்கள் திணறினர். சிறப்பாக ஆடிவந்த கோலி மற்றும் ராகுல் அரை சதம் அடித்து அசத்தினர். இந்திய அணி 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.
கோலி – ராகுல் ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிவந்த கோலி 85 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அவர் ஹேசல்வுட் பந்தில் லபுசனேவிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்து களமிறங்கிய பாண்டியா 11 ரன்கள் எடுத்திருந்தப்போது இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் 97 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசல்வுட் 3 விக்கெட்களையும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.