சனிதோஷம் நீக்கும் ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர்...
🔯சனிதோஷம் நீக்கும் ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர்
🔯சனி தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்வது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயில்.
இங்கு இருக்கும் ஸ்ரீஆஞ்சநேய சுவாமி, சுயம்பு ஆஞ்சநேயராக சுமார் 11 அடி உயரம் கொண்டு காட்சியளித்து வருகிறார்.
கடந்த 1489-ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் இந்தக் கோயிலைப் புதுப்பித்ததாக ஆலயக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயிலின் வரலாறு மெய்சிலிர்க்க வைப்பதாகும்.
🔯 சீதாதேவியை சிறை வைத்த ராவணன் மீது ராமபிரானும், அவரது தம்பி லட்சுமணனும் இலங்காபுரியில் நடத்திய கடும் போரில் லட்சுமணன் மயக்கமடைந்தார்.
ஆஞ்சநேயர், லட்சுமணனின் மயக்கத்தைத் தெளிய வைக்க அரிய வகை மூலிகை கொண்ட சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்து கொண்டிருந்தார்.
இதைத் தடுக்க ராவணனின் குல குருவான சுக்ராச்சாரியார் சனிபகவானை அனுப்பி அனுமனைப் பிடிக்குமாறு ராவணனுக்கு யோசனை கூறுகிறார்.
ஒன்பது படிகள் கொண்ட அரியாசனத்தில் ஒன்பது கோள்களையும் படிகளாக்கி அரசாட்சி புரிந்து வந்த ராவணன், சனீஸ்வரனை அழைத்து "சஞ்சீவி மலையுடன் இலங்காபுரி நோக்கி வந்து கொண்டிருக்கும் ஆஞ்சநேயரைத் தடுக்கும்படி' உத்தரவிட்டான்.
ஆனால் ஆஞ்சநேயர் சனீஸ்வரனைச் சுற்றி வளைத்து, தனது கையில் உள்ள சஞ்சீவி மலையை சனீஸ்வரனின் தலைமீது வைத்தார்.
சஞ்சீவி மலையின் பாரம் தாங்க முடியாமல் சனீஸ்வரன் துடித்தார். தன்னை மன்னித்து விடும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடினார்.
ஆஞ்சநேயர் சனீஸ்வரனைப் பார்த்து "உங்களை மன்னிக்க வேண்டுமானால் ஒரு நிபந்தனை. அதாவது பகவான் ஸ்ரீராமனின் நாமத்தைக் கூறியபடி என்னை தரிசித்து வழிபடும் எந்த ஒரு பக்தனையும் உங்கள் பார்வையால் துன்புறுத்தக் கூடாது.
இதற்கு சம்மதித்தால் உங்களை விடுவிக்கிறேன்' என சனீஸ்வரனிடம் கூறினார்.
சனீஸ்வரனும் ஆஞ்சநேயரின் நிபந்தனைக்கு சம்மதித்தார். இதையடுத்து, ஆஞ்சநேயர் சனீஸ்வரனை விடுவித்தார்.
அவ்வாறு சனீஸ்வரனை தன் திருவடிகளால் மிதித்து ஆணவத்தை அழித்த புண்ணியத் தலம்தான் ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் கோயில் என்று தல வரலாறு கூறுகிறது.
🔯இந்து சமய அறநிலையத்துறை இக்கோயிலை நிர்வகிக்கிறது. ஆஞ்சநேயர் தனது காலால் சனீஸ்வரனை மிதித்த அருட்காட்சி அளித்து வரும் ஒரே தலம் இதுவாகும்.
அவரது வலது திருக்கால் பூமியில் இருந்து சற்றே தூக்கியுள்ளது. சனிபகவான் ஆஞ்சநேயரின் இடது திருப்பாதத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.
சனி பகவானின் முகம் யாரையும் நோக்காமல் பூமியை நோக்கி உள்ளது.
🔯ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி, புரட்டாசி மாத சனிக்கிழமை, சித்ரா பெளர்ணமி போன்ற நாள்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
🔯 இக்கோயிலில் உள்ள ஸ்ரீசீதாராம அனுமன் பக்தசபையினர் அனைத்து விழாக்காலங்களிலும் முன்னின்று திருப்பணிகளைச் செய்து வருகின்றனர்.
🔯கோயில் நடை திறப்பு:
வழக்கமான நாள்களில் காலை 6.30 மணிக்கு கோயில் திறக்கப்படும். மதியம் 12 மணி வரை வழிபாடுகள் நடைபெறும்.
மாலை 4.30 மணிக்கு கோயில் திறந்து இரவு 8 மணி வரை பூஜைகள் நடைபெறும்.
🔯 சனிக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
🔯ஆம்பூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் ஏ-கஸ்பா செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது.
🔯கருவறையில் கோபுரம்:
தமிழகத்தில் உள்ள கோயில்களில் நுழைவு வாயிலில் கோபுரம் அமைந்திருந்திருக்கும். ஆனால் ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் கருவறையின் மீது 5 கலசங்களைக் கொண்டு கோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது.
இது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.