சயி குங் நகரம்

சயி குங் அல்லது சயி குங் நகரம் (Sai Kung Town) என்பது ஹொங்கொங், புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில், சயி குங் மாவட்டத்தில் இருக்கும் இருக்கும் ஒரு அழகிய நகரமாகும். இந்த நகரம் கடலை முகப்பாகக் கொண்டுள்ளதால், இந்நகரம் சய் குங் தீபகற்பத்தில் இருப்பதாகவும் கூறுவர். இந்த நகரம் கிராமங்கள் சூழ நடுவில் கடலை முகப்பாக கொண்டுள்ளது. இவ்விடம் உல்லாசப் பயணிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் ஒரு இடமாகும். இதனை கடலுணவுப் பிரியர்களின் சொர்க்கம் என்றும் அழைப்பர்..


சயி குங் நகரில் இருந்து பார்த்தால் எதிரே சிறிய சிறிய தீவுக் குன்றுகள் கடலெங்கும் மனதைக் கொள்ளைக்கொள்ளும் காட்சிகளாக இருக்கும். அத்துடன் சயி குங் கடல் பரப்பில் அருகருகே ஆயிரக்கணக்கான வள்ளங்கள் பார்ப்பதற்கு அழகானக் காட்சியாகும். சயி குங் போவாதானால், சயி குங்கிற்கு என்று தொடருந்து சேவை இல்லை. பேருந்து மற்றும் சிற்றுந்து சேவைகளின் ஊடாகவே பயணிக்கலாம். அல்லது தனியார் வாகனங்களில் போகலாம். எம் டி ஆர் தொடருந்தில் செல்வோர் சொய் ஒங் எனும் தொடருந்தகத்தில் இறங்கி, அங்கிருந்து பேருந்திலோ அல்லது சிற்றுந்திலோ போகலாம். சயி குங்கில் உள்ள சிறப்பை விட, இந்த சயி குங் பாதையில் பயணிப்பதே மனதுக்கு இதமானதாகும்.



உயர்ந்த மலைத்தொடர்களில் வாகனம் சுற்றிச் சுற்றி செல்லும் போது, இலங்கையில் நுவரெலியாவையும், இந்தியாவில் ஊட்டியையும் நினைவுப் படுத்தும் அளவிற்கு இயற்கை எழில் நிறைந்தப் பகுதியாகும். இடையிடையே பொருளாதார வளமிக்க கட்டமைப்புகளும், பாதை வடிவமைப்புகளும், மேம்பாலங்களும் என சயி குங் பயணம் ஒவ்வொரு சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோரை ஈர்த்துக்கொள்ளும். சில நேரங்களில் வாகன நெரிசலும் ஏற்படும். "டின் ஹாவூ கோயில்" எனும் சீனர்களின் பழமையானக் கோயில் ஒன்றும் உள்ளது. குழிப்பந்தாட்ட விளையாட்டுப் பிரியர்களுக்கான ஒரு தனித்தீவும் உள்ளது. அதற்கு சிறப்பு சொகுசு படகு சேவை உள்ளது.

சிறப்பு உணவகங்கள்


சயி குங்கில் சிறப்பான ஒரு விடயம் கடலுணவுகள். நூற்றுக்கணக்கான மீன் வகைகள், வெளியில் எங்குமே காணமுடியாத வித்தியாசமான கடல் வாழ் உயிரணங்கள் உயிருடன் நீர் தொட்டிகளில் போடப்பட்டிருக்கும். உணவுப் பிரியர்கள் தமக்கு விருப்பமான மீனையோ அல்லது கடல் உயிரினத்தையோ காட்டினால், கண்முன்னே அது தொட்டியில் இருந்து எடுக்கப்பட்டு உணவாகப் பரிமாரப்படும். சில உணவகங்கள் ஆயிரம் பேர் அமரக்கூடிய இடவசதிகளையும் கொண்டுள்ளன. சயி குங் செல்லும் சுற்றுலா பயணிகளின் முக்கியமான அம்சம் அங்கிருக்கும் கடலுணவு உணவகங்களில் உணவு உற்கொள்ளலும் ஆகும். அதனாலேயே நகரெங்கும் எண்ணற்ற உணவகங்கள் நிறைந்து காணப்படுகின்றன.


அத்துடன் சயி குங் கடலில் கட்டப்பட்டிருக்கும் ஒரு நீண்ட வள்ளத்துறை தற்போது உல்லாசப் பிரயாணிகளின் உலாவும் சாலையாக உள்ளது. அந்த வள்ளத் துறையின் அடிப்பாகமான கடல்பரப்பில் சிறு மீன்பிடி படகுகளில் உயிருள்ள மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரிணங்களை வைத்துக்கொண்டு உள்ளூர் மீனவ வணிகர்கள் நெடுகிலும் இருப்பார்கள். அவர்கள் குவியல் குவியலாக விற்பவர்கள். அவற்றை வாங்குவோர் மேலே இருந்து தமக்கு வேண்டிய குவியலைக் காட்டினால், அவற்றை ஒரு பையினுள் போட்டு, ஒரு நீண்ட தடிப்போன்ற ஒன்றில் சொருகி மேலே நீட்டுவார்கள். அந்த தடியில் காசுப் போடுவதற்கான ஒரு பையும் இருக்கும். அதிலே காசைப் போட்டால், மீனவர் எடுத்துக்கொள்வார். அந்த படகு மீனவர்களின் மீன்கள் எல்லாமே படகில் இருக்காது. சில குவியல்களை மட்டுமே படகின் மீது மக்களின் பார்வைக்கு வைத்திருப்பர். மிகுதியெல்லாம் மீன்பிடி வலையுடன் கடலில் இருக்கும். மீன் அல்லது கடல்வாழ் உயிரிணங்கள் முடிய முடிய அந்த வலையை மேலே இழுத்து படகில் போட்டுக்கொள்வார்கள்.

தீவுப் பயணங்கள்


சயி குங் செல்வொரின் இன்னொரு விருப்பம்சம், சயி குங் நகரில் இருந்து வள்ளத்தில் ஊடாக தீவுகளுக்கு செல்லல் ஆகும். அங்குள்ள ஒரு சில தீவுகளைத் தவிர பல தீவுகளில் மக்கள் வசிப்பதில்லை. ஆனால் உல்லாசப் பயணிகள் அச்சமின்றி எந்தத் தீவுக்கும் சென்று வரும் வசதியுள்ளது. விரும்பினால் ஒரு படகை அல்லது வள்ளத்தை தனியாகவோ அல்லது ஒரு குழுமாகவோ முழு நாளுக்கும் வாடகைக்கு பெற்று கடலில் வலம் வரலாம். தீவுகளுக்கு செல்வோர் நாம் விரும்பும் தீவுக்கு காலை சென்றால், மாலை 6:00 மணிக்கு முன் திரும்பி வர வேண்டும். போவோரை தீவுகளில் விட்டுவிட்டு மீண்டும் அவர்களை அழைத்துச்செல்ல வள்ளங்கள் பின்னேரம் வரும். அவசரமாக திரும்பிப் போகவேண்டுமானால், வள்ளக்காரருக்கு அழைப்பேசியில் அழைத்தால் வந்துவிடுவார்கள். சயி குங் கடல் பரப்பில் உள்ள தீவுகள் எல்லாம் கடல் நடுவே சிற்சிறு குன்றுகள் போன்றே காணப்படுகின்றன. சில நீண்ட மலைத்தொடர்களாக உள்ளன. அத்தீவுகளுக்கு செல்லும் உல்லாசப் பயணிகள் தமக்கு தேவையான உணவு, தண்ணீர் போன்றவற்றையும் எடுத்துக்கொண்டு மலையேற்றங்களுக்கும் செல்வர். சிலர் கூடாரம் அடித்துக்கொண்டு இரவு தங்குவோரும் உள்ளனர். சில காதல் சோடிகள் இரவு நேரங்களில் கூடாரம் அடித்துக்கொண்டு தீவுகளில் அல்லது தீவின் மலைகளில் தங்குவோரும் உளர்.