மூன்றாவது பதக்கத்தை வென்றது இந்தியா -  குத்துச் சண்டையில் லவ்லினா சாதனை
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா எத்தனை பதக்கங்களுடன் நாடு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியாவுக்கான மூன்றாவது பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார் லவ்லினா.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சீனா தைப்பேவின் நியென் சின் சென்னை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார், இரண்டு முறை உலக சாம்பியன் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற அசாமை சேர்ந்த லவ்லினா. அரையிறுதி போட்டியில் அவர், துருக்கியை சேர்ந்த உலக சாம்பியன் சுர்மெனெலி புசெனாஸிடாவை எதிர்த்து 69 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார். கொகுகிகான் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் துருக்கி வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார் லவ்லினா.

2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் மேரி கோம் குத்துச் சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், குத்துச் சண்டை போட்டிகளில் பதக்கம் வென்ற இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தற்போது டோக்கியோவில் நடைபெற்று வரும் போட்டிகளில் ஏற்கனவே பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து, மற்றும் 49 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்கும் போட்டியில் மீராபாய் வெண்கலம் வென்ற நிலையில் தற்போது குத்துச் சண்டை போட்டியில் வெண்கல பதக்கத்தைப் பெற்றார் இந்திய வீராங்கனை லவ்லினா.

குத்துச் சண்டையில் அவருடைய போட்டி பலரை ஊக்குவிக்கும். அவருடைய உறுதி போற்றத்தக்கது. ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் வென்ற அவருக்கு பாராட்டுகள். எதிகால திட்டங்களுக்கு வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

லவ்லினாவின் முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும். முதல் ஒலிம்பிக் போட்டிகளிலேயே பதக்கம் வென்று சாதனையை நிகழ்த்தியுள்ள 23 வயது இளம் வீராங்கனைக்கு நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைச்சர்களும், விளையாட்டுத்துறை பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.