மீண்டும் சர்ச்சையை கிளப்பிய மஞ்ச்ரேக்கர் - 2வது டெஸ்டில் தாக்கூர், ஜடேஜாவை நீக்கணும்
இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்று வந்த முதல் டெஸ்டில் இந்திய அணி முன்னிலையில் இருந்து வந்த நிலையில், போட்டியின் 5வது நாளில் மழை குறுக்கீட்டதால் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய அணி பங்கேற்கும் 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 12-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், அவரை நடவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ள முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த 2 மாற்றங்களில் ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜடேஜாவை சேர்த்துள்ளார் மஞ்ச்ரேக்கர். ஏற்கனவே இவர் ஜடேஜா குறித்து பல சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தததால் ரசிகர்கள் இவரை வச்சு செய்திருந்தனர். தற்போது 2வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், முதலாவது டெஸ்டில் களம் கண்ட ஜடேஜா பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், பேட்டிங்கில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். இப்படி சிறப்பாக செயல்படும் ஜடேஜாவை நீக்க சொன்னதற்காக தற்போது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் விமர்சனத்தை பெற்றுள்ளார் மஞ்ச்ரேக்கர். தவிர, 2வது மாற்றமாக ஷர்துல் தாகூரை நீக்கிவிட்டு ஹனுமா விஹாரியை அணியில் சேர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஸ்வினை முதல் போட்டியில் எடுக்காமல் அவருக்கு பதிலாக ஜடேஜாவை சேர்த்தார்கள். அணிக்கு கூடுதல் பேட்டிங் தேவை என்றால் ஷர்துல் தாகூரை நீக்கிவிட்டு விகாரியை சேர்த்துக் கொள்ளலாம். இதே போல் ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் களமிறங்கினால் அவராலும் பேட்டிங் செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்துள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன்:-
1) ரோஹித் சர்மா
2) கே. ராகுல்
3) சேதேஸ்வர் புஜாரா
4) விராட் கோலி
5) அஜின்கியா ரஹானே
6) ரிஷப் பந்த்
7) ஹனுமா விஹாரி,
8) ரவிச்சந்திர அஷ்வின்
9) ஜஸ்பீர்ட் பும்ரா
10)) முகமது சிராஜ்
11) முகமது ஷமி