டெல்லி தொடர்ந்து முதலிடம் - பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்கள்
டெல்லியில் ஒட்டுமொத்தமாக குற்ற சம்பவங்கள் குறைவாக பதிவாகியுள்ள போதிலும், கொரோனா ஊரடங்கு காரணமாக தேசிய தலைநகரில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் மற்ற மெட்ரோக்களைக் காட்டிலும் அதிக அளவில் பதிவாகியுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau (NCRB)) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி டெல்லியில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2019 மற்றும் 2020 ஆண்டுக்கு இடையில் 18 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு டெல்லி காவல்துறையால் மொத்தம் 2.4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 650க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதே சமயத்தில் பெங்களூரில் 19,964 வழக்குகள் பதிவாகியுள்ளது. மும்பையில் 50 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காதல் விவகாரம் தொடர்பான 472 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 521 ஆக இருந்தது.

என்.சி.ஆர்.பி. தரவில், கடத்தல் வழக்குகள் 2019ம் ஆண்டில் 5900 ஆக இருந்து, 2020-ல் அது 4,062 ஆக குறைந்தது. அதில் 3000-க்கும் மேற்பட்ட வழக்கில் கடத்திச் செல்லப்பட்டவர்களின் வயது 12 முதல் 18 ஆக இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்ற எண்ணிக்கைகளில் வீழ்ச்சி இருந்த போதிலும், டெல்லியில் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து மும்பையில் 1,173 ஆள் கடத்தல் வழக்குகளும், புனேவில் 735 ஆள் கடத்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தரவுகளின்படி, டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாகும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டு 10,093 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மும்பை, புனே, காசியாபாத், பெங்களூரு மற்றும் இந்தூரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.

2018 இல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 13,640 டெல்லியில் பதிவு செய்யப்பட்டன, அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 300 ஆக குறைந்தது.

997 பாலியல் பலாத்காரங்கள், 110 வரதட்சணை மரணங்கள், 1,840 தாக்குதல்கள், மற்றும் 326 துன்புறுத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதிற்கும் குறைவானவர்கள்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு (குடும்பம், பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது துணை) தெரிந்தவர்கள் என்பதையும் தரவு காட்டுகிறது.

ஆன்லைன் திருட்டு, மோசடி மற்றும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட இணைய குற்றங்கள் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

டெல்லியில், 168 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டுகளை விட சுமார் 50-60 அதிகம்.

ஒவ்வொரு வழக்கிலும் சராசரியாக 5 முதல் 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை கூறுகிறது. பாலியல் உள்ளடக்கங்களை கொண்ட மீடியா கன்டெண்ட்டுகளை அனுப்பியவர்கள், சைபர் ஸ்டாக்கிங்கிள் ஈடுபட்டவர்கள் மற்றும் பணப்பறிப்பில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

மற்ற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், டெல்லியில் குறைவான சைபர் குற்றங்கள் நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நிலுவையில் இருந்த 28,688 வழக்குகள் இந்த ஆண்டு விசாரணைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தனர்.