கூட்டணிக் கதவை இழுத்து மூடிய ராமதாஸ்
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பாமக தற்போது அதன் முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. தற்போது நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியால் கூட்டணிக் கட்சிகள் பலன் அடைந்தன. அவர்களால் பா.ம.கவுக்குப் பலன் இல்லை. சொந்தக் கட்சிக்காரர்களைக்கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவரோடு சேர்ந்து நம்மால் வெற்றி பெற முடியுமா?சரியான தலைமை இல்லாத அதிமுகவுடன் கூட்டணி வைத்து என்ன பயன்? எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்க வேண்டும்’ எனக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் பாமக செய்தி தொடர்பாளர் பாலுவோ உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாக கூறினார். அதிமுகவுக்கும் தங்களுக்கும் மோதல் எதுவும் இல்லை என்றார். இந்த முரண்பாடு பாமகவினரிடையே குழப்பதை ஏற்படுத்தியது.
இதுதவிர்த்து செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக பாமக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாமகவின் நிலைப்பாடு மாவட்டங்களுக்கிடையே மாறுபடுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விருப்ப இடங்களுக்கான பட்டியலை அதிமுகவிடம் பாமக வழங்கியிருப்பதாக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜனும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் சிலரும் இணையத்தில் ட்வீட்களை செய்து வந்தனர்.
இதனால் உள்ளூர் அளவில் பாமக அதிமுகவோடு செங்கல்பட்டு, வேலூரில் மட்டும் கூட்டணி வைத்து ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமோ என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான் இந்த கூட்டணி ஆலோசனைகளுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ராமதாஸ் செய்துள்ள ட்வீட்டில் லோக்கலும் கிடையாது.. லோக்கல் அண்டர்ஸ்டான்டிங்கும் கிடையாது. புரிஞ்சுதா? என்று கேட்டு ராம்தாஸ் பேப்பரில் எழுதி அதை ட்வீட் செய்துள்ளார். அதாவது லோக்கல் அளவில் அதிமுக பாமக இடையே அண்டர்ஸ்டான்டிங் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு ராமதாஸ் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

அதிமுக கூட்டணிக்கு மொத்தமாக முழுக்கு போடும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த ட்வீட்டை செய்துள்ளார். இந்த ட்வீட் மூலம் பாமக நிர்வாகிகள் யாரும் லோக்கல் அளவில் அதிமுகவோடு எந்த ஒப்பந்தமும் வைத்துக்கொள்ள கூடாது ராமதாஸ் இந்த ட்வீட் மூலம் மறைமுகமாக எச்சரித்து உள்ளார்.