ஐ.பி.எல். 2021: சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
மீண்டும் தொடங்கியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இதுவரை நடந்த ஆட்டத்தில் 6 வெற்றி, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ள சென்னை அணி 2-வது கட்ட சீசனின் தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்சை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 24 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்தது. எனினும், தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் (88 ரன்) நேர்த்தியான பேட்டிங்கால் சரிவில் இருந்து மீண்டு 150 ரன்களை கடந்தது.
இந்த வெற்றியின் மூலம் உத்வேகமடைந்துள்ள சென்னை அணி பெங்களூரு அணிக்கு எதிரான இன்றை ஆட்டத்திலும் அதை வெளிப்படுத்தும் என நம்பலாம். மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் பாப் டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி அவசரகதியில் விளையாடி ‘டக்-அவுட்’ ஆகினார்கள். இன்றைய ஆட்டத்தில் இவர்கள் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் அணி வலுவான ஸ்கோரை எட்டும்.
இடது முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வரும் அம்பத்தி ராயுடுவுக்கு ‘எக்ஸ்ரே’ பரிசோதனையில் எலும்பு முறிவு எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனினும், இன்றைய ஆட்டத்தில் அவர் களம் காணுவது சந்தேகம் தான். அவருக்கு பதில் ராபின் உத்தப்பா இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. இதே போல் ஆல்-ரவுண்டர் சாம் கர்ரண் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 8 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி வெறும் 92 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகிய நட்சத்திர வீரர்கள் பெரிதும் சோபிக்கவில்லை.
தற்போது, இந்த மோசமான தோல்விக்கு பரிகாரம் தேடும் உத்வேகத்துடன் அந்த அணி தயாராகி வருகிறது. பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், கைல் ஜாமிசன், முகமது சிராஜ், ஹசரங்கா தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்ப்பர்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் கேப்டன்கள் சந்திக்கும் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதோடு, இந்த இரு ஜாம்பவான்கள் ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் சந்திக்கும் கடைசி போட்டியாக இது இருக்கும் என்பதால் போட்டியில் சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமிருக்காது.