வி.சி.க கண்டனம்... முழங்கால் அளவு தண்ணீரில் நாற்காலி போட்டு உதவியதை கேலி செய்வதா...
சென்னையில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடியாததால்,மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேளச்சேரியில், தமிழ்நாடு குடியிறுப்பு காலணியில் முதலாவது அவன்யூவில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதியின் எம்பியுமான திருமாவளவனின் வீட்டிலும் தண்ணீர் புகுந்துள்ளது. அவரது வீட்டில் 2 அடி உயரம் தண்ணீர் தேங்கி நின்றது.

இச்சமயத்தில் தான், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்காக திருமாவளவன் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். தண்ணீரில் நடந்தால் தனது ஷூ நனைந்துவிடும் என்பதால், அவரது கட்சி தொண்டர்கள் பார்வையாளர்கள் அமரும் இரும்பு சேர்களை ஒவ்வொன்றாக அடுக்கி அவருக்கு பாதை அமைத்து கார் அருகில் அழைத்து வந்தனர்.

பின்னர், காரின் கதவை திறந்து வெள்ள நீரில் கால்வைக்காமலே சேரில் இருந்து நேரடியாக காருக்குள் ஏறி அமர்ந்து திருமாவளவன் கிளம்பிச் சென்றார்

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாக, எதிர்மறையான விமர்சத்தை பெற்றது. பல தலைவர்கள் தண்ணீரில் இறங்கி களஆய்வு செய்கையில், ஷூ நனைந்துவிடும் என்பதற்காக இச்செயலில் திருமாவளவன் ஈடுபட்டதை சுட்டிக்காட்டி இது தான் சமத்துவ கொள்கையா என கேள்வி எழுப்பினர். இப்பிரச்சினை விஸ்வரூபம் அடைய, விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வன்னி அரசு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில்,” வேளச்சேரியில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள ஓர் அறையில் தான் எமது தலைவர் திருமாவளவன் கடந்த 15 ஆண்டுகளாக தங்கி வருகிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் எப்படி கீழ்த்தளம் முழுக்க தண்ணீர் புகுந்ததோ,அப்படி தான் இந்த ஆண்டும். ஒரு தலைவர் நினைத்தால் சொகுசு ஓட்டலில் கூட தங்கலாம்.

ஆனால் அதையெல்லாம் விடுத்து தம்பிகளோடவே தங்குகிறார். முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள் தம்பிகள்.இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மத்தர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.” என குறிப்பிட்டிருந்தார்.