ஜடேஜாவை முதலில் தக்கவைத்த சிஎஸ்கே… புதிய அணி மாற துடிக்கும் ராகுல், ரஷீத்…
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு என்பது குறித்த பட்டியல் அதிகாரப்பூர்வமாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்டது. இதில் கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷீத் கான் போன்ற சில முன்னணி வீரர்கள் தங்கள் உரிமையாளர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில், சில தக்கவைப்புகள் ரசிகர்கள் எதிர்பார்த்ததது போலவே இருந்தது.
புதிய உத்தியை நோக்கி சென்னை அணி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 4முறை வாகை சூட்டியுள்ள நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியை தக்கவைத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்றாலும், அவருக்கு 12 கோடியும், ஜடேஜா -வுக்கு 16 கோடியும் கொடுத்து தக்கவைத்துள்ளது ரசிகர்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தோனி இன்னும் 3 சீசன்களுக்கு கேப்டனாக தொடர்வார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்திருந்த, நிலையில் ஜடேஜாவை 16 கோடி கொடுத்து தக்கவைத்திருப்பது அவரை அடுத்த கேப்டனாக உருவாக்கவே என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக ஜடேஜாவின் நிலையான எழுச்சி அவரை இந்திய அணியில் இருந்தும், சென்னை அணியிலும் இருந்தும் கைவிட முடியாத அளவிற்கு உயர்த்தியுள்ளது. ஜடேஜா 33 வயதை எட்டி இருந்தாலும் அவரின் உடற்தகுதி அவரை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக மேம்படுத்தியுள்ளது. கடந்த சீசனில் தனக்காக 227 ரன்கள் சேர்த்த அவர் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
சென்னை அணி ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி) மற்றும் எம்எஸ் தோனியை (ரூ. 12 கோடி) தவிர்த்து இன்னும் இரண்டு வீரர்களை தக்கவைத்துள்ளது. மொயீன் அலி – ரூ. 8 கோடி , ருதுராஜ் கெய்க்வாட் – ரூ. 6 கோடி. இதில் மொயீன் அலி மட்டும் அயல்நாட்டவர். சென்னை அணியில் ஏற்கனவே ஃபாஃப் டு பிளெசிஸ், டுவைன் பிராவோ, சாம் கரண் போன்ற வெளிநாட்டு வீரர்கள் இருந்த நிலையில் அவர்களில் மொயீன் அலியை மட்டும் அந்த அணி தக்கவைத்துள்ளது.
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரரான மொயீன் அலியின் தற்போதைய ஃபார்ம் நம்மை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.எனவே, அவரை சரியாகத் தான் சென்னை அணி தக்கவைத்துள்ளது. மேலும், மொயீன் அலி சென்னை மற்றும் இந்திய மைதானங்களில் நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். எனவே, அவரின் அதிரடி அடுத்த சீசனிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை அனைவரும் எதிர்பார்த்தது போலவே சென்னை அணி தக்கவைத்திருக்கிறது. கடந்த சீசனில் ரன் மழை பொழிந்து ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்திய அவர் எதிர்வரும் சீசனிலும் ரன்வேட்டை நடத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
சென்னை அணி ஃபாஃப் டு பிளெசிஸ், டுவைன் பிராவோ, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், சாம் கரண் போன்ற வீரர்களை தக்கவைக்கவில்லை என்றாலும் அவர்களை எப்படியாவது மெகா ஏலத்தில் எடுக்க தீவிர முனைப்பு காட்டும். மேலும், இந்த ஏலத்தில் சில இளம் வீரர்களை வாங்க திட்டமிட்டுள்ள அந்த அணி அவர்களையும் ருதுராஜ் போன்று உருவாக்கும் உத்தியுடன் உள்ளது.
கேப்டனை கழற்றிவிட்ட கொல்கத்தா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் இறுதிப்போட்டி வரை வந்து, சென்னையிடம் தோல்வியுற்றது. அந்த அணியை கேப்டன் இயன் மோர்கன் சிறப்பாகவே வழிநடத்தி இருந்தார். எனினும், அவர் பேட்டிங்கில் பெரிதும் சோபிக்கவில்லை. இதனால் அவர் தக்கவைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இருப்பினும், இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரை (8 கோடி) தக்கவைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய டி20 அணியில் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர, கொல்கத்தா அணி ஆண்ட்ரே ரசல் (12 கோடி) வருண் சக்ரவர்த்தி (8 கோடி ), சுனில் நரைன் (6 கோடி) ஆகிய வீரர்களையும் தக்கவைத்துள்ளது.
அணி மாறும் ஐதராபாத் சுழல் ஜாலம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி) ஆகிய மூன்று வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளது. அந்த அணி ஏன் சுழலில் மாயாஜாலம் செய்யும் ரஷித் கானை தக்கவைக்கவில்லை என கேள்வியெழுப்பப்பட்ட நிலையில், ரஷித் கானை தக்கவைக்கவே அணி விருப்பியதாகவும், அவர் தான் ஏலத்தில் செல்ல விரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
நமக்கு கிடைத்த தகவல்களின் படி, ரஷீத் கான் ஐதராபாத் அணியுடன் இருந்த ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே வெளியேறி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 2 அணிகளுள் ஒன்றுக்கு செல்ல முனைப்பு காட்டுகிறார் என்றும் கூறப்படுகிறது.
பாண்டியா சகோதரர்களை கழட்டி விட்ட மும்பை அணி
ரோஹித் சர்மா (16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கீரன் பொல்லார்ட் (6 கோடி) ஆகிய 4 வீரர்களை தக்கவைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, பாண்டியா சகோதரர்களான ஹர்டிக் மற்றும் குருனால் பாண்டியாவை ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளது.
சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக அறியப்படும் ஹர்டிக் பாண்டியா காயம் காரணமாக சமீபத்திய போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. கடந்த சீசனில் 12 போட்டிகளில் 127 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஹர்டிக் தற்போது தனது உடற்தகுதியில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
புதிய அணி தாவ துடிக்கும் ராகுல்
பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வால் (ரூ. 12 கோடி) அர்ஷ்தீப் சிங் (ரூ. 4 கோடி) ஆகிய 2 வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளது. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் தக்கவைப்பு பட்டியலில் இடம் பெறவில்லை. அணி நிர்வாகம் ராகுலை தக்கவைக்கவே விரும்பியது என்றும், அவர்தான் ஏலத்தில் செல்லவேண்டும் விரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சீசனில் 626 ரன்களுடன் அதிக ரன் குவித்த மூன்றாவது வீரர் ராகுல் ஆவார். அவர் இல்லாத நிலையில், ரூ.12 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட மயங்க் அகர்வாலுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவது பற்றி பரிசீலித்து வருவதாக அந்த அணியின் பயிற்சியாளர் அணில் கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், ராகுல் புதிய அணியான லக்னோ அணியால் வாங்கப்பட்ட வாய்ப்புள்ளது. அவரும் அதற்காகதான் காத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மேக்ஸ்வெல் கேப்டனாக வாய்ப்பு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில், அந்த அணியில் கேப்டன் பதவி காலியாக உள்ளது. இந்த இடத்திற்கு பெங்களூரை பூர்விமாக கொண்ட கேஎல் ராகுல் வந்து சேருவார் என பலரும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் அவரின் பார்வையோ லக்னோ அணியை நோக்கியுள்ளது. இதனால் அந்த இடத்தை கிளென் மேக்ஸ்வெல் தான் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அவரை (கிளென் மேக்ஸ்வெல் -11 கோடி ) அந்த அணி தக்கவைத்துள்ளது. அவருடன் முன்னாள் கேப்டன் விராட் கோலியையும் (15 கோடி), இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜையும் (7 கோடி) பெங்களூரு அணி தக்கவைத்துள்ளது.
மீண்டும் கேப்டனாக ரிஷப் பண்ட்
டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதன் முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்கவில்லை. அவருக்கு பதில் கடந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்டை மீண்டும் கேப்டனாக அறிவித்துள்ளது. மேலும் அவரை 16 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளது. அவருடன் அக்சர் படேல் (9 கோடி), பிருத்வி ஷா (7.5 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (6.5 கோடி) ஆகிய முன்னணி வீரர்களையும் தக்கவைத்துள்ளது.
தக்கவைக்கப்பட்ட சஞ்சு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் கேப்டன் சஞ்சு சாம்சன் (14 கோடி) மற்றும் ஜோஸ் பட்லர் (10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி) போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளது.
தக்க வைக்கப்படாத வீரர்களின் முழு பட்டியல்; அணிகள் வாரியாக:
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே):
ஃபாஃப் டு பிளெசிஸ், டுவைன் பிராவோ, சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர்
டெல்லி கேபிடல்ஸ் (டிசி):
ஷ்ரேயாஸ் ஐயர், அவேஷ் கான், ககிசோ ரபாடா, ஆர் அஷ்வின்
மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ):
ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், டிரென்ட் போல்ட், ராகுல் சாஹர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH):
ரஷித் கான், டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, மணீஷ் பாண்டே
ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்):
பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், லியாம் லிவிங்ஸ்டோன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்):
இயான் மோர்கன், ஷுப்மான் கில், லாக்கி பெர்குசன், நிதிஷ் ராணா
பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்):
கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல், ரவி பிஷ்னோய், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி):
தேவ்தத் படிக்கல், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், வாஷிங்டன் சுந்தர்.