யூடியூபர் மாரிதாஸ்க்கு டிச.23 வரை சிறை... தமிழக அரசு குறித்து விமர்சனம்...
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்த யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை வரும் டிசம்பர் 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மாரிதாஸ். அரசியல் தொடர்பான தனது கருத்துக்களை தனது யூடியூப் சேனில்களில் பதிவிட்டு வரும் இவருக்கு ஒரு சாரார் ஆதரவும், ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து யூடியூப்பில் செயல்பட்டு வந்த மாரிதாஸ் கடந்த டிசம்பர் 7-ந்தேதி தனது ட்விட்டர் பதிவில் தமிழக அரசுக்கு எதிரான தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.
கடந்த 5-ந் தேதி முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மரணத்திற்கு காரணம் காவல்துறைதான் என்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழகம் முழுவதும் வைரலாக பரவியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரரும் தங்களது கருத்தக்களை தெரிவித்த நிலையில், இது தொடர்பாக யூடியூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை விமர்சித்து பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவில், முதுகுளத்தூர் மணிகண்டன் இறந்த சம்பவம் நமக்குச் சொல்லும் செய்தி மூன்று சிலர் சொல்வது போல் சில சமூகம் மட்டும் அல்ல அனைத்து சமூகத்தினரும் இந்த விதமான காட்டுமிராண்டித் தனமான சில காவலரின் அதிகார புத்தியால் பாதிக்கப்படுகிறோம். ஆக காசு இல்லாதவன் இங்கே கேட்க நாதி இல்லாதவன். இரண்டாவது இங்கே மீடியா தலித், சிறுபான்மையினர் பாதிப்பு என்றால் விவாதம் செய்யும். அதுவும் குற்றம் செய்தவன் திமுக இல்லை என்றால் மட்டும். தற்போது திமுக ஆட்சி, இறந்த மணிகண்டன் மேல் உள்ள இரண்டு பிரிவுகளில் வர மாட்டார். எனவே அவர் உயிருக்கு முக்கியத்துவம் இல்லை விவாதமும் இல்லை இதுவே திமுக மீடியா.
கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் பட்டியலின மக்கள் குரலாக மீடியா பேசுவதாக யாரும் எண்ணிவிடக் கூடாது மீடியா பேச ஒரே காரணம் இந்து மதம் ஜாதி வெறி கொண்டது என ஒரு பிம்பத்தை சில அமைப்புகளுக்காகக் கட்டமைத்து பட்டியலின மக்களைத் தூண்டி விடுவது, ஜாதி மோதலை அணையாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே. என பதிவிட்டிருந்தார்.
இவரின் இந்த பதிவு பெரும் வைரலாக பரவிய நிலையில், இவரது இந்த கருத்தக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இது குறித்து தனது கருத்தை வெளியிட்ட மாரிதாஸ், திக திமுக ஆதரவாளர்கள் பலரும் இராணுவ தளபதி விபத்தில் மரணத்தைக் கேலி செய்யும் விதமாகப் பதிவுகள் இடுவதும், சிரிப்பதுமாக இமோஜ் (emoji) போடுவதைக் காண முடிகிறது. ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. என பதிவிட்டிருந்தார்.
இந்த இரு பதிவுகளும் பெரும் வைரலாகி பரவியதை தொடர்ந்து அரசுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி மாரிதாஸ் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பாஜகவுக்கு ஆதரவான மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தொண்டர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகினறனர். இந்நிலையில், மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸை வரும் டிசம்பர் 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.