விஜய் ஹசாரே தொடர்... ஹாட்ரிக் சதம் அடித்த சிஎஸ்கே வீரர்…
ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னணி இளம் வீரராக வலம் வருபவர் ருதுராஜ் கெய்க்வாட் (24). மஹாராஷ்ட்டிராவை சேர்ந்த இந்த இளம் வீரர் கடந்த 2020ம் ஆண்டுக்கான சென்னை அணியின் ப்ளெயிங் லெவனில் இடம் பிடித்தார். இந்த தொடரின் தொடக்க ஆட்டங்களில் சொதப்பிய இவர், சீசனில் கடைசியாக நடந்த 3 ஆட்டங்களில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதனால் அவருக்கு நடப்பு சீசனின் (2021) ப்ளெயிங் லெவனில் இடம் அளிக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ருதுராஜ் களமிறங்கிய ஆட்டங்களில் எல்லாம் அதிரடி காட்டினார். மேலும், சிக்கிய பந்துகளையெல்லாம் சிதறடித்து மைதானத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஓட விட்டார். இவரது அதிரடி மற்றும் சென்னை அணியின் கூட்டு முயற்சியால், ஐபிஎல்லில் அந்த அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
தவிர, ஐபிஎல் தொடரில் களமிறங்கிய 16 ஆட்டங்களிலும் சிறப்பாக மட்டையை சுழற்றிய ருதுராஜ் ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரன் மழை பொழிந்தார். 60 பந்துகளில் 5 சிக்ஸர் 9 பவுண்டரிகள் என ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை பதிவு (101*) செய்தார். மேலும் தொடர் முழுதும் சிறப்பாக விளையாடி 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்தினார்.
ஹாட்ரிக் சதம்….
இந்நிலையில், சென்னை அணியால் 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டு அதே அணியால் ரூ.4 கோடி கொடுத்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு தக்கவைக்கப்பட்டுள்ள ருதுராஜ், தற்போது தனது சொந்த மாநில அணியான மஹாராஷ்ட்டிரா அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடத்த சையத் முஸ்தாக் அலி டி20 தொடருக்கான அணியில் இடம்பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இணைத்ததால் அவரால் அந்த தொடரில் முழுதுமாக பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடருக்கான மஹாராஷ்ட்டிரா அணியில் இடப்பிடித்துள்ள ருதுராஜ் தனது அதிரடியால் இடிஇடிக்கிறார் என்றே சொல்லாம். அந்த அளவிற்கு எதிரணியின் பந்துவீச்சை நொறுக்கி வருகிறார். லீக் ஆட்டத்தில் மத்திய பிரதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் தனது முதல் சதத்தை பதிவு செய்த அவர் 136(112), தொடர்ந்து சத்தீஸ்கர் அணிக்கெதிரான ஆட்டத்தில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்ததோடு 150 ரன்களைக் கடந்தார் 154*(143). இதன் மூலம் விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து 2 சதங்களை பதிவு செய்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த 2 சதங்களோடு நிறுத்திக்கொள்ள போவதில்லை என உறுமி வரும் ருதுராஜ் இன்று கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது 3வது சதத்தை அடித்து 124(129) விஜய் ஹசாரே தொடரில் ஹாட்ரிக் சதம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மஹாராஷ்ட்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.