அடையாளம் காட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்... சொல்வதெல்லாம் பொய், போலிப் பெண் சாமியார்…
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. 2011 இல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி’ குடும்ப உறவுகளுக்கிடையேயான பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களைக் கையாண்டது. தொகுப்பாளர் இரு தரப்பும் விவாதித்து, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி, நிகழ்ச்சியின் முடிவில் ஒரு இணக்கமான தீர்வைக் கண்டறிய அவர்களுக்கு உதவுவார்.

நடிகை மற்றும் விருது பெற்ற இயக்குனரான, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

குடும்ப விவகாரங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி’ அதற்கு கிடைத்த வரவேற்பால் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தாண்டி ஓடியது.

அதில் சில நேரங்களில் ”என்னம்மா இப்படி பண்றீங்களேமா” என்று லட்சுமி சாதரணமாக பேசியது கூட ஒரு பீரியடில் வைரலானது. இவ்வளவு வரவேற்பு இருந்தாலும் மறுபுறம் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஏராளமான விமர்சனங்களும் இருந்தன. குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்க இவர் என்ன உயர் நீதிமன்ற நீதிபதியா என பலரும் கேள்விகளை தொடுத்தனர். ஆனால் லட்சுமி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவரது பேச்சினாலே இந்த நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கில் தாறுமாறாக எகிறியது.  

இந்நிலையில் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கி’ சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் மாட்டிய ஒரு பெண், தற்போது பிரபலமான சாமியாராக வலம் வரும் வீடியோ அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.

அன்னபூரணி என்ற அந்த பெண், திருமணமாகி குழந்தைகள் இருந்த ஒருவருடன் விவாகரத்து பெறாமல் சட்டவிரோதமாக குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அன்னபூரணியிடம் இருந்து தன் கணவனை மீட்டு தருமாறு அவரது மனைவி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட லட்சுமி, சட்டவிரோதமாக இன்னொருவரின் கணவருடன் குடும்பம் நடத்துவது தவறு என அறிவுரை வழங்கினார். ஆனால் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அன்னபூரணி அவனோடு தான் வாழ்வேன் என்று சொல்லி விட்டுப் போனார்.

இப்படி ஒரு சூழ்நிலையில், அன்னபூரணி, பிரபல சாமியாராக உருவெடுத்துள்ளார். ”அன்னபூரணி அரசு அம்மா” என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை, ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதில் ஆண்களும், பெண்களும் பக்தி பரவசத்துடன் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி செல்கின்றனர். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டிங் ஆக உள்ளது.

இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்;  மக்கள் இந்த மாதிரி போலி சாமியார்களை கண்டு ஏமாந்து போகிறார்கள் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. நாம் ஏமாறும்வரை, ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.

சில வருடங்களுக்கு முன் இந்தப் பெண் என்னுடைய நிகழ்ச்சிக்கு வந்தபோது சட்டவிரோதமாக இன்னொருவரின் கணவருடன் குடும்பம் நடத்துவது தவறு என அறிவுரை வழங்கினேன். ஆனால் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த பெண், அவனோடுதான் வாழ்வேன் என்று சொல்லி விட்டுப் போனார்.

தற்போது அன்னபூரணி வீடியோவை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று கூறி இருக்கிறார்.

அன்னபூரணி விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், செங்கல்பட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த, அன்னபூரணி அம்மா அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை விதித்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.