கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது... அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இது குறித்த விரிவான அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது என உட்லண்ட்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலி லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அவர், நேற்று மாலை (டிசம்பர் 27ம் தேதி) உட்லண்ட்ஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மோனோக்ளோனல் ஆன்டி-பாடி காக்டெய்ல் (monoclonal anti-body cocktail therapy) சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்குலி இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.