மிடில்-ஆடரில் வலு சேர்க்கும் கோஹ்லி, ரஹானே, புஜாரா... சொற்ப ரன்னில் வெளியேறுவது ஏன்...
இந்திய கிரிக்கெட் அணியில் நல்ல அனுபவம் வாய்ந்த மிடில்-ஆர்டர் வீரர்களாக சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய மூன்று வீரர்கள் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் அணிக்கு தெம்பூட்டும் இந்த வீரர்கள் கடந்த சில வருடங்களாக மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இது தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டிலும் வெளிப்பட்டுள்ளது. இந்த மூவரில் நேற்று ரஹானே அடித்த 48 ரன்களே அதிகபட்சமாகும். இவர்களின் சொதப்பல் ஆட்டம் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றமளிக்கும் விதமாகவே அமைத்துள்ளது.
அசாத்தியமான சாதனைகளை பதிவு செய்த இவர்களின் தற்போதைய ஆட்டத்திற்கான காரணம் தான் என்ன?, வெளிநாட்டு மண்ணில் வெற்றி கொடியை நாட்டிய இவர்கள் ஏன் இப்படி சொதப்பல் ஆட்டம் ஆடுகிறார்கள்?, மூவரின் பலவீனமும் ஒருசேர வெளிப்பட்டு விட்டதா? என்கிற கேள்விகளுக்கு முடிந்தவரை விடையளிக்க முயன்றுள்ளோம்.
கவர் டிரைவ்வில் காலியாகும் கேப்டன் கோலி
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை தக்கவைத்துள்ள விராட் கோலிக்கு பக்கபலமே அவரின் கவர் டிரைவ் தான். அந்த அளவிற்கு மிகத்தெளிவாக பந்தைக் கணித்து மட்டையைச் சுழற்றுவார். அப்படி இந்த கவர் டிரைவ் ஆடும் போது, கிரீஸ் கோட்டிற்கு சற்று வலப்பக்கமாக ஏறி ஆடுவது வழக்கம். இதனால், சில முறை அவுட் சைடு எட்ச் ஆகி ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். ஆனால், இந்த கவர் டிரைவ் தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிக ரன்களை குவிக்க உதவியிருக்கிறது.
விராட் கோலி
இப்படி, நெடுங்காலமாய் மிக நுணுக்கமாக விரட்டப்பட்டு வரும் இந்த கவர் டிரைவ், வெளிநாட்டு மைதானங்களில் கோலிக்கு தற்போது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அவர் கடைசியாக விளையாடி பத்து வெளிநாட்டு இன்னிங்ஸ்களில் தொடர்ந்து கீப்பர் அல்லது ஸ்லிப்புக்கு (அவுட் சைடு எட்ச்) கேட்ச் கொடுத்தே ஆட்டமிழந்துள்ளார். இதனால், அவர் தொடர்ந்து கவர் டிரைவ் ஆடுவதில் கேள்வியை எழுப்பியுள்ளது. சில முன்னாள் வீரர்களும் அவரின் கவர் டிரைவ் ஆட்டத்திற்கு அறிவுரை கொடுக்கிறார்கள்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2 இன்னிங்ஸ்களில் கோலி கவர் டிரைவ் ஆட முயன்றே அவுட் ஆனார். முதல் இன்னிங்சில் லுங்கி என்கிடியின் பந்தை விரட்ட முயலுகையில் அவர் முதல் ஸ்லிப்பில் இருந்த மல்டர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின் இரண்டாவது இன்னிங்சில் மார்கோ ஜான்சன் பந்தை விளாசுகையில் கீப்பர் டிகாக் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
கோலி நன்றாக கவர்-டிரைவிங் செய்யும் போது, முடிந்தவரை பந்திற்கு அருகில் செல்ல அவர் குறுக்கே சாய்கிறார். இது அவரது மேல் கை ஷாட் ஆட அனுமதிக்கிறது. ஆனால் அவர் பந்தில் இருந்து விலகி இருக்கும்போது, கீழ்-கை முழுவதுமாக அவர் கையை நீட்டுகிறது, அது அவரை நிலைகுலையச் செய்கிறது. இனி வரும் காலங்களில் அதை எப்படி சமாளிக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
2வது முறை கோல்டன் டக் அவுட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அரணாக வலம் வரும் புஜாரா சமீபத்திய தொடரில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். அதிலும், அவரது விக்கெட்டை பந்துவீச்சாளர்கள் எளிதில் வீழ்த்தும் படியான நிலையில் தான் ஆடுகிறார். இதனால், அவர் விளையாடும் விதத்தை சில கிரிக்கெட் ஆர்வலர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் புஜாரா கோல்டன் டக் ஆனது அவருக்கு 93 டெஸ்ட் தொடர்களில் இரண்டாவது முறையாகும். லுங்கி என்கிடியின் பந்து வீச்சு அவரை உண்மையில் பயமுறுத்தும் வகையில் கூட இல்லை. ஆனால், புஜாராவின் பேட் மற்றும் பேடில் பட்டு துரதிஷ்டவசமாக ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆகி அவரை ஆட்டமிழக்க செய்தது.
தனக்கு வீசப்படும் பந்தின் வேகத்தை கணித்து அவற்றை மிட்விக்கெட் அல்லது ஸ்கொயர் லெக் திசையில் மிக நேர்த்தியாக பேட்டால் நகர்த்தும் புஜாரா நேற்று இரண்டாவது இன்னிங்சில் லெக் சைடில் பந்தை விரட்ட முயன்று கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஆனால், புஜாராவுக்கு ஒரு சமயத்தில் அதிர்ஷ்டம் இருந்தது. அவர் மிட்-ஆனுக்கு நேராக ஆன் டிரைவ் செய்த போது பந்து காகிசோ ரபாடா நோக்கி சென்றது. அதை ரபாடா கோட்டை விட்டார்.
ரஹானேவுக்கு ஷார்ட் பந்தில் சிக்கல்
ஷார்ட் பந்தில் தான் ரஹானேவுக்கான சூட்சமமே உள்ளது. இந்த பந்தில் தான் அவர் 2020ல் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் அதே அணிக்கு எதிராக இந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுட் ஆகி வெளியேறினார். இதுதான் நேற்று செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது இன்னிங்ஸிலும் அவருக்கு தொடர்ந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடந்த சவுத்தாம்ப்டனில் ரஹானே மிகவும் நம்ம்பிக்கையுடன் விளையாடினார். அவர் 49 ரன்கள் சேர்த்தது வரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், அரைசத்திற்கான நேரம் நெருங்கியபோது, அரை மனதுடன் நேராக ஸ்கொயர் லெக்கில் விளாச, அவர் அவுட் ஆனதே மிஞ்சியது.
நேற்றைய ஆட்டத்தில் கூட மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்களில் 20 ரன்களை எடுத்த ரஹானே மிகத்திடமான நிலையில் இருந்தார். ஆனால், ஜான்சன் வீசிய பந்தை விரட்டு முயன்ற அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நாட்களில், கடினமான ஆடுகளத்தில் அணுகுமுறை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்த இந்த ஆட்டத்தில் மட்டுமல்ல, அவரின் முந்தை ஆட்டங்களிலும் கேமியோ ரோல் போல் தான் ஆட்டத்தை அமைத்துக்கொண்டுள்ளார். இது அவரது தடுப்பாட்டதில் அவருக்கு இன்னும் அதிக கவனம் தேவை என்பதை வெளிக்காட்டுகிறது.