வன்முறையை தூண்டும் பேச்சு… சிறையில் இருக்கும் சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் கைது...
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தரமற்ற உணவால் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக கூறி வதந்தி பரப்பியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகனை கடந்த ஆண்டு டிச.19 ஆம் தேதி திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

பொய்யான தகவல் அடங்கிய அவரின் வீடியோதான், பாஸ்கான் ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைய காரணமாக இருந்ததாக காவல் துறை தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது.

தொடர்ந்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்டை துரைமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அவருடைய ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் நிலையில், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிவருவதாலும் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாலும், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சாட்டை துரைமுருகன் திருவள்ளூர் கிளைச் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.