ப்ருது சக்கரவர்த்தி அவதாரம்...
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்.
ப்ருது சக்கரவர்த்தி அவதாரம் :
பகவான் ஶ்ரீமஹாவிஷ்ணுவின் அவதாரமான ப்ருது சக்கரவர்த்தி, பூமாதேவியிடமிருந்து பசு ரூபத்தில், உலக மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் கறந்து எடுத்தல் :
Highights :
பூமாதேவி வாக்கு :
"அரசே !
முன்பு பிரம்மதேவரால் படைக்கப்பட்ட தானியங்கள் முதலியவற்றை "யமநியமம்"
முதலிய நன்நடத்தை இல்லாத தீயோர்களே உண்டு மகிழ்வதைக் கண்டு, எதிர்கால யாகங்களுக்கு வேண்டிய தானியங்களை, நான் என்னுள் மறைத்து வைத்தேன்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் வேண்டிய பலத்தைத் தரும் உணவை கறப்பதற்கு ஒரு கன்றுக்குட்டி, பாத்திரம் மற்றும் கறப்பவனைத் தயார் செய்து விடுங்கள்.
அந்தக் கன்றுக்குட்டியிடம் கொண்ட பேரன்பினால், பால் உருவில் தங்களுக்கு வேண்டியவைகளைப் பொழிந்து விடுகிறேன்.
மேடு பள்ளம் இல்லாமல நதிப்பாசன நிலம்போல் என்னைச் சமன் செய்யுங்கள்.
அதனால், மழைக்காலம் முடிந்து விட்டாலும், வறண்ட காலத்திலும் இந்திரன் மழைக்காலத்தில் பெய்வித்த மழை என்னுள் தங்கி நிற்கும்".
(4--18--6 to 11.)
-------------------------------
1.ப்ருது சக்கரவர்த்தி ஸ்வாயம்புவ மனுவைக் கன்றாகக் கொண்டு, அனைத்து விதமான பயிர்களையும் தன் கைகளிலேயே கறந்து எடுத்துக் கொண்டார்.
2.ரிஷிகள், ப்ருஹஸ்பதியைக் கன்றாகக் கொண்டு,
பொறி--புலன்கள் என்கிற பாத்திரங்களில் வேதங்கள் என்னும் பாலைக் கறந்தனர்.
3.தேவர்கள், இந்திரனைக் கன்றாகக் கொண்டு தங்கப் பாத்திரத்தில்
மனவலிமை,
பொறி--புலன்களின் வலிமை,
உடல் வலிமை,
அமிர்தம்
ஆகியவற்றைக் கறந்தனர்.
4.அசுரர்களும், அரக்கர்களும் அசுர ச்ரேஷ்டனான பிரஹலாதனைக் கன்றாகக் கொண்டு, இரும்புப் பாத்திரத்தில் கள்ளையும், போதை தரும் பானங்களையும் கறந்தனர்.
5.கந்தர்வர்களும் அப்ஸரப் பெண்களும் விச்வாசு என்கிற கந்தர்வனைக் கன்றாகக் கொண்டு, தாமரை மலர்ப் பாத்திரத்தில்
"சங்கீதம்"
என்கிற தேனையும்,
"அழகு"
என்கிற பாலையும் கறந்தனர்.
6.கொண்டாடத் தகுந்த ச்ராத்த தேவர்களான பித்ருக்கள்,
அர்யமா என்கிற பித்ரு தேவதையைக் கன்றாக ஆக்கி, சூளையில் சுடாத மண் பாத்திரத்தில் பித்ரு தேவதைகளுக்கு அர்ப்பணிக்கப்படும் "கவயம்"
என்னும் ஹவிஸைப் பாலாகக் கறந்தனர்.
7.சித்தர்கள், கபில முனிவரைக் கன்றாகக் கொண்டு அணிமா முதலிய எட்டு ஸித்திகளையும் கறந்து கொண்டனர்.
8.வித்யாதரர்கள், மறைதல்/அந்தர்தானம் போன்ற வித்தைகளையும் ஆகாயமான பாத்திரத்தில் கறந்து கொண்டனர்.
9.மாயையில் வல்ல கிம்புருஷர்கள், மயன் என்கிற அசுர சிற்பியைக் கன்றாகக் கொண்டு திடீரென்று மறைதல், பலவிதமான மாயா உருவங்கள் ஏற்றல் முதலிய விருப்பமான மாயையைகளைக் கறந்தனர்.
10.இவ்வாறே, மாமிசம் சாப்பிடும் யக்ஷர்கள், ராக்ஷஸர்கள்,
பூதப்பிரேத பிசாசர்கள் முதலியவர்கள், பூதநாதனான ருத்ரனைக் கன்றாகக் கொண்டு, மண்டை ஓட்டில் ரத்தமான கள்ளைக் கறந்தனர்.
11.மேலும், படமெடுக்காத சாதாரண பாம்புகளும், படமெடுக்கும் விஷப் பாம்புகளும், தேள் முதலியனவும்,
கத்ருவின் வம்சத்தில் உண்டான தெய்விகமான நாகப்பாம்புகளும், தக்ஷகனைக் கன்றாகக் கொண்டு,
தத்தம் வாய் என்ற பாத்திரத்தில் விஷமான பாலைக் கறந்து கொண்டனர்.
12.பசுக்கள், ருத்ரனது வாகனமான காளையைக் கன்றாகக் கொண்டு,
வனமாகிற பாத்திரத்தில் புல்லைப் பாலாகக் கறந்தன.
13.தெற்றிப் பற்களை உடைய மாமிச பட்சிணிகளான விலங்குகள்,
சிங்கத்தைக் கன்றாக அமைத்து, தங்கள் உடலான பாத்திரத்தில் மாமிசமான பாலைக் கறந்தன.
14.பறவைகள், கருடனைக் கன்றாக அமைத்து, புழுபூச்சி முதலிய அசையும் உணவுகளையும், பழங்கள் முதலிய அசையாத பதார்த்தங்களையும் பாலாகக் கறந்தன.
15.மரங்கள், ஆலமரத்தைக் கன்றாக வைத்து, பலவிதமான ரஸரூபமான பாலைக் கறந்தன.
16.மலைகள், இமயமலையைக் கன்றாகக் கொண்டு, தங்களது தாழ்வரைகளான பாத்திரத்தில் பற்பலவிதமான தாதுப்பொருள்களைக் கறந்தன.
-------------------------------
ப்ருது சக்கரவர்த்தியின் அனுமதி கொண்டு, விரும்பியதெல்லாம் அளிக்கக் கூடிய பூமாதேவியிடமிருந்து, அவரவர்கள் தங்கள் தங்கள் தலைவர்களைக் கன்றுகளாகக் கொண்டு, தங்களுக்குரிய பாத்திரங்களில் தங்கள் விருப்பங்களைக் கறந்து கொண்டனர்.
-------------------------------
Conclusion :
1.விரும்பியதெல்லாம் அளித்த பூமாதேவியிடம் தன் மகள் போன்ற அன்பு தோன்றவே, ப்ருது சக்கரவர்த்தி, அவளைத் தன் மகளாகவே ஏற்றார்.
-------------------------------
2.பின், ப்ருது, தன் வில்லின் நுனியால் மலைகளைப் பிளந்து, இந்த பூமண்டலத்தைப் பெரும்பாலும் சமன் செய்தார்.
-------------------------------
3.அவர் ஒரு தந்தை போல மக்களுக்கு வாழ்க்கைத் தரத்தை அமைத்துக் கொடுத்தார்.
------------------------------
4.மேடு பள்ளம் இல்லாத சமமான தரையில் மக்கள் வசிப்பதற்கு ஏற்றபடி வீடுகளையும் அமைத்துக் கொடுத்தார்.
-------------------------------
5.கிராமங்கள்,
பட்டணங்கள்,
நகரங்கள்,
பலவகையான கோட்டைகள்,
வேடுவச்சேரிகள்,
இடைச்சேரிகள்,
சேனைகளுக்கன கூடாரங்கள்,
சுரங்கங்கள்,
வேளாண்மக்கள் வசிக்கும் சிறுசிறு கிராமங்கள்,
காட்டுவாழ் மக்கள் வசிக்கும் மலைச்சாரல் பக்கமான கிராமங்கள்
முதலியனவற்றை அமைத்தார்.
-------------------------------
6.ப்ருது சக்கரவர்த்திக்கு முன்பு, இந்த பூமண்டலத்தில்
கிராமங்கள்,
பட்டணங்கள் என்கிற அமைப்பு இருந்ததில்லை.
மக்கள் எந்தவித பயமும் இல்லாமல், தங்கள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி இன்பமாக வாழ்ந்தனர்.
-------------------------------
ஆதாரம் :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்,
Volume----1,
ஸ்கந்தம்----4,
அத்தியாயம்---18,
ஸ்ஸோகம்----6 to 32.
பக்கம்---705 to 708.
Gita press,
Gorakhpur publication.