ஶ்ரீராம காவியம் - லட்சுமணன் மயக்கம் தெளிந்தது...
ஶ்ரீராம காவியம்
~~~~~

லட்சுமணன் மயக்கம் தெளிந்தது..

★சஞ்சீவினி மலை என்னும் மூலிகை மருந்து மலையை அடைந்தான். அங்கிருக்கும் பல மூலிகைகள் சூரியனைப் போன்று பிரகாசித்துக் கொண்டும் பல நிறங்களிலும் பல வடிவங்களிலும் இருப்பதைப் பார்த்த அனுமன் ஆச்சரியமடைந்தார். ஜாம்பவான் சொன்ன விதத்தில் இருக்கும் மூலிகைகளை தேட ஆரம்பித்தார். அந்த மூலிகைகளின் பெயர்களையும் அவற்றின் பயன்களையும் சற்று நினைத்துப் பார்த்தான்.

★ஜாம்பவான் கூறிய மருந்தின் விவரம் :

சஞ்சீவ கரணி:- -
இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் மூலிகை மருந்து

சந்தான கரணி:- -
உடல் பல துண்டுகளாகப் பிளவு பட்டுப் போயிருந்தால் அதனை ஒட்ட வைக்கும் மூலிகை மருந்து

சல்லிய கரணி:- -
உடலில் பாய்ந்த அனைத்துவித  படைக்கருவிகளை வெளியே எடுக்கும் மருந்து.

சமனி கரணி:- -
சிதைந்து போன உருவத்தை மீண்டும் பழையபடியே பெறுவதற்கான மருந்து.

★மருந்துகளின் பெயர்களை நினைவிற்கு கொண்டு வந்த அனுமன் அவைகளைத் தேட ஆரம்பித்தான்.அப்போதுஅதைக் காக்கின்ற தெய்வங்கள், அனுமனை பார்த்து, நீ யார்? நீ இங்கு வந்ததற்கான காரணம் என்ன? எனக் கேட்டனர். அனுமன், தெய்வங்களே! நான் வாயு குமாரன், அனுமன். நான் ராமரின் தூதன். போரில் மாண்ட ராம பக்தர்களை உயிர்ப்பிக்க மருந்து கொண்டு செல்ல இங்கு வந்தேன் என்று கூறினான். அத்தெய்வங்கள், நீ வேண்டிய மருந்துகளை கொண்டு சென்று, மீண்டும் இங்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று கூறி மறைந்தன.

★பிறகு அனுமன், ஜாம்பவான் கூறிய மருந்துகளைப் பிரித்து எடுப்பது அரிதான செயல் என எண்ணினான். இங்கேயே நின்றுக் கொண்டு மருந்து பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் கால தாமதம் ஆகிவிடும் என நினைத்தான்.ஆகவே அந்த
இமயமலையில் இருக்கும் பலவிதமான விலங்குகள், பெரிய மரங்கள் கொண்ட அந்த மூலிகை சிகரத்தை அப்படியே பெயர்த்து எடுத்த அனுமன், அதைத் தன்னுடைய ஒரு கையில் வைத்துக் கொண்டு வான வழியில் கருடனுக்கு நிகரான வேகத்தில் ராமர் இருக்குமிடத்திற்கு பறந்து சென்றார். தூரத்தில் அனுமன் வந்து கொண்டிருக்கும் போதே அதனை கண்ட யுத்தகளத்தில் இருந்த வானரங்கள் அனுமன் வந்து விட்டார், சூரியன் மறைவதற்குள்ளாகவே அனுமன் வந்து விட்டார் என்று பலமாகக் கூக்குரலிட்டார்கள். வானர வீரர்களின் கூக்குரலுக்கு அனுமன் எதிர் சப்தமிட்டார். இலங்கை நகரத்திற்குள் இச்சத்தத்தை கேட்டு வெற்றிக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்த ராட்சதர்கள் பயத்தில் அப்படியே உறைந்தார்கள். அனுமன் யுத்த களத்திற்கு அருகில் மூலிகை மலையை இறக்கி வைத்து விட்டு அனைவரையும் வணங்கி நின்றார்.

★ராமர் விரைவாக வந்த வாயு குமாரன் அனுமனைப் போற்றி வாழ்த்தினார். விபீஷணன் அனுமனை கட்டி அனைத்து தனது வாழ்த்துக்களை அன்பாக கூறினார். லட்சுமணன் மூலிகை வாசத்தில், தூங்கி எழுவது போல் எழுந்தார். அவரது உடலில் இருந்த காயங்கள் அனைத்தும் மறைந்தது. யுத்தம் ஆரம்பித்தது முதல் யுத்தகளத்தில் இறந்து கிடந்த வானர வீரர்கள் எல்லாம் தூக்கத்தில் இருந்து எழுவது போல் எழுந்தார்கள். அம்புகளால் மயக்கமடைந்தும் காயமடைந்தும் இருந்த வானர வீரர்கள் அந்த மூலிகையின் வாசம் பட்டதும் காயத்திற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமல் புதுப் பொலிவு பெற்று எழுந்தார்கள். யுத்தம் ஆரம்பித்த நாள் முதல் வானர வீரர்களால் குவியல் குவியலாக கொல்லப்பட்ட ராட்சத வீரர்களை தேவர்கள் பார்த்தால் மிகுந்த அவமானமாக இருக்கும் என்று கருதிய ராவணன் இறந்து கிடக்கும் ராட்சத வீரர்களை உடனே கடலில் தூக்கி வீசச் சொல்லி உத்தரவிட்டிருந்தான். அதன் விளைவாக இறந்த ராட்சத வீரர்கள் பிழைக்க வழி ஏதும் இல்லாமல் போனது.

★ராமர், உயிர் பெற்று எழுந்த தம்பி லட்சுமணனை ஆனந்த கண்ணீருடன் அன்போடு தழுவிக் கொண்டார். பிறகு ராம லட்சுமணர், அனுமனை பார்த்து, அனுமனே! தசரத குமாரர்களான நாங்கள் மாண்டு இருப்போம். இப்பொழுது உன்னால் மீண்டும் உயிர் பெற்று எழுந்துள்ளோம். எங்களுக்கு உயிர் கொடுத்த மாவீரனே! உன் புகழ் எப்போதும் என்றென்றும் வாழ்க என வாழ்த்தினர். அனுமன் ஒன்றும் பேசாமல் அடக்கத்தோடு ராமரை வணங்கினான்.


குறிப்பு:-
~~~

★கலிபோர்னியாவில் உள்ள  
பெர்க்லி பல்கலைக்கழக சம்ஸ்கிருத பேராசிரியரான ஆர்.பி.கோல்ட்மேன் அனுமனின் வேகத்தையே கணக்கிட்டு விட்டார்.சஞ்சீவி மலை இருந்த இடத்திற்குச் சென்று அதைப் பெயர்த்து இலங்கைக்கு வான்வழியே வந்து திருப்பி அதை எடுத்த இடத்திலேயே வைக்க அவர் பறந்த வேகம் சுமார் மணிக்கு 660 கிலோமீட்டர் இருக்க வேண்டும் என்பது அவரது கணிப்பு.

(Robert Philip Goldman (born 1942) is the William and Catherine Magistretti Distinguished Professor of Sanskrit at the Department of South and Southeast Asian Studies at the University of California, Berkeley. He is also the winner of the Sanskrit Award for 2017 by the Indian Council on Cultural Relations (ICCR) as well as a Fellow of the American Academy of Arts and Sciences since April 1996.)