விஷ்ணு புராணம் - பகுதி 108... உஷையின் கனவும் காதலும்...
விஷ்ணு புராணம் - பகுதி 108
உஷையின் கனவும் காதலும்
====================
தூய்மையற்ற எண்ணம் கொண்டு நேற்மையற்ற வழியில் சம்பாதிக்கும் பணம்,பதவி,புகழ் போன்றவை பாதகத்தை ஏற்படுவது மட்டும் இல்லாமல் எதிர்பாராத விதமாக அவர்களுக்கே துன்பத்தை தருமம்ஒருவரின் எண்ணங்களானது கடந்த கால நிகழ்வுகளின் அனுபவத்தில் ஏற்படுவது உண்டு சில நேரங்களில்.அந்த நேரங்களில் எடுக்கும் தீர்மானம் எதிர்கால நலன் கருதியே அமைய வேண்டும்.சில பல தடைகள் ஏற்படும் அந்த நேரத்தில்.அதை தகர்த்து எறிய வேண்டும் தன் சுய புத்தியால்:பரமாத்மா 🚩🌙
"மைத்ரேயரே! ருக்குமணிப் பிராட்டிக்கு பிரத்தியும்னன் முதலிய குமாரர்கள் பிறந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா? மற்றவர்களுக்குச் சொல்கிறேன், கேட்பீராக, சத்தியபாமைக்குப் பானு, பவுமன், இரிகன் முதலிய குமாரர்கள் அவதரித்தார்கள்- தீப்திமான், தாம்பிரபக்ஷன் முதலியவர் ரோகிணியின் பிள்ளைகள். சாம்பன் முதலியோர் ஜாம்பவதியின் பிள்ளைகள். பத்திரவிந்தாதிகள் நாக்னஜிதியின் பிள்ளைகள். சயிப்பியை என்பவளுக்கு சங்கிராமஜித்து முதலியோர் பிறந்தார்கள். விருகன் முதலியவர்கள் மந்திரியிடம் உதித்தவர்கள். காத்திரவான் முதலியோர் லஷ்மணையின் புதல்வர்கள். சுரதன் முதலியோர் காளிந்தியின் மக்கள். மற்ற தேவிமாரிடத்தில் பலர் பிறந்தனர். இவ்வாறு பல தேவிமார் மூலம் ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பிறந்த குமாரர்கள் எண்பதினாயிரத்து நூற்றுவராகும். இவர்கள் யாவருக்கும் எல்லா வகையிலும் மூத்தவன் பிரத்தியும்னன்! அவன் குமாரன் அநிருத்தன். அவன் குமாரன் வஜ்ரன் அநிரு தன் என்பவன் பலிச்சக்கர வர்த்தியின் பேர்த்தியும் பாணனுடைய மகளுமான உஷை என்பவளைத் திருமணஞ் செய்து கொண்டான். அதன் காரணமாக ஸ்ரீகிருஷ்ணனுக்கும் சங்கரனுக்கும் கொடிய யுத்தம் உண்டாயிற்று. அதில் ஸ்ரீ கிருஷ்ணன் பாணாசுரனின் ஆயிரம் தோள்களையும் துண்டித்து விட்டார்! இவ்வாறு பராசர மகரிஷி கூறிவரும்போது மைத்ரேயர் குறுக்கிட்டு அவரை நோக்கி, மாமுனிவரே! உஷையின் காரணமாக ஹரிஹரர்களுக்கு எப்படிப்போர் உண்டாயிற்று? ஸ்ரீ ஹரி, எப்படிப் பாணனுடைய தோள்களைத் துண்டித்தார்? இவற்றை எனக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டார். அதற்குப் பராசர முனிவர் சொன்னதாவது:
கேளும் மைத்ரேயரே! பாணன் என்னும் அசுரனுக்கு உஷை என்னும் ஒரு புதல்வி இருந்தாள். ஒரு சமயம் சிவனோடு கூடி மகிழ்ந்து கொண்டிருந்த பார்வதியை உஷை பார்த்துவிட்டு, அதுபோலத் தானும் கூடிமகிழவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளது கருத்தை அறிந்த பார்வதி அவளைப் பார்த்து, பெண்ணே! நீ ஏன் இப்படித் தவிக்கிறாய்? உன் புருஷனுடன் கூடி நீயும் இப்படிக் கிரீடிப்பாய்! என்றாள். அதைக் கேட்ட உஷை, இந்தச்சுகம் எனக்கு எப்பொழுது கிட்டுமோ? என் புருஷன்தான் எவனோ? என்றாள். அதற்குப் பார்வதி, ஓ ராஜகுமாரி! வைகாசி மாதச் சுக்கில பக்ஷத் துவாதசியில், உன் கனவில் எவன் உன்னோடு ரமிப்பானோ, அவனே உனக்குக் கணவனாவான்! என்று கூறியருளினாள்.
பிறகு பார்வதி சொன்னதுபோல அந்த நாளில் ஒரு புருஷனோடு உடலுறவு கொண்டதாக உஷை கனவு கண்டு அவனிடத்திலேயே ஆசை மிகுந்தவளாய்க் கண்விழித்தாள். அந்த புருஷனைக் காணாமல் என் பிராண நாயகா! நீ எங்கே போனாய்? என்று நாணமின்றி விரகதாபத்தோடு புலம்பினாள். அதை அவளுடைய தோழியான சித்திரலேகை கேட்டு விட்டாள். உஷையின் தந்தையான பாணாசுரனுக்கு மந்திரியாக விளங்கும் பாண்டனின் மகள்தான் சித்திரலேகை. உஷையின் தோழியாக இருந்த அவள், உஷையிடம் நீ யாரைப்பற்றி இப்படிப் புலம்புகிறாய்? என்று கேட்டாள். உஷையோ வெட்கத்தால் அவளிடம் ஒன்றும் பேசாமல் இருந்தாள். சித்திரலேகை தன்மீது நம்பிக்கை ஏற்படும்படி உஷையை சமாதானம் செய்தாள். பிறகு உஷை, தான் கனவுகண்ட கனவு நிகழ்ச்சிகளையும் பூர்வத்தில் தன்னிடம் பார்வதி தேவி சொன்னதையும் சொல்லி, அடி தோழி! இவ்விதமான புருஷனை நான் அடைவதற்கு எது உபாயமோ, அதை நீயே செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதற்கு சித்திரலேகை, அடி என்னுயிரே! நீ சொன்ன சங்கதி அறிவதற்கே கஷ்டமானது. சொல்லவும் அடையவும் இயலாதது. ஆனாலும் நான் உனக்கு உபகாரம் செய்ய வேண்டும். ஆகவே நான் முயற்சி செய்கிறேன். நீ ஏழெட்டு நாட்கள் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லி, ஓர் உபாயம் செய்ய யோசித்தாள். அதன்படிச் செய்யலானாள்."
"அதாவது தேவர்கள், கந்தர்வர், அசுரர், மனிதர் முதலியவர்களில் முக்கியமாயுள்ள வாலிபர்களின் உருவங்களையெல்லாம் ஓவியமாக சித்திரலேகை வரைந்து அந்த ஓவியங்களை யெல்லாம் ஒவ்வொன்றாக உஷையிடம் காண்பித்தாள். அவற்றை அவள் காண்பித்து இவர்களில் உன் காதலன் யார் என்று கேட்டாள். உஷையோ ஓவியத்தில் இருந்த தேவ, தானவ, கந்தர்வர்கள் அனைவரையும் விட்டுவிட்டு, மனிதர் வரிசையில் பார்த்தாள். அதில் யாதவர்களில் கண் வைத்தாள். கண் வைத்து ஸ்ரீராமகிருஷ்ணர்களைக் கண்டு வெட்கப்பட்டவளாகிப் பிரத்தியும்னனைக் கண்டு நாணிக் கண்ணை அப்புறம் போக்கி, கடைசியில் அநிருத்தனைக் கண்டு நாணந் துறந்து இவன்தான் என் கனவில் வந்தவன்! என்னைக் கனவிலே கலந்து மகிழ்ச்சி தந்தவன்! அந்தக் கனவு நாயகன் இவனேதான் என்றாள். அதைக்கேட்டதும் சித்திரலேகை மகிழ்ந்தாள். அவள் தனது யோகவித்யா பலத்தால் வானத்திற் செல்லக்கூடிய வல்லமையுடையவள். ஆகையால் அவள், உஷையை நோக்கி, ஸ்திரீ ரத்தினமே இவன் ஸ்ரீகிருஷ்ணனுடைய பேரன் இவன் பெயர் அநிருத்தன். அழகும் வீரமும் கொண்ட புகழ் பெற்றவன். இவனையல்லவா பராசக்தி உனக்குப் பர்த்தாவாக அணுகிரகித்தாள்? நீ இவனைப் பெறுவாயானால் எல்லாச் செல்வங்களையும் நீயே பெற்றதுபோல் வாழலாம். இவன் வாசஞ்செய்யும் துவாரகையோ யாரும் பிரவேசிக்க முடியாதது. ஆயினும் என்னால் இயன்றவரை முயன்று பார்க்கிறேன். உன் கனவு நாயகனை இங்கே கொண்டு வருகிறேன். இந்த ரகசியத்தை வேறு யாருக்கும் சொல்லிவிடாதே! நான் விரைவில் வந்துவிடுகிறேன் என்று உஷைக்குச் சமாதானம் சொல்லிவிட்டு சித்திரலேகை விண்வெளி வழியாகத் துவாரகைக்குச் சென்றாள்."
🙏
திருவரங்கத்து மாலை - 016 /114 :
🙏
🙏
அரங்கன் ; அண்டங்களை ; அப்பில் , குமிழ் என ; ஆக்கினான் !
🙏
வாரித் தலமும் , குல பூ தரங்களும் , வானும் , உள்ளே ,
பாரித்து , வைத்த , இவ்வண்டங்கள் , யாவும் , படைக்க ; முன் நாள் ,
வேரிப் பசுந்தண் , துழாய் , அரங்கேசர் , விபூதியிலே ;
மூரிப் புனலில் , குமிழ்கள் போல் , முளைத்தனவே !
🙏
பதவுரை :
🙏
வாரித் தலமும் ..............................கடல் சூழ்ந்த , உலகங்களையும் ;
குல பூ தரங்களும் ..........................பூமியைத் தாங்கும் , சிறந்த மலைகளையும் ;
வானும் உள்ளே பாரித்து வைத்த ....வானையும் ; தன்னிடம் , பரப்பி வைத்துள்ள ,
இவ்வண்டங்கள் யாவும் ..................இந்த அண்டங்கள் , யாவும் ;
முன் நாள் .....................................ஆதி காலத்தில் ,
வேரிப் பசுந்தண் ..........................தேனை உடைய , பசுமையான , குளிர்ந்த ,
துழாய் .........................................திருத்துழாய் மாலை ,
அரங்கேசர் படைக்க ...................அணிந்த , திரு அரங்க நாதர் ; படைத்தவுடன் ,
விபூதியிலே .................................அவருடைய , லீலா விபூதியிலே ,
மூரிப் புனலில் ..............................பெரு வெள்ளத்தில் , குமிழ்த்த ,
குமிழ்கள் போல் முளைத்தனவே ...நீர்க் குமிழிகள் போல் , ஒரே கணத்தில் , தோன்றின !
🙏
🙏
தொடரும்...
ஓம் நமோ நாராயணாய!