பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது...
பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி கர்நாடக மாநிலத்தில் வைத்து தமிழக போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது, 2016-2021 வரை, கே டி ரஜேந்திர பாலாஜி, தமிழக பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது தனது பதவியை பயன்படுத்தி, 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளார்.

மோசடி சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனிடையே அவர் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதையடுத்து, பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், கேடி ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவருக்கு எதிராக தமிழக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்து, தலைமறைவானவரை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜியை தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.  ராஜேந்திர பாலாஜி மற்றும் உதவியாளர்கள் மூவர் மீது 5 பிரிவுகளின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை ஹசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, தமிழகம் அழைத்து வந்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே, ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.