ஶ்ரீராம காவியம்... 
இந்திரஜித்தும்
வீழ்ந்தான்...
ஶ்ரீராம காவியம்
~~~~~

இந்திரஜித்தும்
வீழ்ந்தான்...

★மாவீரனான இந்திரஜித் லட்சுமணனை பார்த்து, லட்சுமணா! இப்பொழுது நான் விடும் அஸ்திரத்தால் நிச்சயம் நீ மாண்டொழிவாய். உன்னால் இதிலிருந்து தப்பிக்க முடியாது எனக் கூறி விட்டு மிகச்சிறந்த சக்தி பொருந்திய அஸ்திரமான நாராயணஸ்திரத்தை ஏவினான்.
அந்த அஸ்திரம் லட்சுமணனை நோக்கி மிக வேகமாக பாய்ந்து வந்தது. லட்சுமணன், சிறிதும் தயக்கம் இல்லாமல் பரமாத்மா ஶ்ரீநாராயணனை பிரார்த்திக் கொண்டு அதே அஸ்திரத்தைக் கொண்டு, அந்த இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தைத் தாக்கி    தூள்தூளாக்கினார்.

★இதைப் பார்த்த இந்திரஜித் மிகவும் கோபங்கொண்டு, இதற்கெல்லாம் விபீஷணன் தான் காரணம் என்று கூறி, அவனை கொல்ல ஓர் திவ்ய அஸ்திரத்தை ஏவினான். அந்த அம்பு விபீஷணனை நோக்கி வரும்போது, லட்சுமணன் அதையும் உடைத்தெறிந்தார். பிறகு இந்திரஜித் அங்கிருந்து மறைந்து அரண்மனையில் வீற்றிருக்கும் ராவணன் முன் தோன்றினான். இந்திரஜித் ராவணனை பார்த்து, உங்கள் தம்பி விபீஷணனால் இன்று என் யாகம் தடைப்பட்டு போனது என  கோபததுடன் கூறிவிட்டு பிறகு அங்கு நடந்த போரை பற்றிக் கூறினான். லட்சுமணனின் வில்வேகத்தையும், மற்றும் போர்திறமையையும் பற்றிக் கூறினான்.

★அதனால் நீங்கள்  சீதையை மறந்து விடுங்கள். இதுவே உங்களுக்கு நன்மை. அவர்களும் போரை நிறுத்திக் கொள்வார்கள் எனக் கூறினான். ராவணன் கோபத்துடன், நான் சீதையை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு பதில், அவர்கள் முன் என் உயிரைத் துறப்பது மேல். உனக்கு போருக்குச் செல்ல பயமாக இருந்தால் என்னிடம் சொல், நானே போருக்குச் செல்கிறேன் எனக் கூறினான். பிறகு இந்திரஜித் ராவணனிடம், தந்தையே! தாங்கள் கோபம் கொள்ள வேண்டாம். நானே போருக்கு செல்கிறேன் என்றான். இந்திரஜித் தன் தந்தை ராவணனிடம் இருந்து விடைப்பெற்று போர் நடக்கும் இடத்திற்கு மீண்டும்  சென்றான்.

★அங்கு லட்சுமணனுக்கும் இந்திரஜித்துக்கும் கடும்போர் நடந்தது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சரிசமமாக யுத்தம் செய்து தங்கள் வலிமையை காண்பித்தார்கள். லட்சுமணன், ஒரு அம்பை ஏவி இந்திரஜித்தின் தேரை உடைத்தெறிந்தார். பிறகு இந்திரஜித் கையில் வாளை ஏந்திக் கொண்டு வானத்தில் சென்று மறைய முற்பட்டான். அப்போது லட்சுமணன், அம்பை எய்தி இந்திரஜித்தின் வாள் ஏந்திய  கையை வெட்டினான். தன் கையை இழந்த நிலையில் இந்திரஜித் லட்சுமணனை நோக்கி, ஒரு சூலாயுத்தை வீசினான். லட்சுமணன் அதையும் உடைத்தெறிந்தார்.

★இறுதியில் லட்சுமணன் இந்திராஸ்திரத்தை எடுத்து, ராமர் தர்மத்தை கடைபிடிப்பது உண்மையானால் இந்த அம்பு இந்திரஜித்தை அழிக்கட்டும் என்று சொல்லி அந்த அம்பை செலுத்தினான். அம்பானது  இந்திரஜித்தின் கழுத்தைத் துளைத்து தலையை துண்டாக்கி அவனது உயிரைப் பிரித்தது. இதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ச்சி அடைந்து மலர் தூவி லட்சுமணனை பாராட்டினார்கள். இந்திரஜித் கொல்லப்பட்டதும் யுத்த களத்தில் இருந்த  எல்லா ராட்சதர்களும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். லட்சுமணன் காயத்துடன் யுத்தம் செய்த களைப்பில் அனுமன் மீது சாய்ந்து நின்றான்.

★விபீஷணன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து லட்சுமணனை பாராட்டினான்.மாவீரனும், மந்திர வேலையில் வல்லவனுமான இந்திரஜித் அந்த இடத்திலேயே தன் உயிரை விட்டான். இதைக் கண்டு விபீஷணன் மகிழ்ச்சி அடைந்து ஆர்ப்பரித்தான். வானரர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். தேவர்கள் லட்சுமணனை வாழ்த்தி பூமாரி பொழிந்தனர். பிறகு அங்கதன், இந்திரஜித்தின் தலையை கையில் ஏந்திக் கொண்டும், அனுமன் லட்சுமணனை தனது தோளில் ஏற்றிக் கொண்டும் ராமரிடம் இச்செய்தியைக் கூறச் சென்றனர்.

★ராமரிடம் வந்த லட்சுமணன் அவரை வணங்கி நின்றான். இந்திரஜித் இறந்ததைக் கேட்டு ராமர், லட்சுமணனை தழுவிக் கொண்டு, ராவணனுக்கு இனி யார் இருக்கிறார்கள்? அவனின் முடிவு காலம் வந்து விட்டது எனக்கூறி தன் மகிழ்ச்சியை காட்டினார். தேவலோகத்தில் இந்திரனை அடக்கி வெற்றி பெற்றவனும், எவராலும் வெற்றி கொள்ள முடியாத இந்திரஜித்தை அழித்து விட்டாய். உனது இந்த காரியத்தால், விரைவில் நாம் சீதையை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது என்று லட்சுமணனை கட்டி அணைத்து பாராட்டினார் ராமர்.

★பிறகு ராமர் லட்சுமணனிடம், தம்பி லட்சுமணா! இந்த வெற்றிக்கு நீயும் காரணம் இல்லை, நானும் காரணம் இல்லை. இதற்கு காரணம் விபீஷணன் தான் எனக் கூறி விபீஷணனை பாராட்டினார். பிறகு அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.