சுந்தரர் தேவாரம் - திரு வீழி மிழலை...
சுந்தரர் தேவாரம்:
திரு வீழி மிழலை .
நம்பினார்க்கு அருள் செய்யும்
அந்தணர்
நான் மறைக்கு இடமாய
வேள்வியுள்
செம்பொன் நேர்
மடவார் அணி பெற்ற
திருமிழலை
உம்பரார் தொழுது ஏத்த
மா மலையாளோடும் உடனே உறைவிடம்
அம்பொன் வீழி கொண்டீர்
அடியேற்கும் அருளுதீரே.
நான்கு வேதங்களையும் கற்று அவற்றுக்கு இடமாய் விளங்கும் வேள்வியையும் உலகம் வாழ நடத்தி வரும் அந்தணர்கள் மட்டுமல்ல, அவனை முழுமையாக நம்பினவர்களுக்கும் அருள் செய்வான் இறைவன்.
அவன்,
செம்பொன் போன்ற அழகு மிக்க மடவார்- மாதர்கள் வாழும் அணியழகு பெற்ற திருவீழிமிழலை எனும் தலத்தில், உம்பரார்- தேவர்களால் தொழுது ஏத்தி வணங்கப் படுகிறான்,
பெரிய மலைகளை உடைய இறைவியோடும் உடனே உறைந்து வாழும் இடமாக இத்தலத்தை கொண்டதோடு, அழகிய பொன் போன்ற வீழிச் செடிகளை தலமரமாக கொண்டு உள்ளீரே, இறைவா,
இந்த அடிமைக்கும் அருள் செய்வீரே.
திருச்சிற்றம்பலம்.