ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு திட்டம் வெளியீடு.... 9,494 காலியிடங்கள்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 9,494 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.

இந்தநிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் 2022 ஆம் ஆண்டில் 6 தேர்வுகளை நடத்துவதன் மூலம் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள 9,494 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர திட்டத்தை இன்று (23.01.2022) வெளியிட்டுள்ளது

ஆண்டுத் திட்டத்தின் படி, 2,407 பணியிடங்களை நிரப்புவதற்கான முதுகலை ஆசிரியர் தேர்வு பிப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும், பெரும்பாலானோர் எதிர்ப்பார்க்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். 3,902 இடைநிலை ஆசிரியர்கள், 1,087 பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட மொத்தம், 4,989 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

SCERTயில் 167 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,334 உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 493 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2022 நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது.

அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 104 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது.