எங்கெல்லாம் நிற்கும்... கட்டணம் எவ்வளவு...  நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில்...

எங்கெல்லாம் நிற்கும்? கட்டணம் எவ்வளவு? - நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் ...

தென் தமிழகத்தில் இருந்து காலையில் சென்னைக்கு செல்வோருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கக் கூடியது வைகை அதிவிரைவு இரயில் தான். கடந்த 47 ஆண்டுகளாக மக்களின் பேராதரவுடன் இந்த ரயில் இயங்கி வருகிறது.

வைகை அதிவிரைவு ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:10 மணிக்குப் புறப்பட்டு 495 கி.மீ தூரத்தை 7 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்து சென்னை எழும்பூரை 2:25 மணிக்கு சென்றடையும். கடந்த ஆண்டு வேகமாக இயக்கி 6 மணி நேரம் 34 நிமிடங்களில் சென்னை எழும்பூரை சென்றடைந்து சாதனை படைத்தது. வைகை ரயிலில் மொத்த இருக்கைகள் ஆயிரத்துக்கும் மேல் உள்ளன.

கடந்த 2019 மார்ச் முதல் மதுரை- சென்னை இடையே தேஜஸ் சொகுசு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காலை 6 மணிக்கு சென்னையில் புறப்படும் இந்த ரயில் 12:30 மணிக்கு மதுரை வந்தடைகிறது. மாலை 3 மணிக்கு மதுரையில் புறப்படும் ரயில் சென்னையை 9:30 மணிக்கு சென்றடைகிறது.

இது மொத்தமாக 900 சொகுசு இருக்கைகளைக் கொண்ட ரயிலாக வடிவமைக்கப்பட்டு மக்களின் ஆதரவுடன் இயங்கி வருகிறது.

தற்பொழுது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதிலும் வந்தே பாரத் என்ற பெயரில் அதி நவீன வசதிகளுடன் சொகுசு ரயில்கள் முக்கிய நகரங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற 24-ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 9 வந்தே பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.

அதில் தென் தமிழகத்தில் மிக முக்கியமான மாவட்டம் வழியாக தலைநகரை அடையும் விதமாக (20665/20666) திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட இருக்கிறது.

எந்தெந்த ரயில் நிலையங்களில் இந்த 'வந்தே பாரத்' ரயில் நின்று செல்லும்?

இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மற்றும் தாம்பரம் ஆகிய 6 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்கிறது.

வாரத்தில் செவ்வாய்கிழமையை தவிர்த்து மற்ற 6 நாட்கள் இயக்கப்படும்.


வந்தே பாரத் ரயில் என்ன வசதிகள் உள்ளன?

இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கின்றன. அதில் 7 பெட்டிகளில் குளிரூட்டப்பட்ட சாதாரண இருக்கைகள் மற்றும் ஒரு பெட்டியில் எக்ஸிக்யூடிவ் அதி நவீன இருக்கைகள் என மொத்தமாக 540 இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

திருநெல்வேலியில் அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை 1:50 மணிக்கு சென்றடையும்.

மறு மார்க்கத்தில் பிற்பகல் 2:50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. இந்த வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 8 மணி நேரத்திற்கு குறைவாகவே இருக்கிறது.

இது திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வோருக்கு மட்டுமல்லாது, பயணம் செய்யும் வழியில் நின்று செல்லும் மாவட்டங்களில் இருந்து பயணிப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த வந்தே பாரத் ரயிலை தவிர்த்து மற்ற ரயில்கள் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன.

பொதுவாக நெல்லையிலிருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் கிட்டத்தட்ட 11 மணி நேரத்துக்கும் மேல் எடுத்துக் கொள்கின்றன. தற்போது, இந்த வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்தில் சென்னை சென்றடையும். இதனால் ரயில் பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த ரயில் சேவைக்காக காத்திருக்கின்றனர்.

"சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் முதன்மையான ரயில் சேவையாக மாறப் போகிறது," என்கிறார் ரயில்களின் ஆர்வலராக இருக்கும் அருண்பாண்டியன்.

மேலும் அவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "நான் ரயில் பயணத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவன். அனைத்து ரயில்களிலும் பயணம் செய்து இருக்கிறேன். டெல்லியில் இயக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ரயிலிலும் பயணம் செய்தேன்.

தற்போது, திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் புதிதாக இயக்கப்படவுள்ளது. வரும் 24-ஆம் தேதி முதல் இந்த ரயில் தனது பயணத்தைத் தொடங்கவுள்ளது. இந்த ரயில் சேவையை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நெல்லையில் இருந்து சென்னைக்கு சொகுசு பேருந்தில் சென்றால் ரூ. 1000 முதல் 1200 ரூபாய் வரை பயணக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், 11 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.

சென்னை- நெல்லை இடையேயான தூரம் 653 கிலோ மீட்டர். எனவே அதற்கு வந்தே பாரத் ரயிலில் இதே வழித்தடத்துக்கு ரூ. 1,600 கட்டணம் நிர்ணயிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. 400 ரூபாய் கூடுதலாக கட்டணம் செலுத்தினால் போதும் இனி வரும் நாட்களில் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு 8 மணி நேரத்தில் சென்றடைய முடியும்," என்றார்.

இந்த வந்தே பாரத் ரயில் அதிநவீன வசதிகளுடன் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சொகுசு ரயில். மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுவதால் விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

வந்தே பாரத் ரயிலின் வேகம் என்ன தெரியுமா?

வைகை, பாண்டியன் போன்ற அதி விரைவு ரயில்கள் 110 கி.மீ வேகத்தை எட்ட 1.25 கிலோ மீட்டர் தூரம் தேவைப்படும். ஆனால் இந்த வந்தே பாரத் ரயில் 500 மீட்டரிலேயே 110 கிலோ மீட்டர் வேகத்தை அடையும் திறன் கொண்டது என்றார்.

மேலும் பேசிய அவர், சென்னை- விருத்தாச்சலம் இடையே தற்போது நடைபெற்று வரும் ரயில் பாதை பணிகள் நிறைவடைந்தால் இந்த வந்தே பாரத் ரயில் வரும் காலங்களில் 7 மணி நேரம் 30 நிமிடங்களில் நெல்லையில் இருந்து சென்னை சென்று சேர வாய்ப்பு இருக்கிறது என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரயில் நிறுத்தம் வேண்டும் என பயணிகள் கோரிக்கை

நெல்லையிலிருந்து சென்னை செல்லும் இந்த ரயில் தூத்துக்குடி மாவட்ட மக்களை கருத்தில் கொண்டு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றனர். அதில், தினசரி 50 முதல் 60 பயணிகள் இதில் பயனடைய வாய்ப்பு இருக்கிறது.

"எத்தனை ரயில்கள் வந்தாலும் வைகை ரயிலின் சேவையை யாராலும் ஒதுக்கிவிட முடியாது. அது எளிய மனிதர்களுக்கான ரயில் மட்டுமல்ல, அது எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும்," என அருண்பாண்டியன்கூறினார்.

"இந்த வந்தே பாரத் ரயிலில் அதிநவீன வசதிகள் இருப்பதால் மக்கள் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது," என கூறுகிறார் ரயில்வே அதிகாரி ஒருவர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் மேலும் பேசிய அவர், "செப்.22ம் தேதி வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த வந்தே பாரத் ரயில் நெல்லையில் காலை 6 மணிக்கு கிளம்பி விருதுநகரில் 7:13மணி, மதுரையில் 7:50 மணி, திண்டுக்கல் 8:40 மணி, திருச்சி 9:50மணி, விழுப்புரம் 11:54 மணி, தாம்பரம் 1:13 மணிக்கு நின்று சென்னை எழும்பூர்1:50 மணிக்கு சேரும்.

இந்த ரயிலில் முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டி, மொபைல் சார்ஜிங் வசதி, நவீன கழிப்பறை, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேக கழிப்பறை வசதி உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த ரயில் தென் தமிழகத்தில் மிக முக்கியமான ரயிலாக விளங்கும். சிறப்பு பெட்டியில் இருக்கையை ஜன்னலைப் பார்த்தபடி திருப்பி இயற்கை அழகை ரசித்தபடியே பயணம் செய்யலாம்", என்றார்.