‘பழைய கணக்கைத்’ தீர்த்த நியூசிலாந்து - உலகக் கோப்பை கிரிக்கெட் 2023
கடந்த 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டமும், சூப்பர் ஓவரும் டையில் முடிந்து, பவுண்டரி அடித்த கணக்கில் இங்கிலாந்திடம் கோப்பையை பறிகொடுத்தது நியூசிலாந்து.
அந்தத் தோல்விக்கு பதில்சொல்லும் வகையில் இந்த ஐ.சி.சி உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்திலேயே, இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தனது இரு பேட்டர்களான டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பெற்றுத்தந்த வெற்றியால் ஆசுவாசமடைந்திருக்கிறது.
ஆமதாபாத்தில் நேற்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது. 283 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பயணித்த நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
‘யாரும் வேண்டாம், நாங்க போதும்’
அணியில் வில்லியம்சன் இல்லை, டிம் சவூதி இல்லை, பெர்குஷன் இல்லை, பிரேஸ்வெல் கிடையாது… இருப்பினும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தைத் தோற்கடித்திருக்கிறது நியூசிலாந்து.
நியூசிலாந்து அணியின் இளம் பேட்டர்களான டேவன் கான்வே 152 ரன்களுடனும் (19 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்), ரச்சின் ரவீந்திரா 123 ரன்களுடனும்(11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
பந்துவீச்சில் ஒரு விக்கெட்டை எடுத்து, உலகக் கோப்பை அறிமுக ஆட்டத்திலேயே குறைந்த பந்துகளில் சதமும் அடித்த ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
காயத்திலிருந்து வில்லியம்ஸன், பெர்குஷன் திரும்ப வந்தாலும், தன்னுடைய இருப்பை ஆழமாகப் பதித்துவிட்டார் இளம் வீரர் ரவீந்திரா. இந்தத் தொடரில் அவர் அடித்த முதல் சதம், நியூசிலாந்து அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துவிட்டார்.
சதம் அடிக்க உதவிய கான்வே
ஆட்டநாயகன் விருது வென்ற ரவீந்திரா பேசுகையில், “சில நேரங்களில் நம்பமுடியாத தருணங்கள் நடக்கும். ஆனால், எனக்கு இது மிகவும் ஆகச் சிறந்தநாள். எங்கள் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, டேவனுடன் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளேன். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். டேவனுடன் நான் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது நான் சதம் அடிக்க இன்னும் கூடுதலான வசதி செய்தது,” என்றார்.
மேலும், “இன்னும் 4 முதல் 5 ஆண்டுகளில் டேவன் எத்தகைய பேட்டராக மாறப்போகிறார் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றதாக இருந்தது. பேட்டிங் செய்ய அருமையாக இருந்தது. ஹைதராபாத் ஆடுகளத்தைப்போன்றே இருந்தது,” எனத் தெரிவித்தார்.
சதம் அடிப்பதில் சாதனை
உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை (88 பந்துகள்) இதுவரை மார்டின் கப்தில் வைத்திருந்தார். அந்தச் சாதனையை நேற்றைய ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திரா, கான்வே இருவரும் முறியடித்தனர்.
கான்வே 83 பந்துகளில் சதம் அடிக்க, ரவீந்திரா அதினினும் ஒரு பந்து குறைவாக 82 பந்துகளில் சதம் கண்டு வரலாற்றில் முத்திரை பதித்தார்.
அது மட்டுமல்லாமல் 23 வயதிலேயே நியூசிலாந்து அணிக்காக உலகக் கோப்பைப் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் ரச்சின் ரவீந்திராவுக்கு கிடைத்திருக்கிறது.
வெலிங்டன் உள்ளூர் அணியைச் சேர்ந்த நண்பர்களான டேவன் கான்வே, ரவீந்திரா இருவரும் 2வது விக்கெட்டுக்கு, 273 ரன்கள் சேர்த்தனர். இதுதான் உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக சேர்க்கப்பட்ட பார்ட்னர்ஷிப்பாகும்.
உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி 250 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கை அதிகவேகமாக இந்தப் போட்டியில்தான் சேஸிங் செய்துள்ளது.
பவுண்டரி மழை
இந்த ஆட்டத்தில் மட்டும் நியூசிலாந்து அணியின் கான்வே, ரவீந்திரா இருவரும் சேர்ந்து 30 பவுண்டரிகளையும், 8 சிக்ஸர்களை விளாசினர்.
இங்கிலாந்து அணி 21 பவுண்டரிகளையும், 5 சிக்ஸர்களும் அடித்தது.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 283 ரன்கள் எனும் இலக்கை 36 ஓவர்களிலேயே நியூசிலாந்து அடைந்து, இந்தத் தொடரில் உள்ள மற்ற அணிகளுக்கு ஒரு சவாலை விடுத்துள்ளது.
ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாத சான்ட்னர்
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. மாட் ஹென்றி 48 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளையும், மிட்ஷெல் சான்ட்னர் 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
அதில் சான்ட்னர் நேற்றைய ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசியும், இங்கிலாந்து பேட்டர்களை ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய சினாமென் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இதேபோன்று பவுண்டரி அடிக்கவிடாமல் பந்துவீசினார். அதன்பின் 5 ஆண்டுகளுக்குப்பின் சான்ட்னர் அதை நிகழ்த்திக்காட்டியுள்ளார்.
கான்வே இந்த ஆண்டில் அடித்த 4-வது சதம்
டேவன் கான்வே நேற்றைய ஆட்டத்தில் அடித்த சதம், இந்த ஆண்டில் அவர் அடிக்கும் 4-வது சதமாகும். இது ஒருநாள் போட்டிகளில் அவர் ஒட்டுமொத்தமாக அடித்த 5வது சதமும் ஆகும். உலகக் கோப்பைப் போட்டியில் கான்வே அடிக்கும் முதல் சதமாகும்.
அதேபோல ரச்சின் ரவீந்திரா 12 போட்டிகளில் அடித்த முதல் சதம் மற்றும் உலகக் கோப்பைத் தொடரில் அடித்த முதல் சதமும் இதுவாகும்.
நியூசிலாந்து அணியின் வழக்கமான கேப்டனான கேன் வில்லியம்ஸன் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில், அவருக்குப் பதிலாக அவரின் இடத்தில் ரவீந்திரா களமிறக்கப்பட்டார்.
பந்துவீச்சில் ரவீந்திரா 10 ஓவர்களில் 76 ரன்களை வாரி வழங்கினாலும், பேட்டிங்கில் தான்பந்துவீச்சில் வழங்கிய 76 ரன்களை 60 பந்துகளில் சேர்த்து ஈடு செய்துவிட்டார்.
வலுவான ரச்சின்-கான்வே கூட்டணி
நியூசிலாந்து அணி தனது சேஸிங்கைத் துவங்கியவுடன் வோக்ஸ் வீசிய முதல் பந்திலும், 5வது பந்திலும் பவுண்டரி அடித்தார் கான்வே.
ஆனால், சாம் கரன் தனது முதலாவது ஓவரின் முதல் பந்தில் வில்யங்கை டக்-அவுட்டில் வெளியேற்றினார்.
3-வது வீரராக ரவீந்திரா களமிறங்கி, கான்வேயுடன் சேர்ந்தார். இருவர் மட்டுமே ஆட்டத்தை முடித்துவைக்கப் போகிறார்கள் என்று அப்போது இங்கிலாந்து அணிக்குத் தெரியவில்லை. சாம் கரன் 2 மெய்டன் ஓவர்களை வீசி, கட்டுக்கோப்பாக பந்துவீசினாலும் சாம் கரன் வீசிய 35-வது ஓவரில் கான்வே 20 ரன்களைச் சேர்த்தார்.
ரவீந்திராவின் அபார சிக்ஸர்
ரவீந்திராவின் பேட்டிங் எந்த பந்து வீச்சாளரையும் சட்டை செய்யாத வகையில் இருந்தது.
அதிலும் 148 கி.மீ. வேகத்தில் மார்க் வுட் வீசிய பந்தை ஸ்குயர்லெக் திசையில் பிளாட் சிக்ஸர் அடித்து ரவீந்திரா அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேசப் போட்டிகளில் குறைந்த அனுபவம் கொண்டராக இருந்தாலும், ரவீந்திராவின் பேட்டிங் அனுபவம் முதிர்ந்த பேட்ஸ்மனைப் போல இருந்தது.
கான்வே-ரவீந்திரா ஜோடி சேர்ந்ததும், நியூசிலாந்து ரன்ரேட் பறந்தது. 6.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 50 ரன்களை எட்டியது. அதிலும் மார்க்வுட் ஓவரில் இருவரும் அபாரமாக ஆடினர்.
வுட் வீசிய முதல் 3 ஓவர்களில் 38 ரன்களை வாரி வழங்கினார். 100 ரன்களை நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களிலும், 200 ரன்களை 26.5 ஓவர்களிலும் நியூசிலாந்து எட்டியது. 34.1 ஓவர்களில் 250 ரன்களை எட்டி இங்கிலாந்து வீரர்களை வாய்பிளக்க வைத்தது நியூசிலாந்து.
இங்கிலாந்தின் ஆட்டம் எப்படி இருந்தது?
இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சுமாராகவே இருந்தது, பந்துவீச்சில் படுமோசமாக இருந்து.
300 ரன்களுக்கு மேல் அடிக்கக்கூடிய மைதானத்தில் 282 ரன்கள் சேர்த்ததே பாதுகாப்பில்லாத ஸ்கோர்தான். பந்துவீச்சிலாவது நெருக்கடியளிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், நியூசிலாந்து அணிக்கு பேட்டிங் பயிற்சி அளித்ததுபோன்றுதான் இங்கிலாந்து பந்துவீச்சு இருந்தது.
இங்கிலாந்து அணியில் 11 பேட்டர்களும் நேற்றைய ஆட்டத்தில் இரட்டை இலக்க ரன்களை எட்டி சாதனை படைத்தனர். உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியில் உள்ள 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்களை முதல்முறையாக எட்டினர். இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கேப்டன் பட்லர், ஜோ ரூட் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இருவரும் களத்தில் இருந்தவரை, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 350 ரன்களை எட்டும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், இருவரின் விக்கெட் வீழ்ந்தவுடன் ரன்ரேட்டும் சரிந்துவிட்டது.
ஏமாற்றமளித்த இங்கிலாந்து பேட்டர்கள்
பேர்ஸ்டோ முதல் ஓவரிலேயே பவுண்டரி, சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினாலும், ஹென்றியின் ஓவரில் டேவிட் மாலன் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால் பேர்ஸ்டோ (33) அதிரடியாக பேட் செய்த நிலையில் அவரின் விக்கெட்டை சான்ட்னர் எடுத்து வெளியேற்றினார்.
சான்ட்னரின் பந்துவீச்சு இங்கிலாந்து பேட்டர்களின் ரன்குவிப்பைத் தடுத்து, ரன்ரேட் உயரவிடாமல் பார்த்துக்கொண்டது. சான்ட்னர் 10 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்தாலும் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடவில்லை.
ரவீந்திரா 10 ஓவர்கள் வீசி 76 ரன்களை வாரி வழங்கினாலும் ப்ரூக் (25) விக்கெட்டை வீழத்தி ஆறுதலளித்தார். கவுண்டி கிரிக்கெட்டில் நல்ல ரெக்கார்டை ப்ரூக் வைத்திருந்தும், முதல் ஆட்டத்திலேயே குறைந்த ஸ்கோரில் ஏமாற்றினார்.
இங்கிலாந்து அணியில் திடீரென 5வது பேட்டராக மொயின் அலி களமிறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார். ஐ.பி.எல் தொடரில் அதிரடி காட்டிய மொயின் அலி, உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ஏமாற்றினார். பிலிப்ஸ் ஓவரில் க்ளீன் போல்டாகி 11 ரன்னில் மொயின் அலி வெளியேறினார்.
நியூசிலாந்தின் போனஸ்
அது மட்டுமல்ல நியூசிலாந்து அணியின் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான பிலிப்ஸ் கிடைத்திருப்பது அந்த அணிக்கு போனஸ்தான். ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தில் ஜோ ரூட், மொயின் அலி ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
ஆறுதலான ரூட் ஆட்டம்
இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும், ஜோ ரூட் தடுமாறாமல் விளையாடி, 57 பந்துகளில் அரைசதம் எட்டினார்.
அதிலும் போல்ட் ஓவரில் ரூட் அடித்த ஸ்கூப் ஷாட் சிக்ஸர் அனைவராலும் பேசப்பட்டது. கேப்டன் பட்லர் 43 ரன்களில் ஹென்றி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இருவரும் ஆட்டமிழந்து சென்றபின் இங்கிலாந்து பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டு, கடைசி 31 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
அதிலும் இங்கிலாந்து அணியின் மார்க் வுட், அதில் ரஷித் இருவரும் 10வது விக்கெட்டுக்கு நேற்று 30 ரன்கள் சேர்த்தனர். இதுதான் கடந்த 7 ஆண்டுகளில் இங்கிலாந்து அணியின் 10வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ஸ்கோராகும்.
பென் ஸ்டோக்ஸின் நிலை என்ன?
இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேசுகையில் “எங்களுக்கு இது வேதனையான நாள். நியூசிலாந்து எங்களை வென்றதை ஜீரணிக்க முடியவில்லை. இந்தத் தொடரில் இது முதல் தோல்விதான். எங்கள் அணியில் உள்ள ஏராளமான வீரர்கள் நன்கு விளையாடினர்,” என்றார்.
மேலும், “இருப்பினும் நாங்கள் சேர்த்த ஸ்கோர் பாதுகாப்பில்லாதது. 330 ரன்களுக்கு மேல் ஸ்கோரை எதிர்பார்த்தோம். மின்ஒளியில் மைதானம் சிறப்பாக பேட்டர்களுக்கு ஒத்துழைத்தது. நியூசிலாந்து பேட்டர்கள் ஆட்டம் சிறப்பாக இருந்தது. கான்வே ஷாட்களை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ரச்சின், கான்வே இருவரும் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பென் ஸ்டோக்ஸ் விரைவில் குணமடைந்துவிடுவார், போட்டியில் பங்கேற்பார்,” எனத் தெரிவித்தார்.