தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி... உலகக் கோப்பை கிரிக்கெட் 2023...
இலங்கை அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி சேர்த்த 428 ரன்கள் மற்ற அணிகளுக்கு மிரட்டலாக இறங்கியுள்ளது. உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா நேற்று சேர்த்த ரன்கள்தான் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர்.
இதற்கு முன் 2015இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 417 ரன்கள் சேர்த்திருந்த சாதனையை தென் ஆப்பிரிக்கா முறியடித்தது. உலகக்கோப்பைத் தொடரில் மட்டும் தென் ஆப்பிரிக்கா 3 முறை 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடரில் ஓர் அணியில் 3 பேட்டர்கள் சதம் அடித்ததும் இதுதான் வரலாற்றில் முதல்முறை. இந்த ஒரு சாதனையே, உலகம் எழுந்து அமர்ந்து, தென் ஆப்பிரிக்க அணியை நிமர்ந்து பார்க்கப் போதுமானது.
இதில் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்து, உலகக்கோப்பைத் தொடரில் அதிவேக சதம் அடித்த வீரராகத் தன்னை வரலாற்றில் பதிவு செய்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் உறுதியான, அவசரப்படாத அணுகுமுறைதான் மற்ற அணிகளைக் கவலையடையச் செய்துள்ளது.
'டாப் கியரு'க்கு மாறிய ஆட்டம்
லங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆட்டம் நிதானமாக உயர்ந்து, ரன் ரேட்டை உயர்த்தியது. 11 முதல் 20 ஓவர்கள் வரை ஓவருக்கு 7 என்ற ரன்ரேட்டில் தென் ஆப்பிரிக்கா விளையாடியது.
பின்னர் 21 முதல் 30 ஓவர்களில் 88 ரன்களையும், அடுத்த 10 ஓவர்களில் 85 ரன்களையும், கடைசி 10 ஓவர்களில் 137 ரன்களையும் சேர்த்து ரன்ரேட்டை டாப்-கியருக்கு மாற்றியது.
இதுபோன்ற தென் ஆப்பிரிக்காவின் கட்டுக்குலையாத கவனம், நிதானம் இனி வரும் போட்டிகளில் எதிரணிகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும்.
இதில் நேற்று சதம் கண்டவர்களில் மார்க்ரம், வேண்ட் டூசென் ஆகிய இருவரைத் தவிர டீ காக் முக்கியமானவர். இதுவரை ரன்மெஷினாக மட்டுமே பார்க்கப்பட்ட டீ காக், அடுத்த உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறிதான். ஆனால், இதுவரை பல உலகக்கோப்பையில் விளையாடிய டீ காக், ஒரு சதம்கூட அடிக்கவில்லை.
இந்தப் போட்டியில் அந்தச் சாதனையைச் செய்யவேண்டிய முனைப்பில், மெதுவாகவே ஆட்டத்தைத் தொடங்கி, நிதானமாக நகர்ந்தார். இலங்கை அணி சுழற்பந்துவீச்சை அறிமுகம் செய்தபோது, டீ காக் 21 பந்துகளில் 28 ரன்கள் என்று நிதானமாக ஆடி வந்தார். தனஞ்செயா டி சில்வா பந்தில் ஸ்வீப்ஷாட் அடித்து சுழற்பந்துவீச்சுக்கு அச்சப்படவில்லை என்று பிரகடனம் செய்தார்.
மெல்ல தனது ரன் சேர்க்கும் கியரை மாற்றிய டீ காக், செட்டில் ஆன பின், நடுப்பகுதி ஓவர்களை நன்கு பயன்படுத்தினார். நடுப்பகுதி ஓவர்களில் மட்டும் ஒரு சிக்ஸர் உள்பட 56 பந்துகளில் 87 ரன்களை டீ காக் குவித்தார். டீ காக்கிற்கு துணையாக ஆடிய வேன் டெர் டூசெனும் பெரிதாக ரிஸ்க் எடுக்கும் ஷாட்களை ஆடாமல் நிதானாக ஆடினார்.
மார்க்ரம்-மை பொருத்தவரை, பாரம்பரிய ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தன்னை ஒரு ப்ரீமியம் பேட்டராக அடையாளப்படுத்தி இருக்கிறார். 2019 மற்றும் 2023 உலகக்கோப்பைகளுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மார்க்ரமின் பேட்டிங் திறமை மெருகேறியிருக்கிறது.
நடுப்பகுதி ஓவர்களில் மார்க்ரம் சராசரி 64 ரன்கள்தான். ஆனால், நேற்று 107 ரன்களை குவித்தார். தான் பயணிக்க ஏதுவான தளம் இருந்தால் என்ன செய்ய முடியும் என்பதையும், டெத் ஓவர் வரை தனது இன்னிங்ஸை எடுத்துச் செல்ல முடியும் என்பதையும் வெளிப்படுத்தினார்.
இந்த ஆட்டத்தில் முத்தாய்ப்பாக அமைந்தது மார்க்ரம் அடித்த சதம்தான். உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 49 பந்துகளில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார். நிதானமாக ஆடத் தொடங்கிய மார்க்ரம், 34 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.
ஆனால், அடுத்த 15 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எட்டி 49 பந்துகளில் சதம் அடித்து மார்க்ரம் வரலாறு படைத்தார். பதிரணா வீசிய ஒவரில் மட்டும் 26 ரன்களை மார்க்ரம் சேர்த்ததுதான் திருப்புமுனை.
இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி மட்டும் 45 பவுண்டரிகள் அடித்தது, அதாவது 180 ரன்களை பவுண்டரி மூலமே சேர்த்தது. 14 சிக்ஸர்கள் மூலம் மட்டுமே 84 ரன்களை சேர்ததது. ஏறக்குறைய 45+14=59 பந்துகள் ஏறக்குறைய 10 ஓவர்களில் மட்டும் தென் ஆப்பிரிக்க அணி 264 ரன்களை சேர்த்திருக்கிறது.
ஏறக்குறைய 120 பந்துகளை டாட் பந்துகளாக தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் விட்டுள்ளனர். அதாவது பவுண்டரி, சிக்ஸர் மூலமே ரன்களை சேர்த்தால் போதும் என்ற மனநிலையோடு இருந்தனர். இதுபோன்று பேட்டர்களுக்கு சாதகமாக ஆடுகளத்தையும், விதிமுறையையும் மாற்றினால், போட்டி என்பது ஒருதரப்பாகவே இருக்கும்.
இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் தென் ஆப்ரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.