சம்பத்தைத் தந்தருளும் சம்பத்கரி தேவி...
சம்பத்தைத் தந்தருளும் சம்பத்கரி தேவி
லட்சுமிகடாட்சம் என்பது ஒவ்வொரு வாழ்விலும் மிகவும் அவசியம். துர்கா, லட்சுமி, சரஸ்வதி இம்மூவரின் அருள் நம் ஒவ்வொரு வருக்கும் அவசியம். பணமில்லாத வாழ்க்கையோ, அதனை சரிவர பராமரிக்க புத்திக் கூர்மை இல்லையென்றாலோ, இவ்விரண்டும் இருந்து தைரியம் இல்லாமல் கோழையாக இருந்தால், ஒருவரது வாழ்க்கை மிகவும் நரக வேதனைதான்.
கல்விச்செல்வம், பொருட்செல்வம், வீரம் மற்றும் தைரியம் இவையெல்லாம் அருளும் முப்பெரும் தேவியரின் கடாட்சம் நமக்கு அவசியம்.யானைகளின் கூட்டத்தால் வணங்கப்படுபவள் ஸ்ரீசம்பத்கரி தேவி. அன்னை ஸ்ரீலலிதாபரமேஸ்வரியின் அம்சமாக அவதரித்தவள். ஓசை, உணர்வு, உருவம், சுவை, நாற்றம் என்று உணரவைக்கும் ஐம்புலன்களும் ஐந்து விதமான யானைகளாம்.
இவை வெவ்வேறு திசைகளில் ஓடி நம்மை ஒருமுகச் சிந்தனையில்லாமல் தடுமாற வைக்கக் கூடியவை. ஸ்ரீசம்பத் கரிதேவி இவற்றை கட்டுக்குள் வைத்திருக்கும் தண்ட நாயகி.புலன் ஐந்தினையும் கட்டுக்குள் வைத்திருப்பவருக்குச் செல்வம் பெருகும் என்பதனைக் குறிப்பதே இவளது நாமம். ஆம்! சம்பத் என்றால் செல்வம், கரி என்றால் செய்பவள்.
புலன்களின் வழி உணர்வுகள் நம் மனத்தை தறிகெட்டு அலையவைக்கும். அம்பாள் ஸ்ரீசம்பத்கரி தேவியின் வழிபாடு நம்மை நிலைப்படுத்தி நம் மமதையையும், அகங்காரத்தையும் அடக்க உதவும்.
அம்பாள் ஸ்ரீலலிதாம்பிகையின் படைத்தலைவிதான் ஸ்ரீசம்பத்கரி தேவி. கோடிக்கணக்கான யானைகள், குதிரைகள், ரதங்கள் சூழ சகல செல்வங்களையும் தன்னுள்கொண்ட சம்பத்கரி, தன் பக்தர்களுக்கு அழியாத நவநிதிகளை வாரி வழங்கி அருள்பாலிக்கின்றாள்.
ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், ‘சம்பத்கரி சமாரூட ஸிந்தூர வ்ரஜஸேவிதா’ என்று சம்பத்கரி தேவியைப் போற்றுகின்றது. அம்பாளை, கோடிக்கணக்கான யானைகள் பின்தொடர, சகல அஸ்திரங்களும் தேவியைப் பாதுகாக்க தனது வாகனமாக ‘ரணகோலாஹலம்’ எனும் யானையின் மீதேறி அருட்கோலம் காட்டுகின்றாள்.பொதுவாக, ஒரு யானையை வைத்துப் பராமரிக்கவே பெருஞ்செல்வம் தேவை. ஆனால், கோடிக்கணக்கான யானைகளைக் காப்பாற்றும் அளவிற்கு பெருஞ்செல்வம் படைத்தவள் இந்த தேவி.
இதுவரை லட்சுமி கடாட்சம் கிட்டாதவர்களுக்குக்கூட, இந்த தேவியின் அருளால் நிச்சயம் கிட்டும் என்பதனை தேவி ஆரோகணித்துவரும் யானை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தாமரை மலர்ந்து உணர்த்துகின்றது.
ஸ்ரீ லலிதாம்பிகையைப் போற்றும் சக்தி மஹிம்ன துதியில், மிக வீரியம் உள்ளதும், வெற்றியுடன் விளங்கக்கூடியதுமான உனது அங்குசத்தை தன் உள்ளத்தில் எவன் தியானிக்கின்றானோ, அவன் தேவர்களையும், பூவுலகில் ஆள்பவர்களையும், எதிரிகளைக் கட்டுப்படுத்தக் கூடியவனாக விளங்குவான் என்று கூறுகின்றது. பெருமை பொருந்திய சக்தி லலிதையின் அங்குசத்திலிருந்து தோன்றியவள்தான் ஸ்ரீசம்பத்கரி தேவி.
யானையின் மதத்தை அடக்க அங்குசம் உதவுவது போல, ‘நான்’ எனும் மதத்தை அடக்க உதவுகின்றாள். ‘நான் செய்தேன்’; ‘நான் சொன்னேன்’; ‘என்னால்தான் இதெல்லாம் நடந்தது’ என இப்படி நம்மில் பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். ‘நான்’ எங்கிருந்து வந்தது? நம்மால் தேவியின் அருள் இல்லாமல் ஒரு அணுவைக் கூட அசைக்க முடியாது என்பதை முதலில் உணரவேண்டும்.
எந்த ஒரு சொல்லும், செயலும் அவளது ஆணைப்படிதான் நடக்கும். இது புரிந்தால் ‘நான்’ என்ற சொல்லுக்கு நம் வாழ்க்கையில் இடமிருக்காது. ‘நான்’ என்ற மதம் நம்மை விட்டு அகன்றால், நம்மால் இறைவனடி சேரமுடியும்.ஸ்ரீசம்பத்கரிதேவி அவளை அன்பாக வழிபடும் பக்தர்கள் வாழ்வில் மங்களங்கள் சூழ செல்வவளம் பெருக்குகின்றாள்.
யானையும், குதிரையும் நமக்குள்ளே மனமாகவும், அகங்காரமாகவும் உள்ளன. இரண்டையும், பழக்கப்படுத்தி பக்குவமாக்க வேண்டும். யானையைப் பழக்கினால் நிறைய நல்ல செயல்களுக்குப் பயன்படுத்தலாம். அம்பிகையை அடைய குதிரையைப் பழக்குவதுபோல நம் மனதைப் பழக்கி, யானையின் மதத்தைக் கட்டுப்படுத்துவது போல, நம் அகங்காரத்தையும் ஒடுக்க வேண்டும். இதுவே தேவியின் தத்துவம் விளக்குகின்றது.
தேவி தியானம்
அநேக கோடி மாதங்க துரங்க ரதபத்திபி:
ஸேவிதாமருணாகாரம் வந்தே ஸம்பத் ஸரஸ்வதீம்
சம்பத்கரீஸ்வரி - அரசுகாத்த அம்மன் காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது, அரசுகாத்த அம்மன் என்கிற சம்பத்கரீஸ்வரி ஆலயம்!
பார்வதிதேவி காஞ்சியில் தவம் செய்தபோது அரசு காத்த அம்மன், பச்சை அம்மன், சந்தைவெளி அம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகிய பெண்தெய்வங்கள் காவல் புரிந்தனர்.
இவர்களுக்கு தலைமை பொறுப்பேற்றவள் அரசு காத்த அம்மன். சோழ மன்னர்களின் அரசாங்கத்திற்கு பாதுகாப்பாக இருந்ததால் ‘அரசு காத்த அம்மன்’ என்று பெயர் வந்ததாக கூறுவர்.இந்த அம்பிகை வலது காதில் குண்டலம், இடது காதில் தோடு அணிந்து இருப்பாள். இவள் வடக்குநோக்கி வீற்றிருக்கிறாள்
இரு கோரைப் பற்களும், நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் சூலமும், இடது மேல்கரத்தில் பாசம், கீழ் கரத்தில் கபாலமும் உள்ளன. ஜ்வாலா கிரீடம் அணிந்திருக்கிறாள். ஆறடி உயரத்தில் இருக்கும் இந்த அம்பிகை இடது காலால் அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள்.வடக்கு நோக்கிய தெய்வங்கள் நகரை காவல் காக்கும் தெய்வங்களாக விளங்குவார்கள். அரசு காத்த அம்மனுக்கு சம்பத்கரீஸ்வரி என்ற பெயரும் உண்டு.
இதற்கு அடையாளமாக அம்மனின் எதிரில் சிம்மவாகனத்திற்குப் பதிலாக யானை வாகனம் இடம்பெற்றுள்ளது. இந்த அம்பிகைக்கு பௌர்ணமி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வைகாசி, ஆடி, கடைசி வெள்ளிக்கிழமை அம்மன் உலா நடக்கும்.