பகவானை ஸேவிக்கும் முறை...

🔯பகவானை_ஸேவிக்கும்_முறை

      அதிகாலையில் ரிஷிகள் துயில் விட்டு எழுமாப் போல குரங்குகளும் எழுந்து சுனைகளில் குளித்து, அங்குள்ள பூக்களைப் பறித்து அப்பன் திருவடிகளில் ஸமர்பித்துத் தோத்திரம் செய்கின்றன. நெஞ்சே! நீயும் அப்படிச் செய்யப் புறப்படுவாயாக என்று பூதத்தாழ்வார், "போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம்! போது மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல, அணி வேங்கடவன் பேராய்ந்து"என்ற பாட்டில் தெரிவிக்கிறார்.

 பேயாழ்வாரும் "புகுமதத்தால் வாய்பூசிக் கீழ் தாழ்ந்து அருவி யுகு மதத்தால், கால்கழுவிக் கையால் மிகுமதத்தேன் விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே, கண்டு வணங்கும் களிறு"என்ற பாட்டில், திருமலையில் யானையானது மண்டை, கன்னம் இவைகளினின்று பெருகுகின்ற மத ஜலத்தால், வாய் கொப்பளித்துக் கால்களை சுத்தி செய்து, துதிக்கையால் பூவைப் பறித்துத் திருமலையப்பனையே ஸேவித்து வணங்குகின்றது என்று தெரிவிக்கிறார்.

எம்பெருமான் சன்னிதியில் தொண்டு செய்யப் போமவர்கள் வாயைக் கொப்பளித்துக் கைகால்களை சுத்தி செய்து கொண்டு பூக்களைக் கொண்டு போவது வழக்கம். இவ்வழக்கம் மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் திருமலையிலுள்ள விலங்கினங்களுக்கும் அமைந்துள்ளது. ஆக, நாமும், கோவிலுக்குச் செல்லுமுன், ஸ்நானம் பண்ணி, புதிய ஆடை உடுத்துத் திருமண் இட்டுக் கொண்டு செல்ல வேண்டும். வெறுங்கையுடன் கோவிலுக்குப் போகக் கூடாது. "#ரிக்தஹஸ்தஸ்து_நேபேயாத், #ராஜாநம்_தைவதம்_குரும்"  . அரசனையும் கடவுளையும் ஆசார்யனையும் வெறுங்கையனாக அணுகலாகாது என்ற விதியுள்ளது. இவ்விதிப்படி நாம், நம் சக்திக்கும் பக்திக்கும் இணங்க, அப்பெருமானுக்குரிய பொருள்களைக் கையில் கொண்டு செல்ல வேண்டும். #பத்ரம்_புஷ்பம்_பலம்_தோயம் என்று கண்ணன் கீதையில் அருளிச் செய்தபடி துளஸியையோ, பூவையோ, பழமோ, ஜலமோ எதுவாகவிருந்தாலும் சரி, பக்தியுடன் கொடுத்தால் அதைக் கொண்டு பகவான் திருப்தியடைவான்.

       பூதத்தாழ்வாரும், கோவிலுக்குப் போகும் போது, இன்னென்ன கொண்டு போக வேண்டும் என்று ஒரு பாட்டில் தெரிவிக்கிறார். "வரைச் சந்தனக் குழம்பும் வால் கலனும், பட்டும், விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக் கொண்டு ஆதிககண் நின்ற அறிவனடியிணையே ஓதிப்பணிவதுறும்"

        அதாவது, சிறந்த சந்தனம் திவ்யமான ஆபரணம், உயர்ந்த பீதாம்பரம் மணமுள்ள மல்லிகை மலர் ஆகிய இவற்றைக் கையில் கொண்டு சென்று பகவானுடைய திருவடிகளை வணங்குதல் நன்று என்கிறார்.

இப்பாசுரத்திற்கு அழகிய மணவாளச் சீயர் ரசமாக, ஒரு பொருள் அருளிச் செய்வாராம். அதாவது, சந்தனம் முதலியவற்றை பகவானுக்கு ஸமர்பிக்கும் பொருட்டுக் கையில் கொண்டு கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பதே இப்பாசுரத்தின் பொருளாயினும் வேறு வகையான பொருள் தொனிக்கிறது. அன்பர்கள் கோவிலிலே அருளிச்செயல் ஸேவிக்கும் போது அழுக்குடம்போடும், கந்தல் துணியோடும், நாற்றத் தலையோடும் போகாமல், மெய்யிட நல்லதோர் சாந்தமும் என்கிறபடியே, உடம்பிற் சந்தனம் பூசிக் கொண்டும் #கழுத்துப்_பூணொடு_காதுக்குக்குண்டலம் என்கிறபடியே கண்டிகை, குண்டலம், மோதிரம் முதலிய ஆபரணங்கள் அணிந்து கொண்டும், #உடுத்துக்களைந்த_நின்பீதக_ஆடையுடுத்து என்கிறபடியே திவ்ய ஆடை உடுத்திக் கொண்டும், #தொடுத்த_துழாய்மலர்_சூடிக்களைந்தன_சூடுமித்தொண்டர்களோம் என்கிறபடி நல்ல பூக்களைச் சூடிக் கொண்டும் அருளிச் செயல் ஓதுவது நன்று என்றாராம். பண்டைக் காலத்தில் பட்டர், இயல் கோஷ்டிக்கு எழுந்தருளும் போது, இவ்வகை அலங்காரங்களுடனே எழுந்தருளுவாராம்.

கோவிலுக்குச் செல்லும் போது "வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து"என்கிற நம்மாழ்வார் திருவாக்குப்படி ஸ்ரீவைஷ்ணவர்களை முன்னிட்டுக் கொண்டே பகவானைப் பணிதல் வேண்டும். ஸ்ரீ விபீஷணாழ்வான், ஸ்ரீராமன் அருகில் வரும்போது நேரே அவன் திருவடிகளில் விழாமல் சுக்ரீவ மஹராஜர் திருவடி முதலானவரை முன்னிட்டே பெருமாளைப் பற்றினார்.‌ஆண்டாளும், திருப்பாவையில் "உறங்குகின்ற கோபிகளை எழுப்பிக் கொண்டு, நந்தகோபன் திருமாளிகைக்குப் போய், அங்கே, கோயில் காப்பான், வாயில் காப்பான் இவர்களின் அநுமதி பெற்று உள்ளே போவதைத் தெரிவிக்கிறாள்.

      கோவிலுள் நுழைந்ததும் த்வஜஸ்தம்பத்தின் அருகில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ண வேண்டும். துவாரபாலகர்களின் அநுமதி பெற்று, ஆழ்வார் ஆசார்யர்களை ஸேவித்தும் செல்ல வேண்டும். முதலில் ஸேவிக்க வேண்டியது தாயார் சன்னதி. இவ்விஷயத்தில் பேயாழ்வார் நமக்கு வழிகாட்டுகிறார். #திருக்கண்டேன்_பொன்மேனி_கண்டேன் என்று முதன் முதலில் புருஷகார பூதையான பிராட்டியைக் கண்டேன். பிறகு பெருமாளைக் கண்டேன் என்கிறார். இவர் வேதம் வல்லவர்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய இவர்களை முன்னிட்டுக் கொண்டு முதன் முதலில் பிராட்டியை ஸேவித்தார்.