எப்படியிருக்கு ‘துருவ நட்சத்திரம்’ டிரைலர்?

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளனர்.

ஸ்பை த்ரில்லர் கதை பாணியில் உருவாகியுள்ள படம், துருவ நட்சத்திரம். இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதை குறித்த பணிகள் 2013ஆம் ஆண்டே தொடங்கி விட்டது. இதை, முதலில் சூர்யாவை வைத்து படமாக்க இருந்தார் கௌதம். அதன் பிறகுதான் விக்ரம் ஹீரோவாக்கப்பட்டார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் பணிகள் நடைப்பெற்று வந்தன. ஒரு வழியாக, பட வேலைகள் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தன.

துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில், அரசுக்கு கீழ் அடங்காமல் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் ஒரு குழு செயல்படுவது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் 11வது ஆளாக சேர்கிறார், விக்ரம். படத்தில் சண்டை காட்சிகள், குண்டு வெடிப்பு காட்சிகள் என திரையை தீப்பிடிக்க வைக்கும் அளவிற்கான காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் பலர், பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது டிரைலர் வந்துள்ளதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். டிரைலரில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகளும், விகரம் மாஸாக விமானத்தில் இருந்து இறங்கும் காட்சியும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது பல ஹீரோக்கள் படத்திற்காக தகாத வார்த்தைகள் பேசுவது சகஜமாக பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனில் ஆரம்பித்து, விஜய் வரை பல நடிகர்கள் இது போன்ற வார்த்தைகளை தங்களது படங்களில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விக்ரமும் துருவ நட்சத்திரம் பட டிரைலரில் ஒரு ஆபாசமான தமிழ் கெட்ட வார்த்தையை பேசியுள்ளார். இந்த வார்த்தை, டீசரிலேயே இடம் பெற்றிருந்தது. தற்போது, டிரைலரில் மீண்டும் இதை கேட்டவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடிகர் நடிகைகள்:

துருவ நட்சத்திரம் படத்தில், நடிகர் பார்த்திபன் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். படத்தின் ஹீரோ விக்ரமிற்கு ஜோடியாக ரிது வர்மா நடித்துள்ளார். மேலும், அரசுக்கு கீழ் இயங்காத குழுவாக ராதிகா, மாயா கிருஷ்ணன், சிம்ரன், தொகுப்பாளினி டிடி, டான்ஸ் மாஸ்டர் சதீஷ், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

ரிலீஸ் எப்போது?

துருவ நட்சத்திரம் திரைப்படம், வரும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற சந்தேகத்தில் இருந்த ரசிகர்கள், இதன் மூலம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.