6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது... அசத்திய இந்தியா...
உலககோப்பை தொடர் முடிந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல 2 போட்டிளில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய இளம் அணி கவுகாத்தியில் நடந்த 3-வது போட்டியில் கடைசி நேரத்தில் தோல்வியை சந்தித்தது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் ராய்ப்பூரில் நடைபெற்ற 4-வது போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (டிசம்பர் 03) இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய தொடரை வெற்றியுடன் முடிக்கும் என்று எதிாபார்க்கப்பட்டது.
இதனிடையே தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் – ருத்துராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 21 ரன்களும், கெய்க்வாட் 12 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் 5 ரன்களுக்கும் ரின்குசிங் 6 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பக்கம் போராட மறுமுனையில், அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் சர்மா 16 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 24 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்ரேயாஸ் அய்யர் – அக்சர் பட்டேல் ஜோடி தாக்குபிடித்து ஆடியது.
இதில் அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அக்சர் பட்டேல் 31 ரன்களும் குவித்து ஆட்டமிழந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில், பெஹரிண்டஃப், டிவார்ஷூட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹார்டி, எல்லிஸ், சன்ஙா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
161 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில், தொடக்க ஆட்டக்காரர், பிலிப் 4ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்கார்ர் டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 28 ரன்கள் குவித்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மெக்டோர்மெட் ஒரு பக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில், மறுமுனையில் ஹார்டி 6 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து, களமிறங்கிய டிம் டேவிட் 17 பந்துகளில் ஒரு சிக்சருடன் 17 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், அடுத்து மேத்யூ ஷாட் களமிறங்கினார். இதனிடையே அரைசதம் நடந்த மெக்டோர்மெட் 36 பந்துகளில் 5 சிக்சருடன் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மேத்யூ ஷாட் 11 பந்துகளில் 16 ரன்களும், டவர்ஷிஸ் முதல் பந்திலேயே ரன் கணக்கை தொடங்காமலும் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் மேத்யூ வேட் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியா அணியை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்து சென்றார்.
இதன் மூலம் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய் அர்ஷ்தீப் சிங் முதல் 2 பந்துகளில் ரன் கொடுக்காத நிலையில், 3-வது பந்தில் மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அடுத்த 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங், பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.