முக்கிய வீரர் விலகல்... மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு...

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் காயமடைந்து சிகிச்சை எடுத்து வருகிறார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் பெரியதாக இருப்பது தெரியவந்ததையடுத்து, உடனடியாக நாடு திரும்பினார். பிசிசிஐ மருத்துவ குழு அறிக்கையின் அடிப்படையில் சூர்யகுமார் யாதவ் உடனடியாக லண்டன் சென்று அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். பின்னர் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வரும் சில புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதன் காரணமாக அடுத்த சில வாரங்கள் அவரால் எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்பதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கணுக்கால் காயம் ஏற்பட்டதோடு மட்டுமின்றி தற்போது அவர் குடலிறக்க பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று அங்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார் என்றும் அதன் பிறகு சில மாதங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதனால் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளை அவர் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் ஜூன் மாதம் தான் துவங்கும் என்பதனால் அதற்குள் அவர் தயாராகும் வரை கால அவகாசமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து அந்த அணி நிர்வாகம் நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. புதியதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை விலைக்கு வாங்கி வந்து அவரை கேப்டனாக நியமித்திருக்கிறது. அவரும் காயத்தால் அவதிப்பட்டு, சிகிச்சையில் இருக்கிறார். ஹர்திக் பாண்டியா ஐபிஎல் போட்டிக்கு திரும்புவாரா இல்லையா? என்பதே இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அந்த அணியின் மற்றொரு முக்கிய வீரரான சூர்யகுமார் யாதவ் காயத்தால் சிகிச்சை பெற்று வருவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.