திருமலை நாயக்கர் அரண்மனை : வரலாற்று நினைவுகளை இப்படியா பாதுகாப்பது?
மைசூர் அரண்மனையைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் சிறிய அரண்மனை தான் நாயக்கர் அரண்மனை. இதை பரமாரிப்பது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லையே! 
Madurai News History of Thirumalai Nayakkar Mahal : மதுரை என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். மாசி வீதிகளில் வலம் வரும் போது தான் நமக்கு, நாம் வரலாற்று செரிவு மிக்க இடத்தில் நின்று கொண்டிருக்கின்றோம் என்பதே புலப்படும். கடைச்சங்கம் செயல்பட்டு தமிழின் நாடித்துடிப்பை நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு உயிர்ப்பித்து வைத்திருந்தது நம் மதுரை மாநகரம்.

பாண்டியர்களின், சோழர்களின், நாயக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இந்த நகரம் மாறிக் கொண்டே இருந்த போதிலும் இந்நகரின் தொன்மை என்றும் மாறாமல் வாழ்ந்த வண்ணம் தான் இருக்கிறது. தூங்கா நகரம் என்றும் ஏதென்ஸ் ஆஃப்தி ஈஸ்ட் என்றும் பெருமையுடன் வழங்கப்படும் மதுரையில் புகழ்மிக்க மற்றொரு இடம் இருக்கிறது என்றால் அது சர்வ நிச்சயமாக மதுரை திருமலை நாயக்கர் மஹால் தான்.

எங்கே இருக்கிறது இந்த அரண்மனை?
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தெற்கே 1.5 கி.மீ தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது இந்த அரண்மனை. பேருந்து அல்லது ஆட்டோ மூலம் இந்த இடத்திற்கு நீங்கள் செல்லலாம்.

இந்த அரண்மனையின் வரலாறு என்ன?
திருச்சியை தலைமையிடமாக கொண்டு நாயக்கர்கள் மதுரை பகுதியை ஆட்சி செய்து வந்தனர். நாயக்க மன்னர் முத்து கிருஷ்ணப்பருக்கு மகனாக பிறந்தவர் முத்து வீரப்பர். அவருக்கு வாரிசுகள் ஏதும் இல்லாத காரணத்தால் அவருடைய இளைய சகோதரர் திருமலை நாயக்கர் மன்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு திருச்சியில் இருந்து ஆட்சி செய்வதற்கு பதிலாக மதுரையில் இருந்தே ஆட்சியை நடத்தலாம் என்ற எண்ணம் எழவே அவர் மதுரைக்கு தலைமையகத்தை மாற்றினார்.

அன்றைய காலத்தில் மதுரை நகரம் முழுவதும் பல்வேறு கலைநயம் மிக்க கட்டிடங்களை கட்டி எழுப்பினார் அவர். அதில் குறிப்பிடத்தக்கது தான் இந்த திருமலை நாயக்கர் மஹால் எனப்படும் மதுரை அரண்மனை. இந்த அரண்மனை திருமலை நாயக்கரின் வசிப்பிடமாகவும் செயல்பட்டது. இந்த அரண்மனையை திருமலை நாயக்கர் 17ம் நூற்றாண்டில் நிறுவினார். 1629 முதல் 1636ம் ஆண்டு வரை இந்த அரண்மனையின் கட்டிட வேலைப்பாடுகள் நடைபெற்றது.
கட்டிடத்தின் ஸ்திரத்தன்மைக்காக சுண்ணாம்பு, தன்றிக்காய், வெல்லம், கடுக்காய், நெல்லிக்காய் கலந்த கலவையை மேல்பூச்சாக அரண்மனையை எங்கும் பூசியுள்ளனர். இந்த அரண்மனையில் மொத்தமாக 48 அடி உயரமும் 12 அடி அகலமும் கொண்டு 248 தூண்கள் உள்ளன.   திராவிட – இஸ்லாமிய கலை நுணுக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த அரண்மனையின் உள் அரங்கம் முழுவதும் நிரம்பியிருக்கும் பெரிய வெள்ளை தூண்கள் என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று என்று தான் கூற வேண்டும். இன்று இருக்கும் அரண்மனையை விட நான்கு மடங்கு மிகப் பெரியதாக அமைந்திருந்தது அன்று திருமலை நாயக்கரால் கட்டி முடிக்கப்பட்ட அவருடைய அரண்மனை. சுற்றிலும் நந்தவனம், குளம், அந்தப்புரம், தர்பார் என்று மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது அந்த கட்டிடம்.
கட்டிடக் கலைஞர் யார்?
திராவிட இஸ்லாமிய நுணுக்கங்களுடன் இந்த அரண்மனை வடிக்கப்பட்டிருந்தாலும் கூட, ஸ்டக்கோ என்று கூறப்படும் உட்கோபுர வேலைப்பாடு, பெரிய பெரிய தூண்கள் இத்தாலிய கட்டிடக் கலையையே நமக்கு நினைவுப்படுத்துகிறது. இத்தாலியை சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் ஒருவரின் உதவியால் தான் இந்த அரண்மனை வடிவம் பெற்றது. போதுமான வரலாற்று ஆவணங்கள் நம்மிடம் இல்லாத காரணத்தால் இந்த கட்டிடத்தை வடிவமைத்து தந்தவர் யார் என்பது இன்னும் பதில் அறியாத கேள்வியாகவே வரலாற்று ஆசிரியர்களிடம் உள்ளது.

சேதாரமும் மறு சீரமைப்பும்
சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என்று இரு கூறுகளாக இன்று இருக்கும் இந்த அரண்மனைக்கு உயிர் கொடுத்தவர் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த நேப்பியர் பிரபு தான். திருமலை நாயக்கரின் மறைவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் யாருக்கும் அரண்மனையின் புகழ் தெரியவில்லை. திருமலையின் பேரனான சொக்கநாதன், தலைமையிடத்தை மீண்டும் திருச்சிக்கு மாற்றும் பொருட்டு, இந்த அரண்மனையில் இருந்த, கலைநயம் மிக்க பொருட்களை எல்லாம் எடுத்து சென்றார்.

நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய மர தூண்கள், நகைகள் எல்லாம் திருச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. பல இடங்களில் அரண்மனையை உடைத்து அந்த பொருட்களை அவர் எடுத்து சென்றதால் அரண்மனையின் புகழ் குறைய துவங்கியது. ஆனாலும் திருச்சியில் அரண்மனை கட்ட வேண்டும் என்ற அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை. மேலும் வைகையாற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளத்தின் காரணமாகவும் அரண்மனை அதன் அழகை இழக்க துவங்கியது.
ஆங்கில அரசின் கட்டிடக்கலை நிபுணரான ராபர்ட் ஃபெல்லோவ்ஸ்  சிஷோல்ம் (Robert Fellowes Chisholm) என்பவரால் அரண்மனை மீண்டும் உயிர்ப்புடன் எழுந்தது. இன்று நாம் காணும் வெள்ளைத் தூண்கள் அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது தான். அதற்கு முன்பு கற்தூண்களே இடம் பெற்றிருந்தன. அதே போன்று உட்கோபுரத்தில் வர்ணங்களால் அரண்மனைக்கு பெருமை சேர்த்ததும் ராபர்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்காக அன்றைய தேதியில் 2 லட்சம் ரூபாய் வரை நேப்பியர் செலவிட்டார். இந்த மறுசீரமைப்பு பணிகள் 1866ம் ஆண்டு துவங்கி 1872 வரை நடைபெற்றது. சுதந்திரத்திற்கு பிறகும் கூட ஓரளவிற்கு பராமரிப்பு கொடுக்கப்பட்டு வந்தது. 1970 வரை மதுரை – ராமநதபுரம் மாவட்டத்திற்கான நீதிமன்றமாக இந்த கட்டிடம் செயல்பட்டு வந்தது.

இன்றைய நிலை
அரண்மனையில் இன்று நடன அரங்கம் ஒன்றும், கல்லெழுத்துக் கலைக்கூடம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அரண்மனையின் ஒரு ஓரத்தில் அமைந்திருக்கும் நடன அரங்கிற்குள் சென்றால், அந்த பகுதி முழுமையாகவும் அரண்மனை பற்றிய பல்வேறு வரலாற்று சான்றுகள் மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர். தஞ்சாவூர் சித்திரங்கள், பல்வேறு காலக்கட்டங்களில் எடுக்கப்பட்ட அரண்மனையின் புகைப்படங்கள், அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள், முதுமக்கள் தாழிகள் என அனைத்தும் அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை தாண்டி உள்ளே செல்லும் போது அங்கே கல்வெட்டுகளும், தமிழ் எழுத்துகளின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் ஓடுகள், கற்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சுற்றி இருக்கும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் புதர் மண்டியிருக்க இந்த சிலைகள் இருக்கும் இடத்திற்கு பின்னால் இருள் தான் மண்டிக் கிடக்கிறது. மேலும் சுவர்கள் முழுவதும் பென்சிலாலும், பேனாவாலும் கிறுக்கி வைத்துள்ளனர் பார்வையாளர்கள். ஆங்காங்கே படங்கள், பெயர்களையும் எழுதி வைத்து வரலாற்று சின்னங்களின் தங்களின் வரலாற்றினை பதிக்க முயன்றிருக்கிறனர். சில பகுதிகளில் வெறும் மேடைகள் மட்டுமே இருக்கிறது ஆனால் அங்கே சிலையோ, கல்வெட்டோ இல்லாமல் வெறுமனே உள்ளது. மேலும் பெறப்பட்ட கல்வெட்டுகள் குறித்த வரலாற்று தரவுகளையும் போதுமான அளவில் வைக்கவில்லை என்ற ஆதங்கமும் பார்வையாளர்கள் மத்தியில் எழுகிறது. கல்லெழுத்துக் கலைக்கூடம் செயல்பட்டு வரும் இடத்தில் சுவரெல்லாம் பெயர்ந்து வருகிறது.  பூசப்பட்டிருக்கும் வண்ணப்பூச்சு எல்லாம் உதிர்ந்து பார்ப்பதற்கு மிகவும் மோசமானதாவும் இருக்கிறது.
மாலை நேரத்தில் ஒலியும் – ஒளியுமாய் மஹாலின் பெருமைகளை பேசினாலும், இந்த இரண்டு பகுதிகளும் சூரிய வெளிச்சத்திற்காக ஏங்கும் இருள் சூழ்ந்த இடமாகவே காட்சி அளிப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். இது போன்ற பலரின் பார்வைக்கும் வெளிச்சத்திற்கும் செல்லாமல் இருப்பது ராமநாதபுர அரண்மனையும், தஞ்சை அரண்மனையும். மைசூர் அரண்மனையைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் சிறிய அரண்மனை தான் நாயக்கர் அரண்மனை. இதை பரமாரிப்பது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லையே!