ஹம்பி

அம்பி (Hampi, ஹம்பி) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் ஆகும். ஹம்பி, விசயநகரப் பேரரசின் தலைநகரமான விசயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விசயநகரத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்புவாய்ந்த இடமாகத் தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற விருபாட்சர் கோயில் இவ்விடத்தில் உள்ளது. ஹம்பி, விசயநகரத்தோடு தொடர்புடைய மேலும் பல நினைவுச் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வூர் பழைய நகரத்தின் வீதிகளிலும் விரிவடைந்து உள்ளது.

 

அஞ்சனாத்ரி குன்று

 

ஹம்பியில் உள்ளஅஞ்சனாத்ரி குன்றுஅனுமன் பிறந்த மலையாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்த மலையில் 1060 படிகள் ஏறிச்சென்றால் அனுமனுக்கும் அவரது தாயார் அஞ்சனா தேவிக்கும் கோயில்கள் உள்ளன. இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

 

தற்போதும் வழிபாடுகள் நடைபெற்றுவரும் கோயில்கள் உட்பட பல முக்கிய இந்துக் கோயில்கள் ஹம்பியில் உள்ளன.

 

அவற்றுள் குறிப்பிடத்தக்கன:

 

அச்சுதராயரகோயில் 

அச்சுதராயர்கோயில், ஹம்பி

கிருஷ்ணதேவராயருக்குப் பின் விசயநகரை ஆண்ட அச்சுததேவ ராயரின் ஆட்சிகாலத்தில் அரசரின் உயரதிகாரியால் கிபி 1534 ஆம் ஆண்டு இக்கோயில் கட்டப்பட்டதால், விஷ்ணுவை முதன்மைக் கடவுளாகக் கொண்ட இக்கோயில் அச்சுதராயர் கோயில் என அழைக்கப்படுகிறது. ஹம்பியிலுள்ள மற்ற கோயில்களைவிட இக்கோயிலின் கட்டிட அமைப்பு காலத்தால் பிந்தையதாக உள்ளது. கந்தமாதனம் மற்றும் மாதங்கா குன்றுகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த இரு செவ்வகக் கூடங்களின் மையத்தில் இக்கோயிலின் முக்கியக் கருவறை உள்ளது. 

படவிலிங்கம் 

இது ஹம்பியிலுள்ள லிங்கங்களுள் அளவில் மிகப் பெரியதாகும். இலட்சுமி நரசிம்மர் சிலைக்கு அடுத்துள்ள ஒரு அறையில் இந்த லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் சென்று பார்க்கும்போது இந்த லிங்கத்தில் மூன்றாவது கண் உள்ளதைக் காணமுடியும். (depicting the three eyes of Shiva) ஒரு ஏழை விவசாயப் பெண் இதனைக் கட்டியதாக வரலாறு உள்ளது. லிங்கம் உள்ள அறை வழியாக ஒரு வாய்க்கால் செல்வதால் அவ்வறையில் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்டளவுக்கு நீர் உள்ளது. லிங்கத்தின் அடிப்பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது

 

மால்யவந்த இரகுநாதசுவாமி கோயில் 

பழங்கால கட்டிடபாணியில் அமைந்துள்ள இக்கோயிலின் உட்புறச் சுவர்களில் வினோதமான மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரின வடிவங்களின் வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. 

இக்கோயில் இந்து புராணக்கதைகள் அடங்கிய சிற்பவேலைப்பாடுகள் கொண்டது. கோயில் உட்சுற்றுச் சுவரில் இராமாயண நிகழ்வுகள் செதுக்கப்பட்டுள்ளன. 

சைனக் கோயில்கள்


 

சைனக் கோயில்கள் இப்பகுதியில் இருந்ததற்கான சான்றுகளாக ஹேமகூடம் உட்பட்ட பல இடங்களில் சைனக் கோயில்களின் மிச்சங்கள் உள்ளன. இவற்றுள் பெரும்பாலான கோயில்களில் கடவுள் திருவுருவங்கள் காணப்படவில்லை. கிடைத்துள்ள மிச்சங்களைக் கொண்டு இக்கோயில்கள் 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக கண்டறியப்படுகிறது. 

கிருஷ்ணர்கோயில்,ஹம்பி 

கிருஷ்ணதேவராயர் ஆட்சிகாலத்தில் கிபி 1513 ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலின் வளாகம் இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக உள்ளது. கிருஷ்ணதேவராயரால் பொறிக்கப்பட்ட கிபி 1513 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று கோயிலின் முன்புறம் காணப்படுகிறது. விசயநகர வீழ்ச்சிக்குப் பின்பு இக்கோயில் பராமரிக்கப்படவில்லை. தற்போது இக்கோயிலில் வழிபாடு நடைபெறவில்லை.சென்ற பத்தாண்டுகளில் கிருஷ்ணர் கோயிலுக்கு முன்புற கடைத்தெரு அகழ்ந்தெடுக்கப்பட்டு மீட்டமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் புண்ணிய குளம் கோயிலின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளது.

 கல்ரதம்,விட்டலர் கோயில் 


விட்டலர் கோயில் வளாகம் ஹம்பி இடிபாடுகளில் முக்கியமானதும் நன்கறியப்பட்டதுமாகும். இங்குள்ள கல்லால் ஆன தேர், கர்நாடகச் சுற்றுலாத்துறையின் சின்னமாக உள்ளது. இதன்மேல் அமைந்த செங்கற்கோபுரம் இடிக்கப்பட்டு விட்டது.இங்கு அமைக்கப்பட்டுள்ள விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் இவ்வளாகம் மாலை நேரத்தில் பார்ப்பதற்கு அழகாகத் தோற்றமளிக்கிறது. இங்குள்ள ஊஞ்சல் கூடம், விசயநகர கட்டிடக்கலைத் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.இசைத்தூண்கள் கொண்ட மண்டபமொன்று இவ்வளாகத்தில் உள்ளது.

 விருபாட்சர் கோயில் 

விருப்பாட்சர் கோயில், ஹம்பி கடைத்தெருவில் அமைந்த ஒரு முக்கியமான பண்டையக் கோயில். பம்பாவதி கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் விசயநகரப் பேரரசு காலத்துக்கும் முந்தையது. கிழக்கில் அமைந்த 160-foot (49 m) முதன்மை நுழைவாயில் கோபுரம், முதன்மை கோபுரத்தை அடுத்து உட்கோயிலுக்குள் செல்ல அமைக்கப்பட்ட நுழைவாயிலின் சிறு கோபுரம், துங்கபத்திரை ஆற்றுக்கு செல்லும் வழியிலமைந்த வடபுறக் கோபுரம் (கனககிரி கோபுரம்) என மூன்று கோபுரங்களைக் கொண்டுள்ளது. கிபி 1510 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் முடிசூட்டிக்கொண்டபோது அவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலின் உட்புற சிறு கோபுரமும், தூண்களமைந்த அழகான மண்டபமும் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவையாகும்.சிவனுக்கு மட்டுமல்லாது, புவனேசுவரி மற்றும் பம்பை இருவருக்கும் இக்கோயிலில் கருவறைகள் உள்ளன.

 

பிரசன்ன விருபாட்சர் கோயில்

 

பாதாள சிவன் கோயில் என அறியப்படும் இக்கோயில் அகழ்ந்தெடுக்கப்படும் போது அதன் மேற்புறம் வரை பூமிக்கடியில் புதையுண்டிருந்தது.