மெரீனா கடற்கரை
மரீனா கடற்கரை [மெரீனா அல்லது மெரினா கடற்கரை] (Marina beach) உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல் மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்குப் பிறகு இங்கு அனுமதியின்றிப் போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.