பாலக்காடு
பாலக்காடு தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே பாலக்காடு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயின் அருகே அமைந்துள்ளது. இங்கு பேசப்படும் மொழி மலையாளம். எனினும் தமிழும் பரவாலாக மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.
இந்நகரம் தமிழக கேரள எல்லையில் கோயம்புத்தூரில் இருந்து 50கிமீ தொலைவில் உள்ளது. இங்கு இந்திய தென்னக ரயில்வேயின் கோட்டம் ஒன்று அமைந்துள்ளது. பாரதப்புழா ஆறு இந்நகரின் வழியே செல்லுகிறது. சேலத்தை கன்னியாகுமரியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியே செல்லுகிறது.
சுற்றுலா இடங்கள்
பாலக்காட்டுக் கோட்டை
பாலக்காட்டுக் கோட்டை இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு நகர மத்தியில் அமைந்துள்ளது. கருங்கல்லால் ஆன இக் கோட்டை 1766 ஆம் ஆண்டில் ஹைதர் அலியால் கட்டப்பட்டது. கேரளாவிலுள்ள கோட்டைகளில் நல்ல நிலையிலுள்ள கோட்டைகளில் ஒன்றாக இது விளங்குகிறது.

பாலக்காட்டுக் கோட்டை மிகப் பழைய காலத்திலேயே இருந்ததாகக் கருதப்பட்டாலும், இதன் பழைய வரலாறு பற்றி எதுவும் தெரியவரவில்லை. பாலக்காடு அச்சன் எனும் இப் பகுதியின் உள்ளூர் ஆட்சியாளர் தொடக்கத்தில் கோழிக்கோட்டு அரசின் சிற்றரசராக இருந்தார். எனினும் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கு முன்னரே இவர் சுதந்திரமாக இயங்கத் தொடங்கினார். 1757 இல் இப்பகுதிமீது கோழிக்கோட்டு அரசு ஆக்கிரமிப்பு நடத்த இருந்த நிலையில், இவர் உதவி கேட்டு ஹைதர் அலிக்குத் தூது அனுப்பினார். பாடக்காடைத் தன் வசம் எடுத்துக் கொள்வதற்காக இச் சந்தர்ப்பத்தை ஹைதர் அலி பயன்படுத்திக்கொண்டான். அப்போதிருந்து 1790 வரை இப் பகுதி மைசூர் சுல்தான்களிடம் அல்லது பிரித்தானியரிடம் இருந்து வந்தது. 1768 இல் முதன்முதலாக பிரித்தானியர் இதனை ஹைதர் அலியிடம் இருந்து கைப்பற்றினர். எனினும் சில மாதங்களில் ஹைதர் அதனை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான் ஆயினும், கர்னல் ஃபுல்லார்ட்டன் அதனை 1783 இல் மீண்டும் தம்வசப்படுத்தினான். அடுத்த ஆண்டிலேயே இக் கோட்டை கைவிடப்படவே அதனை கோழிக்கோட்டுப் படைகள் கைப்பற்றிக் கொண்டன. 1790 ஆம் ஆண்டில் பிரித்தானியப் படைகள் அதனை இறுதியாகக் கைப்பற்றின. இக் கோட்டை திருத்தம் செய்யப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகப் பயன்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இக் கோட்டையில் படைகள் நிலைகொண்டிருந்தன. 1900களின் முற்பகுதியில் இக் கோட்டை தாலுகா அலுவலமாக மாற்றப்பட்டது. இக் கோட்டை ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தானின் பெயரைத் தழுவி திப்பு கோட்டை என்றும் அழைக்கப்படுவது உண்டு.
மலம்புழா அணை
மலம்புழா அணை தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே அமைந்துள்ள பெரும் நீர்த்தேக்கமாகும். இதன் பின்னணியில் இயற்கை அழகுமிகுந்த மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. 1849 மீ. நீளம் கொண்ட கட்டப்பட்ட அணைப்பகுதியும் 220 மீ. நீள மண்ணாலான கரைப்பகுதியும் கொண்டது. கேரளத்தின் இரண்டாம் மிக நீளமான ஆறான பாரதப்புழாவின் துணையாறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் உயரம் 6,066 அடியாகும். இது இரு கால்வாய்கள் அமைப்பையும் 42,090 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நீர்த்தேக்கத்தையும் உள்ளடக்கியுள்ளது.

1949ஆம் ஆண்டுத் துவங்கிய கட்டுமானப்பணிகள் 1955ஆம் ஆண்டில் முடிவடைந்தன. இதன் மொத்த நீர்ப்பிடிப்புப் பரப்பு 145 சதுரக் கிலோமீட்டர்களாகும். நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 8000 சதுர மீட்டர்களாகும். கால்வாய்கள் மூலம் வேளாண்மை ஆயக்கட்டுகள் பயன்பெறுகின்றன. நீர்த்தேக்கத்திலிருந்து பாலக்காடு நகருக்கான குடிநீர் வழங்கப்படுகிறது. மலம்புழா அணை சிறந்த சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இந்த அணை 28.5 ஏக்கர் பரப்பளவில் மலம்புழாத் தோட்டம் என்னும் கண்கவர் தோட்டத்தையும், இழுவை வண்டியையும் (Ropeway), குழந்தைகள் பூங்காவையும் கொண்டுள்ளது. இந்த அணைக்கு அருகில் பல பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. அணைக்கு மிக அருகில் மீன் வளர்ப்புத் தொட்டியும் (Aquarium), பாம்புப் பூங்காவையும் கொண்டுள்ளது. இங்கு மலைப்பாம்பு , நாகப்பாம்பு, விரியன் பாம்பு உட்படப் பலவகைப் பாம்புகள் உள்ளன.மேலும் ஜப்பானீஸ் பூங்கா, பாறைப் பூங்காவையும் (Rock Garden) அருகில் கொண்டுள்ளது
பரம்பிக்குளம்
அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப்பூங்கா
நெல்லியம்பதி
விக்டோரியா அரசினர் கல்லூரி -1887 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட, கேரளத்தின் பழைமையானக் கல்லூரி