கூடுதுறை
கூடுதுறை

கூடுதுறை (Kooduthurai), அல்லது முக்கூடல் (Mukkoodal)இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோட்டிற்கு அருகில் பவானி என்ற இடத்தில்  அமைந்துள்ள புனிதமான இடமாகும்.

இந்த இடமானது காவிரி ஆறு, பவானி ஆறு மற்றும் மாயநிலையிலான அமுதா ஆறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. கூடுதுறையின் கரையில் பவானி சங்கமேசுவரர் கோயில் அமைந்துள்ளது.இந்த ஆற்றின் பெயரானது தமிழில் 'கூடு' என்ற சொல்லிலிருந்தும் (பொருள்: இணைதல்) 'துறை' என்ற சொல்லிலிருந்தும் (பொருள்: ஆற்றுப்படுகை) உருவாகியுள்ளது.

பவானி சங்கமேசுவரர் கோயில்

பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோவிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். (சங்கமம்-கூடுதல்). பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம்.

1804 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் கலெக்டராக இருந்த வில்லியம் காரோ ஆபத்து வேளையில் தன்னுயிரைக் காப்பாற்றியதற்காக, இக்கோவில் அம்மனுக்குக் காணிக்கையாக அளித்த தந்தக் கட்டில் ஒன்று இங்கு உள்ளது. அதில் அவரது கையொப்பமும் உள்ளது. இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன. அவர்களது பாடல்களில் இவ்விடம் ’திருநாணா’ என்று குறிக்கப்பட்டுள்ளது.