சுருளி அருவி
சுருளி அருவி தமிழ்நாடு, தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும், கம்பம் நகரிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு சுற்றுலாத்தலம்.
40 அடி உயரம் உள்ள இவ்வருவியில் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் நீர்ப் போக்குவரத்து அதிகமாய் இருப்பதால் அப்போது நிறைய மக்களைக் காணலாம். இங்குள்ள சுருளியாண்டவர் கோயில் புகழ்பெற்றது. சிலப்பதிகாரத்தில் இவ்வருவி குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கீழ்ச் சுருளி, மேல்ச்சுருளி என இரு இடங்கள் உள்ளன.
சுருளி வேலப்பர் கோயில்
இங்கு சுருளிவேலப்பர் கோவிலும் கைலாய குகையும் உள்ளன. இங்குள்ள கைலாய குகையில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு இமயகிரிச் சித்தர் என்பவர் தவமியற்றியதாகவும் கூறப்படுகிறது. மேற்கு தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் இந்த இடம் இந்துக்களின் புனிதத்தலமாகவும் கருதப்படுகிறது.மிகவும் பழமையான மரங்கள் காலத்தின் மாறுதலால் படிவங்களாக உருமாறி உள்ளது
இந்த மலைக்குகைகளில் இந்து சமயக் கடவுள்களாகக் கருதப்படும் முப்பத்து முக்கோடி தேவர்களும், எண்பத்து மூன்றாயிரம் ரிஷிகளும் தங்கியிருந்ததாகக் கருதப்படும் கயிலாய மலைக் குகை இருப்பதால் இங்கு புண்ணியாதானம் செய்யப்படும் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய அவர்கள் உதவுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இதனால் சுருளி நீர் வீழ்ச்சியின் அடிவாரப் பகுதியில் இறந்தவர்களுக்கான இறுதிக்கடன்களில் ஒன்றான புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகிறது.
கோடிலிங்கம்
சுருளி நீர்வீழ்ச்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுருளி மலைச் சாரலில் உள்ளது கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில். தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலம் நிறுவப்பட்டுள்ள இந்தக் கோயிலில் கோடி லிங்கம் வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சிறியதும் பெரியதுமாக சுமார் ஆயிரம் லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் மேலும் பல லிங்கங்கள் வைக்க ஆன்மீக அன்பர்களை வேண்டி விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
திராட்சைத் தோட்டங்கள்
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியான சுருளி மலைச் சாரல் பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் திராட்சைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் திராட்சை பழங்கள் தமிழ்நாடு தவிர அருகிலுள்ள கேரளா , கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.